கிறிஸ்து அனைவரின் இரட்சகர் என்று பேதுரு அறிவிக்கிறார்

கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும், யூதரல்லாதவர்களுக்கும்கூட, அவரே இரட்சகர் என்று பேதுரு முதன்முறையாக அறிவிக்கிறார்.

சுமார் கி.பி. 40

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34–43

34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், 35 எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன். 36 எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாகக் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே. 37 யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே. 38 நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார். 39 யூதர்களுடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். 40 மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படிச்செய்தார். 41 என்றாலும், எல்லா மக்களும் அவரைக் காணும்படிச்செய்யாமல், அவர் உயிரோடு எழுந்தபின்பு அவரோடு சாப்பிட்டு குடித்தவர்களும் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய நாங்கள் காணும்படிச்செய்தார். 42 அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

கொர்நேலியுவும் அவருடைய நண்பர்களும் ஆவியானவரைப் பெறுகிறார்கள்

கொர்நேலியுவும் அவருடைய நண்பர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்று ஞானஸ்நானம் பெறுகிறார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:44–48

44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். 45 அவர்கள் பலவிதமான மொழிகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழ்வதையும், 46 பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம்பண்ணப்பட்ட விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரம் யூதரல்லாதவர்கள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து வியப்படைந்தார்கள். 47 அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி, 48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.

கொர்நேலியுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததைப் பேதுரு நியாயப்படுத்துகிறார்

கொர்நேலியுவைச் சந்தித்து அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்த தமது செயலைப் பேதுரு நியாயப்படுத்துகிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:1–18

1 யூதரல்லாதவர்களும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலர்களும் சகோதரர்களும் கேள்விப்பட்டார்கள். 2 பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: 3 விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள். 4 அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாக அவர்களுக்கு விளக்கிச் சொல்லத்தொடங்கி: 5 நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அது என்னவென்றால், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது. 6 அதிலே நான் உற்று கவனித்தபோது, பூமியிலுள்ள நான்குகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் பார்த்தேன். 7 அப்பொழுது: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு! என்று சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். 8 அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதுவும் எப்போதும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். 9 இரண்டாவதுமுறையும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்கவேண்டாம் என்று சொல்லியது. 10 இப்படி மூன்றுமுறை நடந்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. 11 உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனிதர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்குமுன்னே வந்துநின்றார்கள். 12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடு போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரர்களாகிய இந்த ஆறுபேரும் என்னோடு வந்தார்கள்; அந்த மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தோம். 13 அவனோ தன் வீட்டில் ஒரு தேவதூதன் நிற்கிறதைப் பார்த்ததாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை அழைத்துவரும்படி மனிதர்களை அந்த இடத்திற்கு அனுப்பு; 14 நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவதற்கான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு சொன்னான். 15 நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆரம்பத்திலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார். 16 யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைத்துப்பார்த்தேன். 17 எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை கொடுத்ததுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே கொடுத்திருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் யார்? என்றான். 18 இவைகளை அவர்கள் கேட்டபொழுது உட்கார்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் யூதரல்லாதவர்களுக்கும் கொடுத்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

சிதறிப்போன விசுவாசிகள் பக்தியுள்ள யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கிறார்கள் கி.பி. 41

ஸ்தேவானின் மரணத்திற்குப் பிறகு நடந்த துன்புறுத்தலால் சிதறிப்போன விசுவாசிகள், பேதுருவின் தரிசனத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு, பக்தியுள்ள யூதரல்லாதவர்களுக்கும் பிரசங்கிக்கிறார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:19–21

19 ஸ்தேவானுடைய மரணத்தினால் வந்த உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் நற்செய்தி வசனத்தை யூதர்களுக்குமட்டும் அறிவித்து மற்றவர்களுக்கு அறிவிக்காமல், பெனிக்கே நாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். 20 அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து, கிரேக்கர்களுடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்து போதித்தார்கள். 21 கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது; அநேக மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் வந்தார்கள்.