சனகெரிப்பின் படை அழிக்கப்படுகிறது

கி.மு. 710

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 19:8–19

8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான். 9 இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: 10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே. 11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ? 12 என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்தது உண்டோ? 13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் ராஜாக்களும் எங்கே என்று சொல்லுங்கள் என்றான்.

14 எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் யெகோவாவின் ஆலயத்திற்குப்போய், அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து, 15 யெகோவாவை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே. நீர் ஒருவரே பூமியின் ராஜ்ஜியங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். 16 யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை ஏளனம் செய்யும்படி சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும். 17 யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த மக்களையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, 18 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை அழித்துப்போட்டார்கள். 19 இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே தேவனாகிய யெகோவா என்று பூமியின் ராஜ்ஜியங்கள் அனைத்தும் அறியும்படிக்கு, எங்களை அவனுடைய கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்செய்தான்.

சங்கீதங்கள் 73

ஆசாபின் பாடல்.

1 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு

தேவன் நல்லவராகவே இருக்கிறார்.

2 ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும்,

என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது.

3 துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது,

வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.

4 மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை;

அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது.

5 மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்;

மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.

6 ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும்,

கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.

7 அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது;

அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது.

8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்;

பெருமையாகப் பேசுகிறார்கள்.

9 தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்;

அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

10 ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்;

தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும்.

11 தேவனுக்கு அது எப்படித் தெரியும்?

உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ?

என்று சொல்லுகிறார்கள்.

12 இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்;

இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து,

சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.

13 நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து,

குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.

14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும்,

காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.

15 இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால்,

இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.

16 இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்;

நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து,

17 அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை,

அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது.

18 நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி,

பாழான இடங்களில் விழச்செய்கிறீர்.

19 அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்!

பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.

20 தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே,

நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர்.

21 இப்படியாக என்னுடைய மனம் கசந்தது,

என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன்.

22 நான் காரியம் அறியாத மூடனானேன்;

உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.

23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்;

என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.

24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி,

முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?

பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

26 என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது;

தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும்

என்னுடைய பங்குமாக இருக்கிறார்.

27 இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்;

உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர்.

28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;

நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி

கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

2 இராஜாக்கள் 19:20–35

20 அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பினிமித்தம் நீ என்னை நோக்கிச் செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். 21 அவனைக்குறித்துக் யெகோவா சொல்லுகிற வசனமாவது:

“சீயோன் குமாரத்தியாகிய கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து,

உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; எருசலேம் குமாரத்தி

உன் பின்னாலே தலையை அசைக்கிறாள்.

22 “யாரை அவமதித்து தூஷித்தாய்?

யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்?

நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ

உன் கண்களைப் பெருமையாக ஏறெடுத்தாய்?

23 உன் பிரதிநிதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை அவமதித்து:

என் இரதங்களின் திரளினாலே

நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்;

அதின் உயரமான கேதுருமரங்களையும்,

உச்சிதமான தேவதாரு மரங்களையும் நான் வெட்டி,

அதின் கடைசிவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும்,

24 நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்;

என் உள்ளங்கால்களினால்

பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறண்டுபோகச்செய்தேன் என்றும் சொன்னாய்.

25 நான் வெகுகாலத்திற்குமுன்பு அதை ஏற்படுத்தி,

ஆரம்பநாட்கள் முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ?

இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப்

பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன்.

26 அதினாலே அவைகளின் குடிமக்கள் சோர்வடைந்து,

கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும்,

பச்சிலைக்கும்,

வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருவதற்கு முன் உலர்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.

27 உன் உட்காருதலையும், போக்கையும்,

வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

28 நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து,

வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால்,

நான் என் கொக்கியை உன் மூக்கிலும்

என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு,

நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று

அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.”

29 உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களை சாப்பிடுவீர்கள். 30 யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். 31 மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும். 32 ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராக முற்றுகை போடுவதுமில்லை. 33 அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். 34 என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான். 35 அன்று இரவில் சம்பவித்தது என்னவென்றால்: யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியர்களின் முகாமில் லட்சத்தெண்பத்து ஐயாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அதிகாலையில் எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லோரும் செத்த பிரதேங்களாகக் கிடந்தார்கள்.

சங்கீதங்கள் 75–76

அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.

1 உம்மைத் துதிக்கிறோம்,

தேவனே, உம்மைத் துதிக்கிறோம்;

உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது.

2 நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன்.

3 பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது;

அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)

4 வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்;

துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன்.

5 உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்;

உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள்.

6 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.

7 தேவனே நியாயாதிபதி;

ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

8 கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது,

அதிலிருந்து ஊற்றுகிறார்;

பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

9 நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து,

யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன்.

10 துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்;

நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.

76:1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;

இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.

2 சாலேமில் அவருடைய கூடாரமும்,

சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.

3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும்,

கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)

4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.

5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு,

உறங்கி அசந்தார்கள்;

வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.

6 யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால்

இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.

7 நீர், நீரே, பயங்கரமானவர்;

உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும்,

தேவனே நீர் எழுந்தருளினபோது,

9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்;

பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)

10 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்;

மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

11 பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்;

அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.

12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;

பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

2 இராஜாக்கள் 19:36–37

36 அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான். 37 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவனுடைய மகன்களாகிய அத்ரமலேக்கும், சரேத்சேரும் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவனுடைய மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து ஆட்சிசெய்தான்.