கிறிஸ்துவே மேசியா என்று பேதுரு ஆலோசனைச் சங்கத்திடம் சொல்லுகிறான்

ஆலோசனைச் சங்கம் மீண்டும் கூடுகிறது. அவர்களுக்கு முன்பாகப் பேதுரு கிறிஸ்துவே மேசியா என்று அறிவிக்கிறான்.

கி.பி. 32

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:22–33

22 அதிகாரிகள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: 23 சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். 24 இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற படைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இது என்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள். 25 அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான். 26 உடனே படைத்தலைவன் அதிகாரிகளோடுகூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். 27 அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: 28 நீங்கள் இயேசுவின் நாமத்தைக்குறித்து போதகம்பண்ணக்கூடாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்களுடைய போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். 29 அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது. 30 நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி, 31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார். 32 இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவரும் சாட்சி என்றார்கள். 33 அதை அவர்கள் கேட்டபொழுது, மிகுந்த கோபமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள்.

கமாலியேலின் ஆலோசனை அப்போஸ்தலர்களை விடுதலையாக்குகிறது

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:34–42

34 அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற வேதபண்டிதர் கமாலியேல் என்னும் பெயர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலர்களைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, 35 சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 36 ஏனென்றால், இந்த நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அவன் மரித்துப்போனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள். 37 அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள். 38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்; 39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலர்களை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். 41 அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், 42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.

ஏழு திருத்தொண்டர்களின் நியமனம்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:1–6

1 அந்த நாட்களிலே, சீடர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, கிரேக்கர்களானவர்கள், தங்களுடைய விதவைகள் அன்றாட பராமரிப்பில் சரியாக பராமரிக்கப்படவில்லையென்று, எபிரெயர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். 2 அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல. 3 ஆதலால் சகோதரர்களே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம். 4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் இடைவிடாமல் உறுதியாகத் தரித்திருப்போம் என்றார்கள். 5 இந்த யோசனை சபையாரெல்லோருக்கும் பிரியமாக இருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மதத்தைச் சேர்ந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, 6 அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.

சபை எண்ணிக்கையில் தொடர்ந்து வளர்கிறது கி.பி. 33

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7

7 தேவவசனம் அதிகமாகப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.

ஸ்தேவான்மீது தேவதூஷணக் குற்றச்சாட்டு கி.பி. 33 அல்லது 34

கிறிஸ்துவே மேசியா என்று தைரியமாக அறிவித்த ஸ்தேவான், ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக தேவதூஷணம் சொன்னதாகக் குற்றம் சாட்டப்படுகிறான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:8–14

8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். 9 அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானோடு வாக்குவாதம்பண்ணினார்கள். 10 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது. 11 அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு; 12 மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; 13 பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்; 14 எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள்.