துன்பத்தின் சங்கீதங்கள், பெரும்பாலும் சிறையிருப்புக் காலத்தவை (continued)

திருச்சபையின் துன்பங்களின்போதும் உபத்திரவங்களின்போதும், முக்கியமாகப் பாபிலோனியச் சிறையிருப்பின்போது எழுதப்பட்ட சங்கீதங்கள்.

கி.மு. 539

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சங்கீதங்கள் 26–27

தாவீதின் பாடல்.

1 யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. 2 யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்;

என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.

3 உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது;

உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.

4 ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை,

வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.

5 பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்;

துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன்.

6 யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

7 எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

8 யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும்,

உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.

9 என் ஆத்துமாவைப் பாவிகளோடும்,

என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும்.

10 அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது;

அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.

11 நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்;

என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும்.

12 என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது;

சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன்.

தாவீதின் பாடல்.

27:1 யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,

யாருக்குப் பயப்படுவேன்?

யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர்,

யாருக்கு பயப்படுவேன்?

2 என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க,

என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.

3 எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது;

என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.

4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்;

நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும்,

அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும்,

நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

5 தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து,

என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

6 இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்;

அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு,

யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன்.

7 யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு,

எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும். 8 என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே,

உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது.

9 உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்;

நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்;

நீரே எனக்கு உதவி செய்பவர்;

என்னுடைய இரட்சிப்பின் தேவனே,

என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும்.

10 என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்,

யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.

11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்,

என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும்.

12 என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்;

பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும்

எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள்.

13 நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே

யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன்.

14 யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு,

அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார்,

கர்த்தருக்கே காத்திரு.

சங்கீதங்கள் 36

இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.

1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்;

அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.

2 அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை,

தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.

3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது;

புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.

4 அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து,

நல்லது இல்லாத வழியிலே நிலைத்து,

பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.

5 யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது;

உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.

6 உமது நீதி மகத்தான மலைகள் போலவும்,

உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது;

யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!

அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.

8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்;

உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.

9 வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது;

உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.

10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும்,

செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல்

உமது நீதியையும் பாராட்டியருளும்.

11 பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும்,

துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.

12 அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்;

எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.