சாமுவேலின் பிறப்பு

கி.மு. 1155

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 சாமுவேல் 1:1–2:21

1 எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பெயர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் மகனான எலிகூவின் மகனான எரோகாமின் மகன். 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. 3 அந்த மனிதன் சீலோவிலே சேனைகளின் யெகோவாவை தொழுதுகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே யெகோவாவின் ஆசாரியரான ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இருந்தார்கள். 4 அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே அவன் தன்னுடைய மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்குபோட்டுக் கொடுப்பான். 5 அன்னாளை நேசித்ததினால், அவளுக்கு இரண்டு பங்கு கொடுப்பான்; யெகோவாவோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார். 6 யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள். 7 அவள் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். 8 அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான்.

9 சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்தாள்; ஆசாரியனான ஏலி யெகோவாவுடைய ஆலயத்தின் வாசற்கதவருகில் ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்திருந்தான். 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: 11 சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள். 12 அவள் யெகோவாவுக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். 13 அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து, 14 அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் குடிவெறியில் இருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். 15 அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் யெகோவாவுக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன். 16 உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள். 17 அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். 18 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன்பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை.

19 அவர்கள் அதிகாலையில் எழுந்து, யெகோவாவைத் தொழுதுகொண்டு, ராமாவிலிருக்கிற தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளுடன் இணைந்தான்; யெகோவா அவளை நினைத்தார். 20 சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்று, யெகோவாவிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். 21 எல்க்கானா என்பவன் யெகோவாவுக்கு வருடந்தோறும் செலுத்தும் பலியையும் தன்னுடைய பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன்னுடைய வீட்டார் அனைவரோடும் போனான். 22 அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் யெகோவாவுக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள்.

23 அப்பொழுது அவளுடைய கணவனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன்னுடைய விருப்பத்தின்படி செய்து, அவனை பால் மறக்கச்செய்யும்வரை இரு; யெகோவா தம்முடைய வார்த்தையைமட்டும் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்தப் பெண் தன்னுடைய பிள்ளையைப் பால் மறக்கச்செய்யும்வரைக்கும் பாலூட்டி வளர்த்தாள். 24 அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான். 25 அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள். 26 அப்பொழுது அவள்: என்னுடைய ஆண்டவனே, இங்கே உம்முடைய அருகிலே நின்று யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்த பெண் நான்தான் என்று என்னுடைய ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். 27 இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்செய்தேன்; நான் யெகோவாவிடத்தில் கேட்ட என்னுடைய விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். 28 எனவே, அவன் யெகோவாவெக்கென்று கேட்கப்பட்டதால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் அவனைக் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே யெகோவாவைத் தொழுதுகொண்டான்.

2:1 அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து:

“என்னுடைய இருதயம் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது;

என்னுடைய பெலன் யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது;

என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்;

உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

2 யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை;

உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை;

எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

3 இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்;

அகந்தையான பேச்சு உங்களுடைய வாயிலிருந்து வெளியே வரவேண்டாம்;

யெகோவா ஞானமுள்ள தேவன்;

அவர் செயல்கள் யதார்த்தமல்லவா?

4 பலவான்களினுடைய வில் முறிந்தது;

தள்ளாடினவர்களோ பெலத்தினால் வலிமையடைந்தனர்.

5 திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்;

பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்;

மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்;

அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள்.

6 யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்;

அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர்.

7 யெகோவா தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்;

அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து,

எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்;

அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும்,

மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்;

பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்;

அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார்.

9 அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்;

துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்;

பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை.

10 யெகோவாவோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்;

வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்;

யெகோவா பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து,

தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து,

தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார்” என்று துதித்தாள். 11 பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.

12 ஏலியின் மகன்கள் துன்மார்க்கத்தின் மனிதர்களாக இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவை அறியவில்லை. 13 அந்த ஆசாரியர்கள் மக்களை நடத்தினவிதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்தும் காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று முனை கூருள்ள ஒரு ஆயுதத்தைத் தன்னுடைய கையிலே பிடித்துவந்து, 14 அதினாலே, உலோகத்தட்டிலோ, பானையிலோ, மரத்தொட்டியிலோ, சட்டியிலோ குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதை ஆசாரியன் எடுத்துக்கொள்வான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலர்களுக்கு எல்லாம் செய்தார்கள். 15 கொழுப்பைத் தகனம் செய்வதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனிதனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், வேக வைத்ததை உன்னுடைய கையிலே வாங்கமாட்டேன் என்பான். 16 அதற்கு அந்த மனிதன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனம் செய்யட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன் என்பான். 17 ஆதலால் அந்த வாலிபர்களின் பாவம் யெகோவாவுக்கு முன்பாக மிகவும் பெரிதாக இருந்தது; மனிதர்கள் யெகோவாவுடைய காணிக்கையை வெறுப்பாக நினைத்தார்கள். 18 சாமுவேல் என்னும் பிள்ளை சணல்நூல் ஏபோத்தை அணிந்தவனாகக் யெகோவாவுக்கு முன்பாகப் பணிவிடை செய்தான். 19 அவனுடைய தாய் ஒவ்வொரு வருடந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன்னுடைய கணவனோடு வரும்போதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள். 20 ஏலி எல்க்கானாவையும் அவனுடைய மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த பெண் யெகோவாவுக்கென்று ஒப்புக் கொடுத்ததற்குப் பதிலாகக் யெகோவா உனக்கு அவளாலே அனேகம் பிள்ளைகளைக் கொடுப்பாராக என்றான்; அவர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள். 21 அப்படியே யெகோவா அன்னாளுக்கு உதவிசெய்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளை யெகோவாவுக்கு முன்பாக வளர்ந்தான்.