பகுதி 2: மோசே பணிக்காக நியமிக்கப்படுதல்

தேவனுடைய தூதுவராக மோசே பணிக்காக நியமிக்கப்படுதல்.

கி.மு. 1491

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யாத்திராகமம் 3:1–4:28

1 மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய ஓரேப்வரை வந்தான். 2 அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. 3 அப்பொழுது மோசே: “இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன்” என்றான். 4 அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான். 5 அப்பொழுது அவர்: “இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். 6 பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான். 7 அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். 8 அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். 9 இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். 10 நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா” என்றார். 11 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். 12 அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.

13 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். 14 அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார். 15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம். 16 நீ போய், இஸ்ரவேலின் மூப்பர்களைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா எனக்கு தரிசனமாகி, உங்களை நிச்சயமாக சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும், 17 நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுடைய தேசத்திற்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்று சொல். 18 அவர்கள் உன்னுடைய வார்த்தையை கேட்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் எகிப்தின் ராஜாவினிடம் போய்: எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணம்போய், எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள். 19 ஆனாலும், எகிப்து ராஜா என்னுடைய கையின் வல்லமையைக் கண்டாலொழிய, உங்களைப் போகவிடமாட்டான் என்று நான் அறிவேன். 20 ஆகையால், நான் என்னுடைய கையை நீட்டி, எகிப்தின் நடுவில் நான் செய்யும் எல்லாவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின்பு அவன் உங்களைப் போகவிடுவான். 21 அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை. 22 ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார்.

4:1 அப்பொழுது மோசே: “அவர்கள் என்னை நம்பமாட்டார்கள்; என்னுடைய வார்த்தையை கேட்கமாட்டார்கள்; யெகோவா உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” என்றான். 2 யெகோவா அவனை நோக்கி: “உன்னுடைய கையில் இருக்கிறது என்ன” என்றார். “ஒரு கோல்” என்றான். 3 “அதைத் தரையிலே போடு” என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான். 4 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி” என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது. 5 ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிற தங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். 6 மேலும், யெகோவா அவனை நோக்கி: “உன் கையை உன்னுடைய மடியிலே போடு” என்றார்; அவன் தன் கையைத் தன்னுடைய மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவனுடைய கை உறைந்த பனியைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. 7 அவர்: “உன்னுடைய கையைத் திரும்பவும் உன்னுடைய உன் மடியிலே போடு” என்றார். அவன் தன்னுடைய கையைத் திரும்பத் தன்னுடைய மடியிலே போட்டு, மீண்டும் வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலானது. 8 அப்பொழுது அவர்: “முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்காமலும்போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். 9 இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்னுடைய வார்த்தையைக் கேட்காமலும் இருந்தால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை எடுத்து நிலத்தில் ஊற்று; நதியில் எடுத்த தண்ணீர் காய்ந்த நிலத்தில் இரத்தமாகும்” என்றார். 10 அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “ஆண்டவரே, இதற்கு முன்பாவது, தேவரீர் உமது அடியேனோடு பேசினதற்குப் பின்பாவது நான் பேச்சில் வல்லவன் இல்லை; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்றான். 11 அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், பார்வையற்றவனையும் உண்டாக்கினவர் யார்? யெகோவாவாகிய நான் அல்லவா? 12 ஆதலால், நீ போ; நான் உன்னுடைய வாயோடு இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” என்றார். 13 அதற்கு அவன்: “ஆண்டவரே. நீர் அனுப்ப விரும்புகிற யாரையாவது அனுப்பும்” என்றான். 14 அப்பொழுது யெகோவா மோசேயின்மேல் கோபப்பட்டு: “லேவியனாகிய ஆரோன் உன்னுடைய சகோதரன் அல்லவா? அவன் நன்றாக பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவனுடைய இருதயம் மகிழும். 15 நீ அவனுடன் பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன்னுடைய வாயிலும் அவனுடைய வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்குக் காட்டுவேன். 16 அவன் உனக்குப் பதிலாக மக்களோடு பேசுவான்; இந்தவிதமாக அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய். 17 இந்தக் கோலையும் உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய்” என்றார்.

18 மோசே தன்னுடைய மாமனாகிய எத்திரோவிடம் வந்து: “நான் எகிப்திலிருக்கிற என்னுடைய சகோதரர்களிடத்திற்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்திரவு தரவேண்டும்” என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: “சுகமாகப் போய்வாரும்” என்றான். 19 பின்னும் யெகோவா மீதியானிலே மோசேயை நோக்கி: “நீ எகிப்திற்குத் திரும்பிப் போ, உன்னுடைய உயிரை எடுக்கத்தேடின மனிதர்கள் எல்லோரும் இறந்துபோனார்கள்” என்றார். 20 அப்பொழுது மோசே தன்னுடைய மனைவியையும் தன்னுடைய பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்திற்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு போனான். 21 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின்பு, நான் உன்னுடைய கையில் கொடுத்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாக செய்யும்படி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், நான் அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் மக்களைப் போகவிடமாட்டான். 22 அப்பொழுது நீ பார்வோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய மகன், என்னுடைய மூத்தமகன். 23 எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மகனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்று சொன்னால் நான் உன்னுடைய மகனை, உன்னுடைய மூத்தமகனை கொல்லுவேன் என்று யெகோவா சொன்னார் என்று சொல்” என்றார். 24 வழியிலே தங்கும் இடத்தில் யெகோவா மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார். 25 அப்பொழுது சிப்போராள் ஒரு கூர்மையான கல்லை எடுத்து, தன் மகனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவனுடைய கால்களுக்கு முன்பாக போட்டு: “நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள். 26 பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: “விருத்தசேதனத்தினால் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள்.

27 ஆரோனை நோக்கி: “நீ வனாந்திரத்தில் மோசேயை சந்திக்கப்போ” என்றார். அவன் போய், தேவனுடைய மலையில் அவனைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான். 28 அப்பொழுது மோசே தன்னை அனுப்பின யெகோவாவுடைய எல்லா வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட எல்லா அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.