மோசே ஒழுக்க நியாயப்பிரமாணத்தை மீண்டும் எடுத்துரைத்தல் (continued)

கி.மு. 1451

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உபாகமம் 10:1–5

1 அக்காலத்திலே யெகோவா என்னை நோக்கி: “நீ முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்திற்கு வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக. 2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார். 3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன். 4 முன்னே சபைகூடிவந்த நாளில் யெகோவா, மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்குச் சொன்ன பத்துக்கற்பனைகளையும் முன்பு அவர் எழுதியிருந்ததுபோலவே அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார். 5 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைக்கப்பட்டிருக்கிறது.

உபாகமம் 10:10–11:32

10 “நான் முன்புபோலவே நாற்பது நாட்கள் இரவும்பகலும் மலையில் இருந்தேன்; யெகோவா அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார். 11 யெகோவா என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் அவர்கள் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக, நீ எழுந்து, மக்களுக்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.

12 “இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புசெலுத்தி, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய யெகோவாவைப் பணிந்துகொண்டு, 13 நான் இன்று உனக்குக் கற்பிக்கிற யெகோவாவுடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார். 14 இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள். 15 ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். 16 ஆகையால் நீங்கள் இனி நீங்கள் பிடிவாதம் செய்யாமல், உங்கள் இருதயத்தை சுத்தம் செய்யுங்கள். 17 உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல. 18 அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார். 19 நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்ததினால், அந்நியர்களைச் சிநேகிப்பீர்களாக. 20 உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. 21 அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்னுடைய தேவன் அவரே. 22 உன் முற்பிதாக்கள் எழுபதுபேராக எகிப்திற்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய பெருக்கத்திலே வானத்தின் நட்சத்திரங்களைப் போலாக்கினார்.

11:1 “நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய பிரமாணங்களையும், கட்டளைகளையும், நியாயங்களையும், கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக. 2 உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சிட்சிகளையும், அவருடைய மகத்துவத்தையும், பலத்த கையையும், ஓங்கிய புயத்தையும், 3 அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய செயல்களையும், 4 எகிப்திய படையும் அவர்களுடைய குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின்தொடர்ந்து வரும்போது, யெகோவா சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை அவர்கள்மேல் புரளச்செய்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செயலையும், 5 நீங்கள் இவ்விடத்திற்கு வரும்வரை அவர் உங்களுக்கு வனாந்திரத்தில் செய்ததையும், 6 ரூபன் வம்சத்தைச் சேர்ந்த எலியாபின் மகன்களான தாத்தானையும், அபிராமையும், அவர்களுடைய குடும்பங்களையும், அவர்களுடைய கூடாரங்களையும், இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருட்களையும் பூமி தன் வாயைத் திறந்து விழுங்கச்செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள். 7 யெகோவா செய்த மகத்துவமான செயல்களையெல்லாம் உங்களுடைய கண்கள் அல்லவோ கண்டது. 8 “ஆகையால் நீங்கள் பலப்படுவதற்கும், 9 நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திற்குள் நுழைந்து அதைச் சொந்தமாக்குவதற்கும், யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழ்வதற்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக. 10 நீ சொந்தமாக்கப்போகிற தேசம், நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போல் இருக்காது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய். 11 நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம்; அது வானத்தின் மழைத்தண்ணீரைக் குடிக்கும் தேசம்; 12 அது உன் தேவனாகிய யெகோவா விசாரிக்கிற தேசம், வருடத்தின் துவக்கமுதல் வருடத்தின் முடிவுவரை எப்பொழுதும் உன் தேவனாகிய யெகோவாவின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். 13 “நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி, அவரைப் பணிந்துகொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், 14 நீ உன்னுடைய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேர்க்கும்படி, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச்செய்து, 15 மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படிச் செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார். 16 உங்களுடைய இருதயம் ஏமாற்றப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளை வணங்காமலும் இருக்க எச்சரிக்கையாயிருங்கள். 17 இல்லாவிட்டால் யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் வந்து, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடுக்காமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; யெகோவா உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள். 18 ஆகையால் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த தேசத்தில் உங்களுடைய நாட்களும், உங்களுடைய பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும்வரை நீடித்திருப்பதற்கு, 19 நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, 20 அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. 21 அவைகளை உங்களுடைய வீட்டு நிலைகளிலும் உங்களுடைய வாசல்களிலும் எழுதுவீர்களாக. 22 நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் கவனமாகக் கைக்கொள்வீர்களானால், 23 யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த மக்களையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமும், பலத்ததுமான மக்களை நீங்கள் துரத்துவீர்கள். 24 உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்திரத்தையும் லீபனோனையும் துவங்கி, ஐப்பிராத்து நதியையும் துவங்கி, கடைசி மத்திய தரை சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும். 25 ஒருவரும் உங்களுக்கு எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் திகிலும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரச்செய்வார். 26 “இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். 27 இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், 28 எங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும். 29 நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை நுழையச்செய்யும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும், ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறவேண்டும். 30 அவைகள் யோர்தான் அப்புறத்திலே சூரியன் மறைகிற மேற்குவழியாகக் கானானியர்கள் குடியிருக்கிற பகுதியிலே, கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகில் அல்லவோ இருக்கிறது? 31 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள். 32 ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.