சேபாவின் கிளர்ச்சியும் பஞ்சமும்
கி.மு. 1022
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 அப்பொழுது பென்யமீன் மனிதனான பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள பிரச்சினைக்குரிய மனிதன் ஒருவன் தற்செயலாக அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்கு தாவீதிடம் பங்கும் இல்லை, ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலர்களே, நீங்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்குப் போய்விடுங்கள் என்றான். 2 அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் தாவீதைவிட்டுப் பிரிந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம் வரையுள்ள யூதா மனிதர்கள் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.
4 பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனிதர்களை மூன்று நாட்களுக்குள்ளே என்னிடம் வரவழைத்து, நீயும் வந்து இருக்கவேண்டும் என்றான். 5 அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பதற்காக போய், தனக்குக் குறித்த காலத்தில் வராமல் தாமதித்தான். 6 அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைவிட பிக்கிரியின் மகனான சேபா, இப்பொழுது நமக்கு தீங்கு செய்வான்; அவன் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடி, நீ உன் எஜமானுடைய வீரர்களை அழைத்துக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான். 7 அப்படியே யோவாபின் மனிதர்களும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும், எல்லா வலிமையான வீரர்களும் அவனுக்குப்பின்பாகப் புறப்பட்டு, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்வதற்கு எருசலேமிலிருந்து போனார்கள். 8 அவர்கள் கிபியோனின் பக்கத்தில் இருக்கிற பெரிய பாறை அருகில் வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிராக வந்தான்; யோவாபோ, தான் அணிந்துகொண்டிருக்கிற தன்னுடைய சட்டையின்மேல் ஒரு வாரைக் கட்டியிருந்தான்; அதில் உறையோடு ஒரு பட்டயம் அவன் இடுப்பில் தொங்கினது; அவன் புறப்படும்போது அது விழுந்தது. 9 அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து, 10 தன்னுடைய கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாக இல்லாமலிருந்தபோது, யோவாப் அவனை அவனுடைய குடல்கள் தரையிலே விழும்படி, அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் இறந்துபோனான்; அப்பொழுது யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்ந்தார்கள். 11 யோவாபுடைய வாலிபர்களில் ஒருவன் இறந்தவன் அருகில் நின்று, யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதை ஆதரிக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போகட்டும் என்றான். 12 அமாசா நடுவழியில் இரத்தத்திலே புரண்டுகிடந்தபடியால், மக்கள் எல்லோரும் அங்கேயே நிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவன் அருகில் வருகிறவர்கள் எல்லோரும் அங்கேயே நிற்பதைக் கண்டு, ஒரு ஆடையை அவன்மேல் போட்டான். 13 அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பின்பு, எல்லோரும் கடந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர, யோவாபுக்குப் பின்னேசென்றார்கள். 14 அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவான ஆபேல்வரையும், பேரீமின் கடைசிவரையிலும் வந்திருந்தான்; அந்த இடத்தார்களும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள். 15 அவர்கள் போய் பெத்மாக்காவான ஆபேலிலே அவனை முற்றுகையிட்டு, பட்டணத்திற்குள் போகத் தடைச்சுவர்களைக் கட்டினார்கள்; யோவாபோடு இருக்கிற இராணுவத்தினர்கள் எல்லோரும் மதிலை விழச்செய்யும்படி அழிக்க முயற்சிசெய்தார்கள். 16 அப்பொழுது புத்தியுள்ள ஒரு பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேசவேண்டும்; அவரை இங்கே அருகில் வரச்சொல்லுங்கள் என்றாள். 17 அவன் அவளுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பெண்: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான். 18 அப்பொழுது அவள்: முற்காலத்து மக்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள். 19 இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாக இருக்கும்போது, நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாக இருக்கிறதை அழிக்கவேண்டும் என்று பார்க்கிறீரோ? நீர் யெகோவாவுடைய சுதந்திரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள். 20 யோவாப் மறுமொழியாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாக இருக்கட்டும். 21 காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள எப்பிராயீம் மலையை சேர்ந்தவனாக இருக்கிற ஒரு மனிதன், ராஜாவான தாவீதுக்கு விரோதமாகத் தன்னுடைய கையை ஓங்கினான்; அவனைமட்டும் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தைவிட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்தப் பெண் யோவாபைப் பார்த்து: இதோ, அவனுடைய தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி, 22 அவள் மக்களிடத்தில் போய் புத்தியாகப் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகனான சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடம் போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; எல்லோரும் பட்டணத்தைவிட்டுக் கலைந்து, தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடம் போகும்படி எருசலேமிற்குத் திரும்பினான்.
23 யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் மகனான பெனாயா கிரேத்தியர்கள்மேலும் பிலேத்தியர்கள்மேலும் தலைவராக இருந்தார்கள். 24 அதோராம் கடினமாக வேலை வாங்குகிறவனும், அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியும், 25 சேவா எழுத்தாளனாகவும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாகவும் இருந்தார்கள். 26 யயீரியனான ஈராவும் தாவீதுக்கு முதலமைச்சராக இருந்தான்.
21:1 தாவீதின் நாட்களில் மூன்று வருடங்கள் தீராத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது யெகோவாவுடைய முகத்தைத் தேடினான். யெகோவா: கிபியோனியர்களைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் குடும்பத்தாருக்காகவும் இது உண்டானது என்றார். 2 அப்பொழுது ராஜா: கிபியோனியர்களை அழைத்தான்; கிபியோனியர்களோ, இஸ்ரவேல் மக்களாக இல்லாமல் எமோரியர்களில் மீதியாக இருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் மக்களுக்காகவும், யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான். 3 ஆகையால் தாவீது கிபியோனியர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? யெகோவாவுடைய நன்மைகளையும் வாக்குத்தத்தங்களையும் சுதந்திரத்துக்கொண்டிருக்கிற அவருடைய மக்களை நீங்கள் ஆசீர்வதிக்கும்படி, நான் செய்யவேண்டிய பரிகாரம் என்ன என்று கேட்டான். 4 அப்பொழுது கிபியோனியர்கள் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் குடும்பத்தார்களோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்களுடைய விருப்பம் இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 5 அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கும் இல்லாதபடி, அழிந்துபோக எவன் எங்களை அழித்து எங்களுக்குத் தீங்குசெய்ய நினைத்தானோ, 6 அவன் மகன்களில் ஏழுபேர் யெகோவா தெரிந்துகொண்ட சவுலின் ஊரான கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கில்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான். 7 ஆனாலும் தாவீதும் சவுலின் மகனான யோனத்தானும் யெகோவாவுக்கு செய்துகொண்ட ஆணைக்காக, ராஜா சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு, 8 ஆயாவின் மகளான ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு மகன்களான அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் மகள்களான மேரப் மேகோலாத்தியனான பர்சிலாயியின் மகனான ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து மகன்களையும் பிடித்து, 9 அவர்களைக் கிபியோனியர்கள் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் யெகோவாவுடைய சமூகத்தில் மலையின்மேல் தூக்கில்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேர்களும் ஒன்றாக இறந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவங்குகிற அறுப்புக்காலத்தின் ஆரம்ப நாட்களிலே அவர்கள் கொல்லப்பட்டார்கள். 10 அப்பொழுது ஆயாவின் மகளான ரிஸ்பாள் சணல்நூல் துணியை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாட்களின் ஆரம்பம் முதல் வானத்திலிருந்து அவர்கள்மேல் மழைபெய்யும்வரை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ இரவில் காட்டுமிருகங்களோ அந்த உடல்களைத் தொந்தரவு செய்யாதபடி பார்த்துவந்தாள். 11 ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, 12 தாவீது போய், பெலிஸ்தர்கள் கில்போவாவிலே சவுலை வெட்டினபோது, பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடப்பட்டதும், கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார்கள் அங்கே போய்த் திருட்டுத்தனமாகக் கொண்டுவந்ததுமான சவுலின் எலும்புகளையும், அவனுடைய மகனான யோனத்தானின் எலும்புகளையும், அவர்களிடத்திலிருந்து எடுத்து, 13 அங்கே இருந்து அவைகளைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடு சேர்த்து, 14 சவுலின் எலும்புகளையும் அவன் மகனான யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்து சேலா ஊரிலிருக்கிற அவனுடைய தகப்பனான கீசின் கல்லறையில் அடக்கம்செய்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டார்.