துன்பத்தின் சங்கீதங்கள், பெரும்பாலும் சிறையிருப்புக் காலத்தவை (continued)

திருச்சபையின் துன்பங்களின்போதும் உபத்திரவங்களின்போதும், முக்கியமாகப் பாபிலோனியச் சிறையிருப்பின்போது எழுதப்பட்ட சங்கீதங்கள்.

கி.மு. 539

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சங்கீதங்கள் 92–93

ஓய்வுநாளின் பாடல்.

1 யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே,

உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும்,

2 பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும்,

தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,

3 காலையிலே உமது கிருபையையும்,

இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.

4 யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்,

உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன்.

5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்!

உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

6 மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்;

மூடன் அதை உணரமாட்டான்.

7 துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து,

அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது,

அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

8 யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.

9 யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்;

உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள்.

10 என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்;

புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.

11 என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்;

எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு

நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.

12 நீதிமான் பனையைப்போல் செழித்து,

லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

13 யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள்

எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள்.

14 யெகோவா உத்தமரென்றும்,

என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில்

அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி,

15 அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து,

புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.

93:1 யெகோவா ஆளுகை செய்கிறார்,

மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து,

அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்;

ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

2 உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது;

நீர் என்றென்றும் இருக்கிறீர்.

3 யெகோவாவே, நதிகள் எழும்பின;

நதிகள் இரைச்சலிட்டு எழும்பின;

நதிகள் அலைதிரண்டு எழும்பின.

4 திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட,

கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

5 உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்;

யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக

உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 123

ஆரோகண பாடல்.

1 பரலோகத்தில் இருக்கிறவரே,

உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன்.

2 தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,

வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,

எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும்,

எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

3 எங்களுக்கு இரங்கும் யெகோவாவே,

எங்களுக்கு இரங்கும்;

அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

4 சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும்,

அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும்,

எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.