சடங்கு நியாயப்பிரமாணமும் ஆசரிப்புக்கூடாரத்தின் வடிவமைப்பும் (continued)
சடங்கு நியாயப்பிரமாணம் அறிவிக்கப்படுகிறது; ஆசரிப்புக்கூடாரத்தின் கட்டமைப்பு கொடுக்கப்படுகிறது.
கி.மு. 1491
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 “மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் ஆசரிப்பு கூடாரத்தை உண்டாக்கு; அவைகளில் விசித்திர பின்னல்வேலையாகக் கேருபீன்களைச் செய். 2 ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நான்கு முழ அகலமுமாக இருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருக்கவேண்டும். 3 ஐந்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும். 4 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டாக்கு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரைகளின் ஓரத்திலும் அப்படியே செய். 5 காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கு. 6 ஐம்பது பொன் கொக்கிகளை செய்து, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைக்கப்படவேண்டும். அப்பொழுது ஆசரிப்பு கூடாரம் ஒன்றாகும். 7 “ஆசரிப்பு கூடாரத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டு ரோமத்தால் பதினொரு மூடுதிரைகளை உண்டாக்கு. 8 ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும், நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும். 9 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடவேண்டும். 10 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி, 11 ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடவேண்டும். 12 கூடாரத்தின் மூடுதிரைகளில் மீதமான பாதிமூடுதிரை ஆசரிப்பு கூடாரத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும். 13 கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்தில் மீதியானதில், இந்தப்பக்கத்தில் ஒரு முழமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழமும் ஆசரிப்பு கூடாரத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும். 14 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத் தோலால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் மெல்லிய தோலால் ஒரு மூடியையும் உண்டாக்கவேண்டும்.
15 “ஆசரிப்பு கூடாரத்திற்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும். 16 ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும். 17 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இரண்டு பொருந்தும் முனை இருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரங்களில் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்யவேண்டும். 18 ஆசரிப்புக் கூடாரத்திற்காக செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகைகள் தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கட்டும். 19 அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். 20 ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும், 21 அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். 22 ஆசரிப்பு கூடாரத்தின் மேற்குப்பக்கத்திற்கு ஆறு பலகைகளையும், 23 ஆசரிப்பு கூடாரத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டாக்கவேண்டும். 24 அவைகள் கீழே சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்கு ஆகும். 25 அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும். 26 “சீத்திம் மரத்தால் ஆசரிப்பு கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், 27 ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், ஆசரிப்பு கூடாரத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய். 28 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் ஊடுருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும். 29 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் செய்து, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடவேண்டும். 30 இப்படியாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி ஆசரிப்பு கூடாரத்தை அமைக்கவேண்டும்.
31 “இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு மூடுதிரையைச் செய்யவேண்டும்; அதிலே வேலைப்பாடு செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும். 32 சீத்திம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நான்கு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நான்கு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும். 33 கொக்கிகளின்கீழே அந்த மூடுதிரையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே மூடுதிரைக்குள்ளாக வைக்கவேண்டும்; அந்த மூடுதிரை பரிசுத்த இடத்திற்கும் மகா பரிசுத்த இடத்திற்கும் பிரிவை உண்டாக்கும். 34 மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வைப்பாயாக; 35 மூடுதிரைக்கு வெளியே மேஜையையும், மேஜைக்கு எதிரே ஆசரிப்பு கூடாரத்தின் தென்பக்கமாகக் குத்துவிளக்கை வைத்து, மேஜையை வடபக்கமாக வைப்பாயாக. 36 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்கு திரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி, 37 அந்தத் தொங்கு திரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்க்கவேண்டும்.
27:1 “ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டாக்கவேண்டும்; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாக இருப்பதாக. 2 அதின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளை உண்டாக்கவேண்டும்; அதின் கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும். 3 அதின் சாம்பலை எடுக்கத்தகுந்த சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணங்களையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்கவேண்டும்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தால் செய்வாயாக. 4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைச் செய்து, அந்தச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை உண்டாக்கி, 5 அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும். 6 பலிபீடத்திற்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும். 7 பலிபீடத்தைச் சுமக்கும்படி அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே மாட்டப்பட்டிருக்கவேண்டும். 8 அதை உள்ளே மற்றும் வெளியேவிட்டுப் பலகைகளினாலே செய்யவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதைச் செய்யவேண்டும்.
9 “ஆசரிப்பு கூடாரத்திற்கு பிராகாரத்தையும் உண்டாக்கவேண்டும்; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும். 10 அவைகளுக்கு வெண்கலத்தினால் இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும். 11 அப்படியே வடக்கு பக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும். 12 பிராகாரத்தின் மேற்கு பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும். 13 சூரியன் உதிக்கிற திசையாகிய கிழக்குப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ அகலமாக இருக்கவேண்டும். 14 அங்கே ஒரு பக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். 15 மறுபக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். 16 பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாகச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நான்கு தூண்களும், அவைகளுக்கு நான்கு பாதங்களும் இருக்கவேண்டும். 17 சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும். 18 பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும். 19 ஆசரிப்பு கூடாரத்தின் எல்லா பணிகளுக்குத் தேவையான எல்லா பணிப்பொருட்களும், அதின் எல்லா ஆப்புகளும், பிராகாரத்தின் எல்லா ஆப்புகளும் வெண்கலமாக இருக்கவேண்டும்.
20 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிடு. 21 கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைக்கு வெளியே ஆரோனும் அவனுடைய மகன்களும் மாலை துவங்கி அதிகாலைவரை யெகோவாவுடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கவேண்டும்; இது இஸ்ரவேலர்களின் தேசத்திற்கு தலைமுறை தலைமுறையாக நிரந்தர கட்டளையாக இருக்கட்டும்.