தாவீதின் சங்கீதங்கள், காலங்கள் தெரியவில்லை

தாவீது எழுதிய சங்கீதங்கள்; இவை எழுதப்பட்ட காலங்களும் சூழ்நிலைகளும் தெரியவில்லை.

கி.மு. 1015

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சங்கீதங்கள் 40–41

இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.

1 யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;

அவர் என்னிடமாகச் சாய்ந்து,

என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார்.

2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து,

என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,

என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி,

3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்;

அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள்.

4 பெருமைக்காரர்களையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல்,

யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.

5 என் தேவனாகிய யெகோவாவே,

நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது;

ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது.

நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல்,

என் காதுகளைத் திறந்தீர்;

சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.

7 அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது;

8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்;

உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.

9 மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்;

என்னுடைய உதடுகளை மூடமாட்டேன்,

யெகோவாவே, நீர் அதை அறிவீர்.

10 உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை;

உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்;

உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.

11 யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்;

உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.

12 எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது,

என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது,

அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது,

என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது.

13 யெகோவாவே, என்னை விடுவித்தருளும்;

யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.

14 என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி,

எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக.

15 என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள்,

தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.

16 உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக;

உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று

எப்பொழுதும் சொல்வார்களாக.

17 நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன்,

யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்;

தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்;

என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.

இராகத்தலைவனுக்கு தாவீதின் பாடல்.

41:1 பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்;

தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார்.

2 யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்;

பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்;

அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை.

3 படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்;

அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார்.

4 யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்;

உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன்,

என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

5 அவன் எப்பொழுது சாவான்,

அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள்.

6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்;

அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு,

தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்.

7 என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து,

எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து,

8 தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது;

படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

9 என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும்,

என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான்.

10 யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி,

நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும்.

11 என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால்,

நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன்.

12 நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி,

என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

13 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள

எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர்.

ஆமென், ஆமென்.

சங்கீதங்கள் 61

நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

1 தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு,

என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.

2 என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது

பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;

எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

3 நீர் எனக்கு அடைக்கலமும்,

எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.

4 நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்;

உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)

5 தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்;

உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.

6 ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்;

அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்;

தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.

8 இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக,

உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.