பல்வகைச் சட்டங்களும் ஒழுக்க மற்றும் சடங்குச் சட்டங்களும்

கி.மு. 1490

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லேவியராகமம் 17–18

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 2 “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால்: 3 இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலாகிய யெகோவாவுடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக, யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல், 4 முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாகக் கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான். 5 ஆகையால் இஸ்ரவேல் மக்கள் வெளியிலே பலியிடுகிற தங்களுடைய பலிகளை, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள். 6 அங்கே ஆசாரியன், இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன். 7 தாங்கள் முறைகேடான முறையில் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாமல் இருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக. 8 மேலும் நீ அவர்களை நோக்கி: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளைச் செலுத்தி, 9 அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். 10 “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச் சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அவனை அறுப்புண்டுபோகச் செய்வேன். 11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. 12 ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம் சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம்” என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன். 13 “இஸ்ரவேல் மக்களிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சாப்பிடத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பறவையையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தச்செய்து, மண்ணினால் அதை மூடவேண்டும். 14 சகல மாம்சத்திற்கும் இரத்தம் உயிராக இருக்கிறது; இரத்தம் உயிருக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தம் தானே; அதைச் சாப்பிடுகிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன். 15 தானாக இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது சாப்பிட்டவன் எவனும் அவன் இஸ்ரவேலனானாலும் அந்நியனானாலும், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாக இருப்பான். 16 அவன் தன் உடைகளைத் துவைக்காமலும், குளிக்காமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல்” என்றார்.

18:1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 2 “நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய யெகோவா. 3 நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், 4 என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. 5 “ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் யெகோவா. 6 “ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்குவதற்கு அவளைச் சேரக்கூடாது; நான் யெகோவா. 7 உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது. 8 உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம். 9 உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது. 10 உன் மகனுடைய மகளையாவது உன் மகளுடைய மகளையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அது உன்னுடைய நிர்வாணம். 11 உன் தகப்பனுடைய மனைவியிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த மகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உனக்குச் சகோதரி. 12 உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின உறவானவள். 13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின உறவானவள். 14 உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கக்கூடாது; அவன் மனைவியைச் சேராதே; அவள் உன் தகப்பனுடைய சகோதரி. 15 உன் மருமகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் மகனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கக்கூடாது. 16 உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம். 17 ஒரு பெண்ணையும் அவளுடைய மகளையும் நிர்வாணமாக்கக்கூடாது; அவளுடைய மகன்களின் மகளையும் மகளின் மகளையும் நிர்வாணமாக்கும்படி திருமணம் செய்யக்கூடாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின உறவானவர்கள்; அது முறைகேடு. 18 உன் மனைவி உயிரோடிருக்கும்போது அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்குவதற்காக அவளைத் திருமணம் செய்யக்கூடாது. 19 “பெண்ணானவள் மாதவிலக்கால் விலக்கப்பட்டிருக்கும்போது, அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே. 20 பிறனுடைய மனைவியோடே சேர்ந்து உடலுறவுகொண்டு, அவள்மூலம் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம். 21 நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகு தெய்வத்திற்கென்று தீயில் பலியாக்க இடம்கொடுக்காதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் யெகோவா. 22 பெண்ணோடு உடலுறவு செய்வதுபோல ஆணோடே உடலுறவு செய்யவேண்டாம்; அது அருவருப்பானது. 23 எந்தவொரு மிருகத்தோடும் நீ உடலுறவுகொண்டு, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்; பெண்ணானவள் மிருகத்தோடே உடலுறவுகொள்ள ஏதுவாக அதற்கு முன்பாக நிற்கக்கூடாது; அது அருவருப்பான தாறுமாறு. 24 “இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற மக்கள் இவைகளெல்லாவற்றாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 25 ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் மக்களை புறக்கணித்துவிடும். 26 இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர்கள் செய்ததினாலே தேசம் தீட்டானது. 27 இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த மக்களை தேசம் புறக்கணித்ததைப்போல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் புறக்கணிக்காதிருக்க, 28 நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம். 29 இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் ஒன்றையாவது யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போவார்கள். 30 ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலிருக்க என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.