யோசியாவின் மரணம்

கி.மு. 610

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 நாளாகமம் 35:20–24

20 யோசியா தேவாலயத்திற்குரியவைகளை ஒழுங்குபடுத்தின இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐப்பிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் போர் செய்யவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாக போர்செய்யப் புறப்பட்டான். 21 அவன் இவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாக அல்ல, என்னோடு போர்செய்கிற ஒருவனுக்கு விரோதமாகப் போகிறேன்; நான் விரைவாக செயல்படவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காமலிருக்க அவருக்கு எதிராகச் செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான். 22 ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடு போர்செய்ய மாறுவேடமிட்டு, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே போர்செய்கிறதற்கு வந்தான். 23 வில்வீரர்கள் யோசியா ராஜாவின்மேல் அம்பு எய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரர்களை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான். 24 அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அந்த இரதத்தின்மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.

2 இராஜாக்கள் 23:25–27

25 யெகோவாவிடத்திற்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போன்ற ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை. 26 ஆகிலும், மனாசே யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்: 27 நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டதுபோல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொன்னார்.

2 நாளாகமம் 35:25–27

25 எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகர்களும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவைக்குறித்துப் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழக்கமாக இருக்கிறது; அவைகள் புலம்பலின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 26 யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கு ஏற்ற அவன் செய்த நன்மைகளும், 27 அவனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்களும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 நாளாகமம் 34:1–2

1 யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 2 அவன் யெகோவாவுடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.

2 இராஜாக்கள் 22:3–23:3

3 ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருட ஆட்சியிலே, ராஜா மெசுல்லாமின் மகனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனைக் யெகோவாவின் ஆலயத்திற்கு அனுப்பி: 4 நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், யெகோவவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல் காக்கிறவர்கள் மக்களின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து, 5 பின்பு அவர்கள் அதைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களின் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் யெகோவாவின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரர்களாகிய, 6 தச்சர்களுக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொல்லர்களுக்கும், ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும். 7 ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாக நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான். 8 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா எழுத்தனாகிய சாப்பானை நோக்கி: நான் யெகோவாவின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான். 9 அப்பொழுது சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவிற்கு மறுஉத்திரவு சொல்லி, ஆலயத்திலே தொகையிட்டுக் கிடைத்த பணத்தை உமது அடியார்கள் சேர்த்துக் கட்டி, அதைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களின் கையிலே கொடுத்தார்கள் என்று சொன்னான். 10 எழுத்தனாகிய சாப்பான் மேலும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவிற்கு முன்பாக வாசித்தான். 11 ராஜா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, 12 ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் மகனாகிய அக்போருக்கும், எழுத்தனாகிய சாப்பானுக்கும், ராஜாவின் வேலைக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது: 13 கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளுக்காக நீங்கள் போய், எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா அனைத்திற்காகவும் யெகோவாவிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய முன்னோர்கள் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்காததால், நம்மேல் பற்றியெரிந்த யெகோவவுடைய கடுங்கோபம் பெரியது என்றான். 14 அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் மகனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் ஆசாரிய ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனின் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். 15 அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்திற்கு அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவ உரைக்கிறது என்னவென்றால்: 16 இதோ, யூதாவின் ராஜா, வாசித்த புத்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் எழுதப்பட்டிருக்கிற பொல்லாப்பை நான் இந்த இடத்தின்மேலும், அதின் குடிமக்களின்மேலும் வரச்செய்வேன். 17 அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபம்காட்டினதால், என் கடுங்கோபம் இந்த இடத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று யெகோவ சொல்லுகிறார் என்று சொல்லுங்கள். 18 யெகோவவிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீர் கேட்ட வார்த்தைகளைக் குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: 19 நான் இந்த இடத்திற்கும் அதின் குடிமக்களுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ யெகோவாவுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுததால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். 20 ஆகையால், இதோ, நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேர்த்துக்கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த இடத்தின்மேல் வரச்செய்யும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று யெகோவ சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறுஉத்திரவை அவர்கள் போய் ராஜாவிற்குச் சொன்னார்கள்.

23:1 அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பர்களையெல்லாம் வரவழைத்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது, 2 ராஜாவும், அவனோடு யூதாவின் மனிதர்கள் யாவரும் எருசலேமின் குடிமக்கள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள அனைவரும் யெகோவாவின் ஆலயத்திற்குப் போனார்கள்; யெகோவாவுடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். 3 அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, யெகோவாவைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் யெகோவாவுடைய சந்நிதியில் உடன்படிக்கை செய்தான்; மக்கள் எல்லோரும் உடன்படிக்கைக்கு உடன்பட்டார்கள்.

2 இராஜாக்கள் 23:22–24

22 இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் துவங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா அனுசரிக்கப்படவில்லை. 23 ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருட ஆட்சியிலே யெகோவாவுக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே அனுசரிக்கப்பட்டது. 24 ஆசாரியனாகிய இல்க்கியா யெகோவாவுடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா ஜோதிடர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், சிலைகளையும் அருவருப்பான சிலைகளையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான்.

2 இராஜாக்கள் 23:28–30

28 யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 29 அவனுடைய நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவிற்கு விரோதமாக ஐப்பிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான். 30 மரணமடைந்த அவனை அவனுடைய வேலைக்காரர்கள் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; அப்பொழுது தேசத்தின் மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்செய்து, அவன் தகப்பனுடைய இடத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.