யூதரல்லாதோருக்கான பவுலின் ஊழியமும் அவருடைய திட்டங்களும்
தமது கடிதத்தின் போதனை மற்றும் நடைமுறை சார்ந்த பகுதிகளை முடித்தபின், பவுல் இன்னும் குறிப்பாக யூதரல்லாதோரை நோக்கிப் பேசுகிறார். அவர்கள் நற்குணத்தாலும், தங்களைக் குறித்த தேவனுடைய நோக்கத்தைப் பற்றிய அறிவாலும் நிறைந்திருப்பதால், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறக்கூடியவர்கள் என்று அவர் உறுதியாக நம்புகிறார். ஆயினும், யூதரல்லாதோரை விசுவாசத்திற்குக் கொண்டுவருவதற்காகத் தேவனிடமிருந்து பெற்ற அப்போஸ்தலப் பொறுப்பின் காரணமாக அவர்களுக்குத் துணிவுடன் எழுதியிருக்கிறார். இப்போது அவர்களைத் தேவனுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கையாக அர்ப்பணிக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் கிறிஸ்து தம்முடன் செயல்பட்டு, வல்லமையான அடையாளங்களாலும் அற்புதங்களாலும் தமது போதனையையும் பணியையும் உறுதிப்படுத்தியதால், தமது ஊழியத்தின் வெற்றியைக் குறித்து அவர் மேன்மைபாராட்டுகிறார். நற்செய்தி இன்னும் அறியப்படாத இடங்களில் அதைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற ஆர்வம், அது ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டிருந்த ரோமாபுரிக்குச் செல்லவிடாமல் அவரைத் தடுத்திருந்தது. ஆனால் இப்போது அங்கே தாம் செய்ய வேண்டியது எதுவும் மீதமில்லாததால், ஸ்பானியாவுக்குச் செல்லும் வழியில் அவர்களைச் சந்தித்து, அங்கே செல்லும் பயணத்தில் அவர்களுடைய தோழமையை அனுபவிக்க நம்புகிறார். எருசலேமில் விசுவாசத்திற்கு வந்த யூதர்களிடம், தம் மூலம் விசுவாசத்திற்கு வந்த யூதரல்லாதவர்களின் நன்கொடைகளைக் கொண்டுசெல்லத் திட்டமிட்டுள்ள பயணத்தை அவர் குறிப்பிடுகிறார். இதனால் இரு தரப்பினரையும் ஒருவரோடொருவர் இணக்கப்படுத்த நம்புகிறார்: யூதர்கள் வழியாக யூதரல்லாதோர் ஆவிக்குரிய காரியங்களை அறிந்துகொண்டதால், பொருளுக்குரிய காரியங்களில் அவர்களுக்குப் பதிலுதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள். நன்கொடைகளை ஒப்படைத்தபின், கிறிஸ்துவின் நற்செய்திக்குரிய வரங்களையும் ஆசீர்வாதங்களையும் கொண்டுவந்து அவர்களைச் சந்திக்க எண்ணியிருப்பதை அவர் மீண்டும் கூறுகிறார். தம்மை அழிக்க முயன்ற அவிசுவாசமுள்ள யூதர்களிடமிருந்து தாம் விடுவிக்கப்படவும், தமது நன்கொடை கிறிஸ்தவ யூதர்களுக்கு ஏற்றதாக இருக்கவும் ஊக்கமாக ஜெபிக்கும்படி அவர்களை வேண்டுகிறார். ஆவிக்குரிய வரங்களைப் பகிர்ந்துகொள்வதால் இரு தரப்பினரும் பலப்படும்படி அவர்களைச் சந்திக்கும் நம்பிக்கையையும், தமது ஆசீர்வாதத்தையும் தெரிவித்து முடிக்கிறார்.
கி.பி. 58
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
14 என் சகோதரர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன். 15 அப்படியிருந்தும், சகோதரர்களே, யூதரல்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படி, நான் தேவனுடைய நற்செய்தி ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாக இருந்து யூதரல்லாதவர்களுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாவதற்கு, 16 தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன். 17 எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும். 18 யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை. 19 இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன். 20 மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும், கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே, 21 நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன். 22 உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன்.
23 இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும், 24 நான் ஸ்பானியா தேசத்திற்கு பயணம்செய்யும்போது உங்களிடம் வந்து, உங்களைப் பார்க்கவும், உங்களிடம் கொஞ்சம் திருப்தியடைந்தபின்பு, அந்த இடத்திற்கு உங்களால் நான் வழியனுப்பப்படவும், எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன். 25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்வதற்காக நான் எருசலேமுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன். 26 மக்கெதோனியாவிலும், அகாயாவிலும் உள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற ஏழைகளுக்கு சில பொருளுதவிகளைச் செய்ய விருப்பமாக இருக்கிறார்கள்; 27 இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால், யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே. 28 இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு, உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன். 29 நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன். 30 மேலும் சகோதரர்களே, தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக, 31 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படுவதற்காகவும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மஉதவிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படுவதற்காகவும், 32 நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு சேர்ந்து போராடவேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும், உங்களை வேண்டிக்கொள்கிறேன். 33 சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. ஆமென்.
பவுல் பெபேயாளைப் பரிந்துரைத்துத் தமது நண்பர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்
இந்தக் கடிதத்தை எடுத்துச் சென்ற பெபேயாளுக்கு உதவும்படி ரோமாபுரியிலுள்ள கிறிஸ்தவர்களிடம் பவுல் அவளைப் பரிந்துரைக்கிறார். தாம் மிகவும் பாராட்டுகிற ஆக்கில்லாவுக்கும் பிரிஸ்கில்லாளுக்கும், அவர்களுடைய வீட்டிலுள்ள சபைக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறார். இப்போது ரோமாபுரியில் குடியேறியிருந்த தமது கிறிஸ்தவ நண்பர்கள் பலருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறார்; அவர்களில் சிலர் பெரும்பாலும் அவராலேயே விசுவாசத்திற்கு வந்தவர்களாக இருந்திருக்கலாம்.
1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, 2 எந்தக் காரியத்தில் உங்களுடைய உதவி அவளுக்குத் தேவையாக இருக்கிறதோ, அந்தக் காரியத்திலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவளை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும், எனக்கும்கூட ஆதரவாக இருந்தவள். 3 கிறிஸ்து இயேசுவிற்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும், ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். 4 அவர்கள் என்னுடைய ஜீவனுக்காகத் தங்களுடைய கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மட்டும் அல்ல, யூதரல்லாதவர்களில் உண்டான சபையார் எல்லோரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். 5 அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவிற்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள். 6 எங்களுக்காக அதிகமாக பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள். 7 அப்போஸ்தலர்களுக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முன்பே கிறிஸ்துவிற்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னோடு காவலில் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிற அன்றோனீக்கையும், யூனியாவையும் வாழ்த்துங்கள். 8 கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள். 9 கிறிஸ்துவிற்குள் நம்மோடு உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள். 10 கிறிஸ்துவிற்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் குடும்பத்தாரை வாழ்த்துங்கள். 11 என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் குடும்பத்தாரில் கர்த்தருக்குள் இருக்கிறவர்களை வாழ்த்துங்கள். 12 கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்படுகிற திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள். 13 கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள். 14 அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள். 15 பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். 16 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
பிரிவினைகளை உண்டாக்குகிறவர்களை விட்டு விலகுங்கள்
பிரிவினைகளையும் அவற்றை உண்டாக்குகிறவர்களையும் விட்டு விலகும்படி பவுல் மீண்டும் அவர்களை எச்சரிக்கிறார். அப்படிப்பட்டவர்கள் உலக ஆதாயத்தில் மட்டுமே ஆர்வமுள்ளவர்களாக இருப்பதால், கிறிஸ்துவின் போதனையைப் பிரசங்கித்து அவருக்குச் சேவை செய்வதில்லை. ஆவிக்குரிய வரங்கள் இல்லாத அவர்கள், இனிமையான பேச்சாலும் முகஸ்துதியாலும் சந்தேகமின்றி நம்புகிற புதிய கிறிஸ்தவ விசுவாசிகளின் இருதயங்களை ஏமாற்றுகிறார்கள் அல்லது வழிதவறச் செய்கிறார்கள். அவர்களுடைய தற்போதைய கீழ்ப்படிதலில் அவர் மகிழ்ந்து, நல்லதைப் பகுத்தறிந்து செய்வதில் தொடர்ந்து நிலைத்திருக்கவும், தீமையைக் குறித்துத் தூய்மையாக அல்லது குற்றமற்றவர்களாக இருக்கவும் அறிவுறுத்துகிறார்; அதாவது, எல்லாப் பொய்ப்போதனைகளையும் எல்லாத் தீய முன்மாதிரிகளையும் தவிர்க்க வேண்டும். சபைக்குள் பிரிவினைகளைக் கொண்டுவரும் சாத்தானின் ஆட்கள் விரைவில் அழிக்கப்படுவார்கள் என்று முன்னறிவித்து, தமது ஆசீர்வாதத்துடன் முடிக்கிறார்.
17 அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். 19 உங்களுடைய கீழ்ப்படிதல் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. எனவே, உங்களைக்குறித்து சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்குப் பேதைகளுமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாகச் சாத்தானை உங்களுடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.
வாழ்த்துகளும் ஞானமுள்ள ஒரே தேவனுக்கு மகிமையும்
பின்குறிப்பில், தம்முடன் இருந்த பலருடைய வாழ்த்துகளைப் பவுல் அனுப்புகிறார். மோசேயின் நியாயப்பிரமாணம் இல்லாமலேயே கிறிஸ்துவின் உண்மையான விசுவாசத்தில் அவர்களை நிலைநிறுத்தும் வல்லமை தேவனுக்கு மட்டுமே உண்டு; அவருக்கு மகிமை செலுத்தி எல்லாவற்றையும் பவுல் தொகுத்து முடிக்கிறார். இது முன்பு மறைக்கப்பட்ட இரகசியமாக இருந்தது; யூதரல்லாதோர் அழைக்கப்படுவது முன்னறிவிக்கப்பட்டிருந்தாலும் இது இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நித்திய தேவன் பவுலுக்கு வெளிப்படுத்திய கட்டளையின்படி இப்போது இது அறிவிக்கப்படுகிறது. இதனால் அவருடைய பிரசங்கத்தின் வழியாக எல்லா தேசத்தாரும் விசுவாசத்திற்குரிய கீழ்ப்படிதலை அறிந்து, விசுவாசித்துக் கீழ்ப்படிய முடியும். “ஞானமுள்ள ஒரே தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக.”
21 என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள். 22 இந்தக் கடிதத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன். 23 என்னையும், சபைகள் அனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்தின் பொருளாளரான ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள். 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். 25 ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, 26 இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் நற்செய்தியின்படியே உங்களைப் பலப்படுத்த வல்லவரும், 27 தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.