மக்களின் முதல் கூட்டம்

கி.மு. 1015

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 நாளாகமம் 23:1

1 தாவீது வயது சென்றவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன்னுடைய மகனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.

1 நாளாகமம் 28:1–10

1 கோத்திரங்களின் தலைவர்களும், ராஜாவுக்கு பணிவிடை செய்கிற வகுப்புகளின் தலைவர்களும், ஆயிரம்பேர்களுக்கு தலைவர்களும், நூறுபேர்களுக்கு தலைவர்களும், ராஜாவுக்கும் ராஜாவின் மகன்களுக்கும் உண்டான எல்லா சொத்தையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவர்களுமாகிய இஸ்ரவேலின் எல்லா பிரபுக்களையும், முதன்மையானவர்களையும், பெலசாலிகளையும், எல்லா பெலசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான். 2 அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்து காலூன்றி நின்று: என்னுடைய சகோதரர்களே, என்னுடைய மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதப்படியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என்னுடைய மனதிலே நினைத்து, கட்டுவதற்கு ஆயத்தமும் செய்தேன். 3 ஆனாலும் தேவன்: நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனிதனாக இருந்து, ரத்தத்தை சிந்தினாய் என்றார். 4 இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாக இருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா என்னுடைய தகப்பனுடைய வீட்டார்களில் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் என்னுடைய தகப்பன் குடும்பத்தையும் தலைமையாகத் தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என்னுடைய தகப்பனுடைய மகன்களுக்குள் என்மேல் பிரியம் வைத்தார். 5 யெகோவா எனக்கு அநேக மகன்களைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் யெகோவாவுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு, அவர் என்னுடைய எல்லா மகன்களிலும் என்னுடைய மகனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு, 6 அவர் என்னை நோக்கி: உன்னுடைய மகனாகிய சாலொமோனே என்னுடைய ஆலயத்தையும் என்னுடைய முற்றங்களையும் கட்டுவானாக; அவனை எனக்கு மகனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன். 7 இந்தநாளில் நடக்கிறபடியே அவன் என்னுடைய கற்பனைகளின்படியும் என்னுடைய நியாயங்களின்படியும் செய்ய உறுதியாக இருப்பானானால், அவனுடைய ராஜ்ஜியபாரத்தை என்றென்றைக்கும் உறுதிப்படுத்துவேன் என்றார். 8 இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாக அனுபவித்து, உங்களுக்குப் பிறகு அதை உங்களுடைய பிள்ளைகளுக்குச் சுதந்திரமாக வைக்கும்படி, நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று யெகோவாவின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 9 என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார். 10 இப்போதும் எச்சரிக்கையாக இரு; பரிசுத்த இடமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் யெகோவா உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடத்து என்று சொன்னான்.

சங்கீதங்கள் 91

1 உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன்

சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

2 நான் யெகோவாவை நோக்கி:

நீர் என்னுடைய அடைக்கலம்,

என்னுடைய கோட்டை, என் தேவன்,

நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும்,

பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.

4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்;

அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்;

அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.

5 இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும்,

6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்,

மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய்.

7 உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும்,

உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும்,

அது உன்னை அணுகாது.

8 உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.

9 எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை

உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.

10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது,

வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.

11 உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,

உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

12 உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு

அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.

13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து,

பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்;

என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால்

அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்,

நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்;

ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து,

அவனைக் கனப்படுத்துவேன்.

16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி,

என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

அநேகமாகத் தாவீதின் வாழ்வின் பிற்பகுதியைச் சேர்ந்த ஒரு சங்கீதம்

சங்கீதங்கள் 145

தாவீதின் நன்றிப்பாடல்.

1 ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி,

உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.

2 நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி,

எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.

3 யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்;

அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.

4 தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி,

உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.

5 உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும்,

உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.

6 மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்;

உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.

7 அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி,

உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.

8 யெகோவா இரக்கமும் மன உருக்கமும்,

நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

9 யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்;

அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது.

10 யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்;

உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள்.

11 மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும்,

உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;

12 உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து,

உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.

13 உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம்,

உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.

14 யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி,

மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.

15 எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது;

ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.

16 நீர் உமது கையைத் திறந்து,

எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

17 யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும்,

தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார்.

18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும்,

உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும்,

யெகோவா அருகில் இருக்கிறார்.

19 அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து,

அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு,

அவர்களைப் பாதுகாக்கிறார்.

20 யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி,

துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.

21 என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக;

மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை

எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.