பகுதி 2: ஆலயத்தின் பிரதிஷ்டை முதல் ஆமானின் மரணம் வரை

இரண்டாம் ஆலயத்தின் பிரதிஷ்டை முதல் ஆமானின் மரணம் வரை.

அகாஸ்வேருவின் ஆட்சியில் யூதர்களுக்கு எதிர்ப்பு

கி.மு. 486

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எஸ்றா 4:6

6 அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய அரசாட்சியின் ஆரம்பத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகக் குற்ற மனுவை எழுதினார்கள்.

அர்தசஷ்டாவின் ஆட்சியில் யூதர்களுக்கு எதிர்ப்பு கி.மு. 464

அர்தசஷ்டா லாங்கிமானஸின் ஆட்சியில் யூதர்களுக்கு எதிர்ப்பு.

எஸ்றா 4:7–23

7 அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்களோடு உள்ளவர்களும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரிய மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. 8 ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் பதிவாளனாகிய சிம்சாயியும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்: 9 ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், பதிவாளனாகிய சிம்சாயியும், மற்றும் அவர்களைச் சார்ந்த தீனாவியர்கள், அபற்சாத்தியர்கள், தர்பேலியர்கள், அப்பார்சியர்கள், அற்கேவியர்கள், பாபிலோனியர்கள், சூஷங்கியர்கள், தெகாவியர்கள், ஏலாமியரானவர்களும், 10 பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார், அந்த இடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்திலே குடியேறச் செய்த மற்ற மக்களும், நதிக்கு இந்தப் புறத்தில் இருக்கிற மற்ற மக்களுமே. 11 அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இந்தப் புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்.

12 உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர்கள் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக. 13 இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், அவர்கள் எந்தவொரு வரியையும் கொடுக்கமாட்டார்கள்; அதனால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக. 14 இப்போதும், நாங்கள் அரண்மனை உப்பை சாப்பிடுவதால், ராஜாவுக்குக் குறைவு வருவதைப் பார்க்கிறது எங்களுக்கு முடியாத காரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம். 15 உம்முடைய பிதாக்களின் நடபடி புத்தகங்களில் சோதித்துப்பார்க்கக் கட்டளையிடவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் தேசத்திற்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலகம் உள்ளதாயிருந்ததால் இந்தப் பட்டணம் அழிக்கப்பட்டது என்றும், அந்த நடபடி புத்ததகங்களில் கண்டறியலாம். 16 ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதன் மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், நதிக்கு இந்தப்புறத்திலே உமக்கு ஒன்றும் இல்லாமல்போகும் என்பதை ராஜாவுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள். 17 அப்பொழுது ராஜா ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், நதிக்கு மறுபுறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின மறுமொழியாவது: உங்களுக்கு சமாதானம், 18 நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தெளிவாக வாசிக்கப்பட்டது. 19 நம்முடைய கட்டளையினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாக எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும், 20 எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு மறுபுறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும், அனைத்து வரியும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது. 21 இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்திரவு வரும்வரை அந்த மனிதர்கள் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடக் கட்டளையிடுங்கள். 22 இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் ஏன் வரவேண்டும் என்று எழுதி அனுப்பினான். 23 ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய கட்டளையின் நகல் ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் விரைவாக எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப்போய், நிர்பந்தம் செய்தும் வலுக்கட்டாயமாகவும் அவர்களை வேலைசெய்யவிடாமல் நிறுத்திப்போட்டார்கள்.

அர்தசஷ்டா தமது அரசியை விவாகரத்து செய்தல் கி.மு. 462

எஸ்தர் 1:1–2:15

1 இந்திய தேசம் முதல் கூஷ் தேசம்வரையுள்ள 127 நாடுகளையும் அரசாட்சி செய்த அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: 2 ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரண்மனையில் இருக்கிற தன்னுடைய ராஜ்ஜியத்தின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருந்தான். 3 அவனுடைய அரசாட்சியின் மூன்றாம் வருடத்திலே தன்னுடைய அதிகாரிகளுக்கும் வேலைக்காரர்களுக்கும் விருந்தளித்தான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் ஆளுனர்களும், பிரபுக்களும், அவனுடைய சமுகத்தில் வந்திருந்தார்கள். 4 அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் 180 நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான். 5 அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரண்மனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லா மக்களுக்கும் ராஜ அரண்மனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழு நாட்கள் விருந்தளித்தான். 6 அங்கே வெண்கலத் தூண்களின்மேலே உள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது. 7 பொன்னால் செய்யப்பட்ட பலவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சைரசம் ராஜாவின் கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு பரிபூரணமாகப் பரிமாறப்பட்டது. 8 அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன்னுடைய அரண்மனையின் பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியால், முறைப்படி குடித்தார்கள்; ஒருவனும் கட்டாயப்படுத்தவில்லை. 9 ராணியாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரண்மனையிலே பெண்களுக்கு ஒரு விருந்தளித்தாள். 10 ஏழாம் நாளிலே ராஜா திராட்சைரசத்தினால் சந்தோஷமாக இருக்கும்போது, பேரழகியாயிருந்த ராணியாகிய வஸ்தியின் அழகை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காண்பிப்பதற்காக, ராஜகிரீடம் அணிந்தவளாக, அவளைத் தனக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று, 11 ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் பணிவிடை செய்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் ராஜா கட்டளையிட்டான். 12 ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராணியாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே எரிச்சல் அடைந்தான். 13 அந்த சமயத்தில் ராஜசமுகத்தில் இருக்கிறவர்களும், ராஜ்ஜியத்தின் முதன்மை ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர்கள் மேதியர்களுடைய ஏழு பிரபுக்களும் அவன் அருகில் இருந்தார்கள். 14 ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடம் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால செயல்பாடுகளை அறிந்த பண்டிதர்களை நோக்கி: 15 ராஜாவாகிய அகாஸ்வேரு அதிகாரிகளின் மூலமாகச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராணியாகிய வஸ்தி செய்யாமற்போனதினால், தேசத்தின் சட்டப்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான். 16 அப்பொழுது மெமுகான் ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் முன்னே மறுமொழியாக: ராணியாகிய வஸ்தி ராஜாவிற்கு மட்டும் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய எல்லா நாடுகளிலுமுள்ள எல்லாபிரபுக்களுக்கும் எல்லா மக்களுக்குங்கூட அநியாயம் செய்தாள். 17 ராஜாவாகிய அகாஸ்வேரு ராணியாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டேன் என்று சொன்ன செய்தி எல்லாப் பெண்களுக்கும் தெரியவந்தால், அவர்களும் தங்களுடைய கணவன்களைத் தங்களுடைய பார்வையில் அற்பமாக நினைப்பார்கள். 18 இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் பெண்கள் ராணியின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும். 19 ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைவிட சிறந்த மற்றொரு பெண்ணுக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை அனுப்பி, அது மீறப்படாதபடி, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசத்தின் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். 20 இப்படி ராஜா முடிவெடுத்த காரியம் தமது ராஜ்ஜியமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லாப் பெண்களும் தங்கள் கணவன்களை மதிப்பார்கள் என்றான். 21 இந்த வார்த்தை ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் நலமாகத் தோன்றியதால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து, 22 எந்த கணவனும் தன்னுடைய வீட்டிற்குத் தானே அதிகாரியாக இருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த மக்களுடைய மொழியிலே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற சொந்த எழுத்திலும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், ராஜாவின் எல்லா நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.

2:1 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான். 2 அப்பொழுது ராஜாவிற்குப் பணிவிடை செய்கிற அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: அழகாக இருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும். 3 அதற்காக ராஜா தம்முடைய ராஜ்ஜியத்தின் நாடுகளிலெல்லாம் பொறுப்பாளர்களை வைக்கவேண்டும்; இவர்கள் அழகாக இருக்கிற எல்லா கன்னிப்பெண்களையும் ஒன்றுகூட்டி, சூசான் அரண்மனையில் இருக்கிற கன்னிமாடத்திற்கு அழைத்துவந்து, பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாயினிடம் ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். 4 அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி, வஸ்திக்கு பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவிற்கு நலமாகத் தோன்றியபடியால் அப்படியே செய்தான்.

5 அப்பொழுது சூசான் அரண்மனையிலே பென்யமீனியனாகிய கீசின் மகன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் மகன் மொர்தெகாய் என்னும் பெயருள்ள ஒரு யூதன் இருந்தான். 6 அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடு எருசலேமிலிருந்து பிடித்து கொண்டுபோகப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான். 7 அவன் தன்னுடைய சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பன் இல்லை; அந்தப் பெண் அழகும் விரும்பத்தக்கவளுமாக இருந்தாள்; அவளுடைய தகப்பனும், தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன்னுடைய மகளாக எடுத்துக்கொண்டான். 8 ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரபலமாகி, அநேக பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரண்மனையிலுள்ள யேகாயினிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, பெண்களைக் காவல்காக்கிற யேகாயினிடம் ஒப்புவிக்கப்பட்டாள். 9 அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான். 10 எஸ்தரோ தன்னுடைய மக்களையும், தன்னுடைய உறவினர்களையும் அறிவிக்காமல் இருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான். 11 எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்கும் காரியத்தையும் அறிய மொர்தெகாய் தினந்தோறும் கன்னிமாடத்து முற்றத்திற்கு முன்பாக உலாவுவான். 12 ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதங்கள் வாசனைப்பொருட்களாலும், பெண்களுக்குரிய மற்ற அலங்கரிப்புகளினாலும் அலங்கரிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இப்படியாக பெண்களின் முறையின்படி பன்னிரண்டு மாதங்களாகச் செய்துமுடித்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடம் வர, அவளவளுடைய முறை வருகிறபோது, 13 இப்படி அலங்கரிக்கப்பட்ட பெண் ராஜாவிடம் போவாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடு ராஜ அரண்மனைக்குப் போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளை எல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும். 14 மாலையில் அவள் உள்ளே போய், காலையில், பிடித்த பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய சாஸ்காசுடைய பொறுப்பில் இருக்கிற பெண்களின் இரண்டாம் மாடத்திற்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பெயர்சொல்லி அழைக்கும்வரை அவள் ஒருபோதும் ராஜாவிடம் போகக்கூடாது. 15 மொர்தெகாய் தனக்கு மகளாய் ஏற்றுக்கொண்டவளும், அவனுடைய சிறிய தகப்பனாகிய அபியாயேலின் மகளுமான எஸ்தர் ராஜாவிடம் போவதற்கு முறை வந்தபோது, அவள் பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாய் நியமித்த காரியத்தைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லோருடைய கண்களிலும் தயவு கிடைத்தது.