சிதேக்கியாவுக்கும் பொய்த்தீர்க்கதரிசிகளுக்கும் எதிரான தீர்க்கதரிசனங்கள் (continued)
சிதேக்கியாவுக்கும் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் எருசலேமுக்கும் யூத தேசங்களுக்கும் எதிரான பல்வேறு தீர்க்கதரிசனங்கள்.
கி.மு. 594
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் சொல்லி, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களுடன் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 3 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: தாங்கள் ஒன்றும் பார்க்காமல் இருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ, 4 இஸ்ரவேலே, உன்னுடைய தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். 5 நீங்கள் யெகோவாவுடைய நாளிலே போரிலே நிலைநிற்கும்படி, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வீட்டாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. 6 யெகோவா தங்களை அனுப்பாமல் இருந்தும், யெகோவா சொன்னாரென்று சொல்லி, அவர்கள் பொய்யானதையும், பொய்க்குறியையும் பார்த்து, காரியத்தை நிர்வாகம் செய்யலாமென்று நம்பிக்கையாக இருக்கிறார்கள். 7 நான் சொல்லாமல் இருந்தும், நீங்கள் யெகோவா சொன்னார் என்று சொல்லும்போது, பொய் தரிசனத்தைப் பார்த்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா? 8 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு எதிரானவர் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 9 பொய்யானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என்னுடைய கை எதிராக இருக்கும்; அவர்கள் என்னுடைய மக்களின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் மக்களின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழைவதுமில்லை; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள். 10 சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என்னுடைய மக்களை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள். 11 சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ பெய்வாய்; கொடிய புயல்காற்றும் அதைப் பிளக்கும். 12 இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா? 13 ஆகையால் என்னுடைய கடுங்கோபத்திலே கொடிய புயல்காற்றை எழும்பி அடிக்கச்செய்வேன்; என்னுடைய கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என்னுடைய கடுங்கோபத்திலே அழிக்கத்தக்க பெருங்கல்மழையும், பெய்யும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 14 அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்து கிடக்கும்படி அதைத் தரையிலே விழச்செய்வேன்; உள்ளே இருக்கிற நீங்கள் அழியும்படி அது விழும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 15 இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என்னுடைய கடுங்கோபத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை. 16 எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனம்சொல்லி, சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 17 மனிதகுமாரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனம்சொல்லுகிற உன்னுடைய மக்களின் மகள்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: 18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படி எல்லா கைகளுக்கும் காப்புகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டாக்குகிறவர்களுக்கு ஐயோ, நீங்கள் என்னுடைய மக்களின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடு காப்பாற்றுவீர்களோ? 19 சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடு இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடு காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்யைக் கேட்கிற என்னுடைய மக்களுக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என்னுடைய மக்களுக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 20 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்களுடைய காப்புகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்களுடைய புயங்களிலிருந்து பிடுங்கிக்கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலைசெய்து, 21 உங்களுடைய தலையணைகளைக் கிழித்து, என் மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்களுடைய கைகளில் இருக்கமாட்டார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 22 நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாக முறியச்செய்தபடியினாலும், துன்மார்க்கன் தன்னுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடு காக்கவும் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும், 23 நீங்கள் இனி பொய்யானதைப் பார்ப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என்னுடைய மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
14:1 இஸ்ரவேலுடைய மூப்பர்களில் சிலர் என்னிடத்தில் வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். 2 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 3 மனிதகுமாரனே, இந்த மனிதர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளைத் தங்களுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தங்களுடைய அக்கிரமமாகிய இடறலைத் தங்களுடைய முகத்திற்கு முன்பாக வைத்துகொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா? 4 ஆகையால், நீ அவர்களுடன் பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியிடம் வந்தால், யெகோவாகிய நான் இஸ்ரவேலர்களுடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய அசுத்தமான சிலைகளின் எண்ணிக்கைக்குத்தக்கதாக பதில் கொடுப்பேன். 5 அவர்கள் எல்லோரும் தங்களுடைய அசுத்தமான சிலைகளைப் பின்பற்றி, என்னை விட்டுப் விலகிப்போனார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 6 ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்களுடைய அசுத்தமான சிலைகளை விட்டுத் திரும்புங்கள்; உங்களுடைய எல்லா அருவருப்புகளையும் விட்டு உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார். 7 இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் விலகி, தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியின் மூலமாக என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் யெகோவாகிய நானே உத்திரவுகொடுத்து, 8 அந்த மனிதனுக்கு விரோதமாக என்னுடைய முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடிக்கு அழித்துப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 9 ஒரு தீர்க்கதரிசி ஏமாற்றி ஒரு விஷயத்தைச் சொன்னான் என்றால், அப்படிப்பட்ட தீர்க்கதரிசியைக் யெகோவாகிய நானே ஏமாற்றமடையச்செய்தேன்; நான் அவனுக்கு எதிராக என்னுடைய கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் மக்களின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன். 10 அப்படியே அவரவர் தங்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். 11 இஸ்ரவேலர்கள் இனி என்னைவிட்டு வழிவிலகிப்போகாமலும், தங்களுடைய எல்லா மீறுதல்களாலும் இனி அசுத்தப்படாமலும் இருக்கும்படியாக இப்படி நேரிடும்; அப்பொழுது அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார் என்று சொல் என்றார்.
12 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 13 மனிதகுமாரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்துகொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு எதிராக என்னுடைய கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனிதர்களையும் மிருகங்களையும் அதில் இல்லாதபடிக்கு அழியச்செய்வேன். 14 அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று நபர்களும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய நீதியினால் தங்களுடைய ஆத்துமாக்களைமட்டும் தப்புவிப்பார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 நான் தேசத்தில் கொடிய மிருகங்களை அனுப்ப, அந்த மிருகங்களினால் ஒருவரும் அதின் வழியாக நடக்கமுடியாதபடி வெறுமையும் பாழுமாகும்போது, 16 அந்த மூன்று நபர்களும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மட்டும் தப்புவார்களேதவிர, மகன்களையோ மகள்களையோ காப்பாற்றமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 17 அல்லது நான் அந்த தேசத்தின்மேல் வாளை வரச்செய்து: வாளே தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிக்கும்போது, 18 அந்த மூன்று நபர்களும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மட்டும் தப்புவார்களேதவிர, மகன்களையோ மகள்களையோ தப்புவிக்கமாட்டார்கள் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 19 அல்லது நான் அந்த தேசத்தில் கொள்ளை நோயை அனுப்பி, அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிக்கும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என்னுடைய கடுங்கோபத்தை ஊற்றும்போது, 20 நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய நீதியினால் தங்களுடைய ஆத்துமாக்களைமட்டும் காப்பாற்றுவார்களே தவிர, மகன்களையோ, மகள்களையோ காப்பாற்றமாட்டார்கள் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 21 ஆகையால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் மனிதர்களையும், மிருகங்களையும் நாசம்செய்யும்படி எருசலேமுக்கு எதிராக வாள், பஞ்சம், கொடியமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்த நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக அழிவாகும்? 22 ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற மகன்களும் மகள்களும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களிடத்திற்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்களுடைய வழிகளையும் அவர்களுடைய செய்கைகளையும் கண்டு, நான் எருசலேமின்மேல் வரச்செய்த தீங்கையும் அதின்மேல் நான் வரச்செய்த எல்லாவற்றையும்குறித்துத் தேற்றப்படுவீர்கள். 23 நீங்கள் அவர்களுடைய வழிகளையும் அவர்களுடைய செய்கைகளையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் ஆறுதலாக இருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் காரணமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்பதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார் என்று சொன்னார்.
15:1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன? 3 ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ? 4 இதோ, அது நெருப்பிற்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் நெருப்பு எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ? 5 இதோ, அது வேகாமல் இருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாமல் இருக்க, நெருப்பு அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவது எப்படி? 6 ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள் இருக்கிற திராட்சைச்செடியை நான் நெருப்பிற்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து, 7 என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 8 அவர்கள் துரோகம்செய்தபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.