பகுதி 8: வனாந்தரத்தில் அலைந்து திரிதல்

முதலாம் பயணம்: ராமசேஸிலிருந்து சுக்கோத்துக்கு

கி.மு. 1491

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எண்ணாகமம் 33:1–5

1 மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் இராணுவங்களின்படி எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுடைய பயணங்களின் விபரம்: 2 மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன: 3 முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர்கள் எல்லோரும் பார்க்க, இஸ்ரவேல் மக்கள் பலத்தகையுடன் புறப்பட்டார்கள். 4 அப்பொழுது எகிப்தியர்கள் யெகோவா தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் யெகோவா நீதிசெலுத்தினார். 5 பின்பு இஸ்ரவேல் மக்கள் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே முகாமிட்டார்கள்.

யாத்திராகமம் 12:37–39

37 இஸ்ரவேலர்கள் ராமசேசைவிட்டுக் கால்நடையாகப் பயணம்செய்து, சுக்கோத்திற்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் ஆண்களாக இருந்தார்கள். 38 அவர்களுடன் கூடப் பல இஸ்ரவேலர்கள் அல்லாத மக்கள் அநேகர் போனதுமட்டுமல்லால், திரளான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போனது. 39 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லாத அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் இருக்கமுடியாதபடி துரத்திவிடப்பட்டதால், அது புளிக்காமல் இருந்தது; அவர்கள் தங்களுடைய பயணத்திற்கென்று ஒன்றும் ஆயத்தம்செய்யவில்லை.

பஸ்காவை ஆசரிக்கும் கட்டளை புதுப்பிக்கப்படுதல்

யாத்திராகமம் 12:43–13:19

43 மேலும், யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “பஸ்காவின் கட்டளையாவது, அந்நியனில் ஒருவனும் அதை சாப்பிடவேண்டாம். 44 பணத்தினால் வாங்கப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் செய்தபின்பு, அவன் அதைச் சாப்பிடலாம். 45 அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம். 46 அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சாப்பிடவேண்டும்; அந்த இறைச்சியில் கொஞ்சம்கூட வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. 47 இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் அதை அனுசரிக்கவேண்டும். 48 அந்நியன் ஒருவன் உன்னிடம் தங்கி, யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் எல்லோரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை அனுசரிக்கவேண்டும்; அவன் சொந்த தேசத்தில் பிறந்தவனாக இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் சாப்பிடவேண்டாம். 49 சொந்த தேசத்தில் பிறந்தவனுக்கும் உங்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கட்டும்” என்றார். 50 இப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 51 அன்றைக்கே யெகோவா இஸ்ரவேலை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார்.

13:1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்றார்.

3 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; யெகோவா பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம். 4 ஆபீப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். 5 ஆகையால், யெகோவா உனக்குக் கொடுப்பேன் என்று உன்னுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்திற்கு உன்னை வரச்செய்யும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையை செய்வாயாக. 6 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடவேண்டும்; ஏழாம்நாளிலே யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கப்படவேண்டும். 7 அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். 8 அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, யெகோவா எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். 9 யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; 10 ஆகையால், நீ வருடந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை அனுசரித்து வரவும்.

11 மேலும், “யெகோவா உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது, 12 கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் யெகோவாவுடையவைகள். 13 கழுதையின் முதற்பிறப்பையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை உடைத்துப்போடு. உன்னுடைய பிள்ளைகளில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள். 14 பிற்காலத்தில் உன்னுடைய மகன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: யெகோவா எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். 15 எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, யெகோவா எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் யெகோவாவுக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். 16 யெகோவா எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்வதற்கு, இது உன்னுடைய கையில் அடையாளமாகவும், உன்னுடைய கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருப்பதாக என்று சொல்வாயாக” என்றான்.

17 பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்திற்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல், 18 செங்கடலின் வனாந்திர வழியாக மக்களைச் சுற்றிப் போகச்செய்தார். இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து கோத்திரம் கோத்திரமாக புறப்பட்டுப்போனார்கள். 19 மோசே தன்னோடு யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாக உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களுடன் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேலர்களை உறுதியாக ஆணையிடும்படிச் செய்திருந்தான்.