பகுதி 3: நெகேமியாவின் சீர்திருத்தத்திலிருந்து வேதாகமத் தொகுப்பின் நிறைவுவரை

நெகேமியாவின் முதல் பணிநியமனம்

கி.மு. 445

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நெகேமியா 1:1–2:11

1 அகலியாவின் மகனாகிய நெகேமியாவின் செயல்பாடுகள்: இருபதாம் வருடம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரண்மனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், 2 என்னுடைய சகோதரர்களில் ஒருவனாகிய அனானியும், வேறு சில மனிதர்களும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பிலிருந்து தப்பின யூதர்களின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். 3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீதியாக இருக்கிறவர்கள் அந்த தேசத்திலே கொடிய தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் மதில் இடிக்கப்பட்டும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கிறது என்றார்கள். 4 இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாட்களாகத் துக்கப்பட்டு, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி: 5 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தா யெகோவாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, 6 உமது அடியார்களாகிய இஸ்ரவேல் மக்களுக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் மக்களாகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என்னுடைய தகப்பன் வீட்டார்களும் பாவம் செய்தோம். 7 நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாக நடந்தோம்; நீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாமற்போனோம். 8 நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை தேசங்களுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், 9 நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே சிதறுண்டுபோனவர்கள் வானத்தின் கடைசி முனையில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என்னுடைய நாமம் விளங்குவதற்காக நான் தெரிந்துகொண்ட இடத்திற்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். 10 தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியார்களும் உமது மக்களும் இவர்கள்தானே. 11 ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்திற்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியார்களின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்து, இந்த மனிதனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கச்செய்தருளும் என்று ஜெபம் செய்தேன். நான் ராஜாவிற்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.

2:1 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருட ஆட்சியின் நிசான் மாதத்திலே, திராட்சைரசம் ராஜாவிற்கு முன்பாக வைத்திருக்கும்போது, நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன்பு ஒருபோதும் அவருக்கு முன்பாக துக்கமாக இருந்ததில்லை. 2 அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாக இருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே தவிர வேறொன்றும் இல்லை என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து, 3 ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் இடமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இல்லாமல் இருப்பது எப்படி என்றேன். 4 அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்செய்து, 5 ராஜாவைப் பார்த்து: ராஜாவிற்கு விருப்பமாயிருந்து, அடியேனுக்கு உமது முன்னிலையில் தயவு கிடைத்ததானால், என்னுடைய தகப்பன்மார்களின் கல்லறைகள் இருக்கும் பட்டணத்தைக் கட்டுவதற்கு, யூதா தேசத்திற்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன். 6 அப்பொழுது ராணியும், பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன்னுடைய பிரயாணத்திற்கு எத்தனை நாட்கள் ஆகும், நீ எப்பொழுது திரும்பி வருவாய் என்று கேட்டார். இவ்வளவுநாட்கள் ஆகுமென்று நான் ராஜாவிற்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்கு விருப்பமானது. 7 பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவிற்கு விருப்பமாயிருந்தால், நான் யூதா தேசத்திற்குப்போய்ச் சேரும்வரை, நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்கள் நான் போக அனுமதியளிக்கவும் அவர்களுக்கு நான் கடிதங்கள் கொடுப்பதற்காகவும், 8 தேவாலயத்தில் இருக்கிற கோட்டையின் கதவு வேலைக்கும், நகரமதிலின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுப்பதற்காகவும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்ததால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார். 9 அப்படியே நான் நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்களிடத்திற்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடு இராணுவ அதிகாரிகளையும், குதிரைவீரர்களையும் அனுப்பியிருந்தார். 10 இதை ஓரோனிய பட்டணத்து வாசியாகிய சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் மக்களின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் கோபமாக இருந்தது.

11 நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு,