யோர்தானைக் கடந்து செல்லுதல்
கி.மு. 1451
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
10 அப்பொழுது யோசுவா மக்களின் தலைவர்களை நோக்கி: 11 நீங்கள் முகாமிற்குள்ளே நடந்துபோய், மக்களைப் பார்த்து: “உங்களுக்கு உணவுப் பொருட்களை ஆயத்தம் செய்யுங்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சுதந்தரித்துக்கொள்வதற்காகக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாட்களுக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள்” என்று சொல்லச்சொன்னான். 12 பின்பு யோசுவா; ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களையும் நோக்கி: 13 யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; “உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களை இளைப்பாறச்செய்து, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே. 14 உங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர்கள் எல்லோரும் உங்களுடைய சகோதரர்களுக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய், 15 யெகோவா உங்களைப்போல உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, அவர்களும் உங்களுடைய தேவனாகிய யெகோவா தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரை, அவர்களுக்கு உதவிசெய்வீர்களாக; பின்பு நீங்கள் யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்களுடைய சொந்தமான தேசத்திற்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக” என்றான். 16 அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடங்களுக்கெல்லாம் போவோம். 17 நாங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்ததுபோல உமக்கும் கீழ்ப்படிவோம்; உம்முடைய தேவனாகிய யெகோவா மட்டும் மோசேயோடு இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக. 18 நீர் எங்களுக்குக் கட்டளையிடும் எல்லா காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேட்காமல், உம்முடைய கட்டளைக்கு எதிராக முரட்டாட்டம் செய்கிற எவனும் கொலை செய்யப்படக்கடவன்; பெலன்கொண்டு திடமனதாக மட்டும் இரும் என்றார்கள்.
1 அதிகாலையிலே யோசுவா எழுந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் சித்தீமிலிருந்து பயணம்செய்து, யோர்தான்வரைக்கும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இரவு தங்கினார்கள். 2 மூன்றுநாட்களானபின்பு, அதிகாரிகள் முகாமின் நடுவே போய், 3 மக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியர்களாகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்களுடைய இடத்தைவிட்டுப் பயணம்செய்து, அதைப் பின்பற்றிச்செல்லுங்கள். 4 உங்களுக்கும் அதற்கும் 3,000 அடிகள் தூரம் இடைவெளி இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படி, அதற்கு அருகில் வராமலிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாக நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள். 5 யோசுவா மக்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; நாளைக்குக் யெகோவா உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். 6 பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன்னே போனார்கள். 7 யெகோவா யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவதற்கு, இன்று அவர்களுடைய கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். 8 உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தான் நதியில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். 9 யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் இங்கே வந்து, உங்களுடைய தேவனாகிய யெகோவாடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். 10 பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியர்களையும், ஏத்தியர்களையும், ஏவியர்களையும், பெரிசியர்களையும், கிர்காசியர்களையும், எமோரியர்களையும், எபூசியர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: 11 இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. 12 இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். 13 சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய யெகோவாவின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். 14 மக்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை மக்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்வரைக்கும் வந்தார்கள். 15 யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, 16 மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; சவக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள். 17 எல்லா மக்களும் யோர்தான் நதியைக் கடந்துபோகும்வரைக்கும், யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.
4:1 மக்கள் எல்லோரும் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, யெகோவா யோசுவாவை நோக்கி: 2 நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக மக்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, 3 இங்கே யோர்தான் நதியின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாக நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் இடத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார். 4 அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் மக்களில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து, 5 அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தான் நதியின் நடுவில் உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாக இருக்கும்படிக்கு, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக, உங்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோங்கள். 6 நாளை இந்தக் கற்கள் என்னவென்று உங்களுடைய பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, 7 நீங்கள்: யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தான் நதியைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனது; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் மக்களுக்கு என்றென்றைக்கும் நினைவூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான். 8 யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, யெகோவா யோசுவாவிடம் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பன்னிரண்டு கற்களை யோர்தான் நதியின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், அவர்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள். 9 யோர்தான் நதியின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்களின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது. 10 மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் மக்களுக்குச் சொல்லும்படி, யெகோவா யோசுவாவுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்து முடிக்கும்வரைக்கும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவே நின்றார்கள்; மக்கள் வேகமாகக் கடந்துபோனார்கள். 11 மக்களெல்லோரும் கடந்துபோனபின்பு, யெகோவாவுடைய பெட்டியும் கடந்துபோனது; ஆசாரியர்கள் மக்களுக்கு முன்பாகப் போனார்கள். 12 ரூபன் கோத்திரத்தார்களும் காத் கோத்திரத்தார்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாக இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகக் கடந்துபோனார்கள். 13 ஏறக்குறைய 40,000 பேர் யுத்தத்திற்காக பயிற்சிபெற்றவர்களாக யுத்தம்செய்ய, யெகோவாவுக்கு முன்பாக எரிகோவின் சமவெளிகளுக்குக் கடந்துபோனார்கள். 14 அந்த நாளிலே யெகோவா யோசுவாவை எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, யோசுவாவிற்கும், அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் பயந்திருந்தார்கள். 15 யெகோவா யோசுவாவை நோக்கி: 16 சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நதியிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார். 17 யோசுவா: யோர்தான் நதியிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான். 18 அப்பொழுது யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நதியின் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்திற்குத் திரும்பி, முன்புபோல அதின் கரையெங்கும் புரண்டோடியது. 19 இந்தவிதமாக முதலாம் மாதம் பத்தாம் தேதியிலே மக்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கிழக்கு எல்லையான கில்காலிலே முகாமிட்டார்கள். 20 அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக்கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி, 21 இஸ்ரவேல் மக்களை நோக்கி: நாளை உங்களுடைய பிள்ளைகள் இந்தக் கற்கள் என்னவென்று தங்களுடைய தகப்பன்மார்களைக் கேட்கும்போது, 22 நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் வெட்டாந்தரை வழியாக இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள். 23 பூமியின் எல்லா மக்களும் யெகோவாவுடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் எல்லா நாட்களும் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படும்படிக்கும், 24 உங்களுடைய தேவனாகிய யெகோவா சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்துபோகும்வரைக்கும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய யெகோவா யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்துபோகும்வரைக்கும் வற்றிப்போகச்செய்தார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.