ஆயீயைக் கைப்பற்றுதல்
கி.மு. 1451
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 இஸ்ரவேல் மக்கள் சபிக்கப்பட்டவைகளினாலே துரோகம் செய்தார்கள்; எப்படியென்றால், யூதாகோத்திரத்தின் சேராகுடைய மகனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சபிக்கப்பட்டவைகளிலே சிலவற்றை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின்மீது யெகோவாவுடைய கோபம் மூண்டது. 2 யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயீ பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயீயை வேவுபார்த்து, 3 யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயீயை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள். 4 அப்படியே மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயீயின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள். 5 ஆயீயின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது. 6 அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள். 7 யோசுவா: ஆ, யெகோவாவாகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா இந்த மக்களை யோர்தான் நதியைக் கடக்கச்செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் மனதிருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாக இருக்கும். 8 ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன். 9 கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான். 10 அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன? 11 இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சபிக்கப்பட்டவைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டதும், திருடியதும், ஏமாற்றியதும், தங்களுடைய பொருட்களுக்குள்ளே வைத்ததும் உண்டே. 12 ஆகவே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியாமல், தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சபிக்கப்பட்டவர்களானார்கள்; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அழிக்காவிட்டால், இனி உங்களோடு இருக்கமாட்டேன். 13 எழுந்திரு, நீ மக்களைப் பரிசுத்தம்செய்யச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்திற்கு உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களே, சபிக்கப்பட்டவைகள் உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அகற்றாமலிருக்கும்வரை, நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். 14 காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது யெகோவா குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல். 15 அப்பொழுது சபிக்கப்பட்டவைகளை எடுத்தவனாகக் கண்டுபிடிக்கப்படுகிறவன், யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குண்டான அனைத்தும் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றார். 16 யோசுவா அதிகாலையில் எழுந்திருந்து, இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்தான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. 17 அவன் யூதாவின் வம்சங்களை வரச்செய்தபோது, சேராகியர்களின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியர்களின் வம்சத்தைப் பேர்பேராக வரச்செய்தபோது, சப்தி குறிக்கப்பட்டான். 18 அவனுடைய வீட்டாரை அவன் பேர்பேராக வரச்செய்தபோது, யூதா கோத்திரத்தின் சேராகின் மகனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். 19 அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைசெய்து, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு மறைக்காதே என்றான். 20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு மறுமொழியாக: உண்மையாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்; இன்னின்ன விதமாகச் செய்தேன். 21 கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளிச் சேக்கலையும், 550 கிராம் நிறையுள்ள ஒரு தங்கக் கட்டியையும் நான் கண்டு, அவைகளை ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் நடுவில் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளி அதற்கு அடியில் இருக்கிறது என்றான். 22 உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்திற்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைக்கப்பட்டிருந்தது, வெள்ளியும் அதின் கீழ் இருந்தது. 23 அவைகளைக் கூடாரத்தின் நடுவிலிருந்து எடுத்து, யோசுவாவிடமும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடமும் கொண்டுவந்து, யெகோவாவுடைய சமூகத்தில் வைத்தார்கள். 24 அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் சேராகின் மகனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் கட்டியையும், அவனுடைய மகன்களையும், மகள்களையும், அவனுடைய மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவனுடைய கூடாரத்தையும், அவனுக்குண்டான அனைத்தையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோனார்கள். 25 அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கச்செய்தது என்ன? இன்று யெகோவா உன்னைக் கலங்கச்செய்வார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; 26 அவன்மேல் இந்தநாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே யெகோவா தமது கடுங்கோபத்தைவிட்டு மாறினார்; ஆகவே அந்த இடம் இந்தநாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.
8:1 அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த மக்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயீ பட்டணம்வரைக்கும் போ, இதோ, ஆயீயின் ராஜாவையும். அவனுடைய மக்களையும் அவனுடைய பட்டணத்தையும் அவனுடைய நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். 2 நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயீக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்டப் பொருட்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்திற்குப் பின்புறத்திலே இரகசியப்படையை வை என்றார். 3 அப்பொழுது ஆயீயின் மீது படையெடுத்துப் போக, யோசுவாவும் எல்லா யுத்தமனிதர்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரர்களான முப்பதாயிரம்பேரைத் தேர்ந்தெடுத்து, இரவிலே அவர்களை அனுப்பி, 4 அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: நீங்கள் பட்டணத்தின் பின்புறத்திலே ஒளிந்திருக்கவேண்டும்; பட்டணத்தைவிட்டு வெகுதூரம் போகாமல், எல்லோரும் ஆயத்தமாக இருங்கள். 5 நானும் என்னோடு இருக்கிற எல்லா மக்களும் பட்டணத்திற்கு அருகில் நெருங்கி வருவோம்; அவர்கள் முன்புபோல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம். 6 அப்பொழுது அவர்கள்; முன்பு போலவே நமக்கு முன்பாக தோற்று ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு வெளியே வரப்பண்ணும்வரைக்கும், அவர்களுக்கு முன்பாக ஓடுவோம். 7 அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார். 8 நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; யெகோவாவுடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி, 9 அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே, ஆயீக்கு மேற்கில் ஒளிந்திருந்தார்கள்; யோசுவா அன்று இரவு மக்களுடன் தங்கினான். 10 அதிகாலையில் யோசுவா எழுந்திருந்து, மக்களை எண்ணிப்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பர்களோடு மக்களுக்கு முன்பே நடந்து, ஆயீயின் மேல் படையெடுத்தான். 11 அவனோடு இருந்த யுத்த மக்கள் எல்லோரும் நடந்து, பட்டணத்திற்கு அருகே வந்துசேர்ந்து, ஆயீக்கு வடக்கே முகாமிட்டார்கள்; அவர்களுக்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. 12 அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களை பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே பட்டணத்திற்குமேலே இரகசியப்படையாக வைத்தான். 13 பட்டணத்திற்கு வடக்கே இருந்த எல்லா சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே ஒளிந்திருக்கிறவர்களையும் ஒழுங்குசெய்தபின்பு, யோசுவா அன்று இரவு பள்ளத்தாக்கிற்குப் போயிருந்தான். 14 ஆயீயின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனிதர்களாகிய அவனுடைய எல்லா மக்களும் துரிதப்பட்டு, அதிகாலையிலே குறித்த வேளையில் இஸ்ரவேலர்களுக்கு எதிரே யுத்தம்செய்ய சமவெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்திற்குப் பின்னாலே தன்னைத் தாக்குவதற்காக இரகசியப்படை வைக்கப்பட்டிருக்கிறதை அவன் அறியாமலிருந்தான். 15 யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்திரத்திற்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள். 16 அப்பொழுது பட்டணத்திற்குள் இருந்த மக்கள் எல்லோரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள். 17 ஆயீயிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலர்களைப் பின்தொடராத மனிதன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டுபோனார்கள். 18 அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயீக்கு நேராக நீட்டு; பட்டணத்தை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்திற்கு நேராக நீட்டினான். 19 அவன் தன் கையை நீட்டினவுடனே, ஒளிந்திருந்தவர்கள் வேகமாகத் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்திற்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடு பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள். 20 ஆயீயின் மனிதர்கள் பின்நோக்கிப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாயத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமல்போனது; வனாந்திரத்திற்கு ஓடின மக்கள் தங்களைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கித் திரும்பினார்கள். 21 ஒளிந்திருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலர்களும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயீயின் மனிதர்களை முறியடித்தார்கள். 22 பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இந்தப்பக்கத்திலும் சிலர் அந்தப்பக்கத்திலும் இருந்த இஸ்ரவேலர்களின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகவே, அவர்களில் ஒருவரும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு, 23 ஆயீயின் ராஜாவை உயிரோடு பிடித்து, யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள். 24 இஸ்ரவேலர்கள் வனாந்திரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயீயின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் அழியும்வரை பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஆயீக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள். 25 அந்த நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயீயின் மனிதர்கள் எல்லோரும் 12,000 பேர் மரித்தார்கள். 26 ஆயீயின் குடிகளையெல்லாம் அழித்துத் தீரும்வரைக்கும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை. 27 யெகோவா யோசுவாவிற்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தில் கொள்ளையிட்டவைகளையும் மட்டும் இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டார்கள். 28 யோசுவா ஆயீயைச் சுட்டெரித்து, அதை இந்த நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி, 29 ஆயீயின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கி, மாலைநேரம்வரைக்கும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் மறைந்தபின்பு யோசுவா அவனுடைய உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணத்தின் வாசலில் போட்டு, இந்த நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.