யூதர்களின் மூப்பர்களுக்கான தீர்க்கதரிசனங்கள் (continued)
கி.மு. 593
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன்னுடைய வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி. 3 இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் நீதிமானையும் துன்மார்க்கனையும் அழிப்பேன். 4 நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அழிக்கப்போகிறதினால் தெற்கு துவக்கி வடக்குவரையும் உள்ள எல்லா மாம்சத்திற்கும் எதிராக என்னுடைய வாள் அதின் உறையிலிருந்து புறப்படும். 5 அப்பொழுது யெகோவாகிய நான் என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை. 6 ஆதலால் மனிதகுமாரனே, உன்னுடைய இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு; அவர்களுடைய கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு. 7 நீ எதற்காக பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதற்காகவே; அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல தள்ளாடும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 8 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 9 மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: வாள் கூர்மையாக்கப்பட்டது, வாள் கூர்மையாக்கப்பட்டது; அது தீட்டப்பட்டும் இருக்கிறது. 10 பெரிய அழிவுண்டாக்குவதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாக அது தீட்டப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என்னுடைய மகனுடைய கோல், அது எல்லா மரங்களையும் அலட்சியம்செய்யும். 11 அதைக் கையாடும்படி அதைத் துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது தீட்டப்பட்டதுமாக இருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல். 12 மனிதகுமாரனே, நீ சத்தமிட்டு கதறு; வாள் என்னுடைய மக்களின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதற்காக என்னுடைய மக்களுக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன்னுடைய விலாவிலே அடித்துக்கொள். 13 யாவையும் கண்டிக்கிற கோல் வந்தால் தவிர இனிச் சோதனையினால் தீருகிறது என்னவென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 14 ஆகையால் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைதட்டு; வாள் மூன்றுமுறை இரட்டித்துவரும்; அது கொலை செய்யப்பட்டவர்களின் வாள்; அது கொலைசெய்யப்படப்போகிற பெரியவர்களின் உள் அறைகளில் நுழைகிற வாள். 15 அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் அதிகமாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் சம்பவிக்கக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது. 16 ஒரே பலமாக வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன்னுடைய முகம் திரும்புகிற திசையெல்லாம் வெட்டு. 17 நானும் கையுடன் கைதட்டி, என்னுடைய கடுங்கோபத்தை ஆறச்செய்வேன் என்று யெகோவாகிய நான் சொன்னேன் என்றார். 18 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 19 மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவின் வாள் வரக்கூடிய இரண்டு வழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்திற்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள். 20 வாள் அம்மோனியர்களின் பட்டணமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரக்கூடிய ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற பாதுகாப்பான எருசலேமுக்கு விரோதமாக வரக்கூடிய ஒரு வழியையும் குறித்துக்கொள். 21 பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே குறிபார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, சிலைகளை ஆட்டி, ஈரலால் குறிபார்ப்பான். 22 தலைவரை நியமிக்கிறதற்கும், அழிக்கும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாகச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் இயந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், முற்றுகைச் சுவர்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து குறிபார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும். 23 இந்த குறியானது வாக்கு கொடுத்தவர்களுக்கு முன்பாகப் பொய்யாகத் தோன்றும்; ஆயினும் அவர்கள் பிடிக்கப்படும்படி அவன் அவர்களுடைய துரோகத்தை நினைப்பான். 24 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்களுடைய செய்கைகளிலெல்லாம் உங்களுடைய பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்களுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்கிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாக பிடிக்கப்படுவீர்கள். 25 இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் உன்னுடைய நாள் வந்தது. 26 தலைப்பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; அது இனி முன்பு போல இருக்காது; தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன். 27 அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வரும்வரை அது இல்லாமல் இருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 28 பின்னும் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோனியர்களையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், 29 அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் வந்த தங்களுடைய நாளுக்கு ஏதுவாகி, கொலைசெய்யப்பட்டு போனவர்களுடைய பிடரிகளோடேகூட உன்னைத் துன்மார்க்கரின் கையினால் விழச்செய்யும்படி, உனக்கு பொய்யானது பார்க்கப்படுகிறபோதும், உனக்குப் பொய்குறி பார்க்கப்படுகிறபோதும் வாள் உருவப்பட்டது, வாளே உருவப்பட்டது; வெட்டவும், அழிக்கவும் அது மின்னக்கூடியதாகத் தீட்டப்பட்டிருக்கிறது. 30 உன்னுடைய வாளை நீ திரும்ப அதின் உறையிலே போடு; நீ உண்டாக்கப்பட்ட இடமாகிய உன்னுடைய பிறந்த நாட்டிலே நான் உன்னை நியாயந்தீர்த்து, 31 என்னுடைய கோபத்தை உன்மேல் ஊற்றுவேன்; நான் என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பை உன்மேல் ஊதி, மிருககுணமுள்ளவர்களும், அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனிதர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். 32 நீ நெருப்புக்கு இரையாவாய்; உன்னுடைய இரத்தம் உன்னுடைய தேசத்தின் நடுவில் சிந்தப்படும்; நீ இனி நினைக்கப்படுவதில்லை; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.
22:1 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 இப்போதும் மனிதகுமாரனே, இரத்தம்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதிருந்தால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியப்படுத்தி, 3 அதை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய காலம் வரக்கூடியதாக உன்னுடைய நடுவிலே இரத்தம்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாக அசுத்தமான சிலைகளை உண்டாக்கின நகரமே, 4 நீ சிந்தின உன்னுடைய இரத்தத்தினால் நீ குற்றம்சுமந்ததாகி நீ உண்டாக்கின உன்னுடைய அசுத்தமான சிலைகளால் நீ தீட்டுப்பட்டு, உன்னுடைய நாட்களை நெருங்கச்செய்து, உன்னுடைய வருடங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் அந்நியமக்களுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன். 5 உனக்கு அருகிலும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனிதர்கள் நீ பெயர்கெட்டதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்செய்வார்கள். 6 இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்களுடைய புயபலத்திற்குத் தக்கதாக, உன்னில் இரத்தம் சிந்தினார்கள். 7 உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாக நினைத்தார்கள்; உன்னுடைய நடுவில் பரதேசிக்கு இடையூறு செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள். 8 நீ என்னுடைய பரிசுத்த பொருட்களை அசட்டைசெய்து, என்னுடைய ஓய்வு நாட்களை பரிசுத்தக்குலைச்சலாக்கினாய். 9 இரத்தம்சிந்தும்படி பொய் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன்னுடைய நடுவில் இருக்கிறார்கள். 10 தகப்பனை நிர்வாணமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தீட்டுப்பட்ட பெண்ணை பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள். 11 உன்னில் ஒருவன் தன்னுடைய அயலானுடைய மனைவியுடன் அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாகத் தன்னுடைய மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன்னுடைய தகப்பனுக்குப் பிறந்த தன்னுடைய சகோதரியைப் பலவந்தம்செய்கிறான். 12 இரத்தம்சிந்தும்படி லஞ்சம் வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் அதிக வட்டியும் வாங்கி, பொருளாசையினால் உன்னுடைய அயலானுக்கு இடையூறு செய்து, என்னை மறந்துபோனாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 13 இதோ, நீ அநியாயமாகச் சம்பாதித்த பொருளினால், உன்னுடைய நடுவில் நீ சிந்தின இரத்தத்திற்காக நான் கைகொட்டுகிறேன். 14 நான் உன்னில் நியாயம்செய்யும் நாட்களில் உன்னுடைய இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன்னுடைய கைகள் திடமாக இருக்குமோ? யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன். 15 நான் உன்னைப் அந்நியஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன்னுடைய அசுத்தத்தை உன்னில் ஒழியச்செய்வேன். 16 நீ அந்நியதேசங்களின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக்குலைச்சலாக இருந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார். 17 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 18 மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் எனக்கு பயனற்று போனார்கள்; அவர்களெல்லோரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் கழிவாகப் போனார்கள். 19 ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்களெல்லாரும் கழிவாகப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன். 20 வெள்ளியையும், பித்தளையையும், இரும்பையும், ஈயத்தையும், தகரத்தையும் நெருப்பில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என்னுடைய கோபத்தினாலும் என்னுடைய கடுங்கோபத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன். 21 நான் உங்களைக் கூட்டி, என்னுடைய கோபமாகிய நெருப்பை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள். 22 குகைக்குள் வெள்ளி உருகுகிறதுபோல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது யெகோவாகிய நான் என்னுடைய கடுங்கோபத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்து கொள்வீர்கள் என்றார். 23 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 24 மனிதகுமாரனே, நீ தேசத்தைப்பார்த்து: நீ சுத்தம் செய்யப்படாத தேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு. 25 அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு செய்கிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; செல்வத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள். 26 அதின் ஆசாரியர்கள் என்னுடைய வேதத்திற்கு அநியாயம்செய்து, என்னுடைய பரிசுத்த பொருட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தம் உள்ளதற்கும் பரிசுத்தம் இல்லாததற்கும் வித்தியாசம் உண்டாக்காமலும், அசுத்தம் உள்ளதற்கும் அசுத்தம் இல்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பிக்காமலும் இருந்து, என்னுடைய ஓய்வுநாட்களுக்குத் தங்களுடைய கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் அவமதிக்கப்படுகிறேன். 27 அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாகப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தம் சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள். 28 அதின் தீர்க்கதரிசிகள் பொய்யானதை பார்த்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, யெகோவா சொல்லாமலிருந்தும், யெகோவாகிய ஆண்டவர் சொன்னாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள். 29 தேசத்தின் மக்கள் இடையூறு செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாகத் துன்பப்படுத்துகிறார்கள். 30 நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும் தகுந்த ஒரு மனிதனைத் தேடினேன், ஒருவனையும் காணவில்லை. 31 ஆகையால், நான் அவர்கள்மேல் என்னுடைய கோபத்தை ஊற்றி, என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பால் அவர்களை அழித்து, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.