மிரியாமின் தொழுநோய்

கி.மு. 1490

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எண்ணாகமம் 12:1–15

1 எத்தியோப்பியா தேசத்து பெண்ணை மோசே திருமணம்செய்திருந்தபடியால், மிரியாமும் ஆரோனும் அவன் திருமணம்செய்த எத்தியோப்பியா தேசத்து பெண்ணினால் அவனுக்கு விரோதமாகப் பேசி: 2 “யெகோவா மோசேயைக்கொண்டுமட்டும் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார். 3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதர்களிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான். 4 உடனே யெகோவா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: “நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள். 5 யெகோவா மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள். 6 அப்பொழுது அவர்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், யெகோவாவாகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன். 7 என்னுடைய தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என்னுடைய வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். 8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாக பேசுகிறேன்; அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என்னுடைய தாசனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச, உங்களுக்குப் பயமில்லாமல் போனது என்ன என்றார். 9 யெகோவாவுடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார். 10 மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற தொழுநோயாளியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் தொழுநோயாளியாக இருக்கக் கண்டான். 11 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “ஆ, என்னுடைய ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாகச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாமலிரும். 12 தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாமலிருப்பாளாக” என்றான். 13 அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “என்னுடைய தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான். 14 யெகோவா மோசேயை நோக்கி: “அவளுடைய தகப்பன் அவளுடைய முகத்திலே காறித் துப்பினால், அவள் ஏழுநாட்கள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றார். 15 அப்படியே மிரியாம் ஏழு நாட்கள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படும்வரை மக்கள் பயணம் செய்யாமலிருந்தார்கள்.

பதினான்காம் பயணம்: ஆஸரோத் முதல் ரித்மா வரை

பதினான்காம் பயணம்: ஆஸரோத்திலிருந்து ரித்மா (எண்ணாகமம் 33:18), அல்லது பாரான் (எண்ணாகமம் 12:16), அல்லது காதேஸ்பர்னேயா (எண்ணாகமம் 32:8) வரை.

எண்ணாகமம் 33:18

18 ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே முகாமிட்டார்கள்.

எண்ணாகமம் 12:16

16 பின்பு, மக்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.

உளவாளிகள் அனுப்பப்படுதல் கி.மு. 1489

எண்ணாகமம் 13

1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதர்களை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய மனிதனை அனுப்பவேண்டும் என்றார். 3 மோசே யெகோவாவுடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள். 4 அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா. 5 சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத். 6 யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப். 7 இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால். 8 எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா. 9 பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி. 10 செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல். 11 யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி. 12 தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல். 13 ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர். 14 நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி. 15 காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல். 16 தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான். 17 அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, 18 தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், 19 அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், 20 நிலம் எப்படிப்பட்டது அது வளமானதோ வளமில்லாததோ என்றும்; அதில் மரங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியம்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சைச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாக இருந்தது. 21 அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து, 22 தெற்கேயும் சென்று, எபிரோன்வரை போனார்கள்; அங்கே ஏனாக்கின் மகன்களாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருடங்களுக்குமுன்னே கட்டப்பட்டது. 23 பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதுளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். 24 இஸ்ரவேல் மக்கள் அங்கே அறுத்த திராட்சைக்குலையினால், அந்த இடம் எஸ்கோல்பள்ளத்தாக்கு எனப்பட்டது. 25 அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள். 26 அவர்கள் பாரான் வனாந்திரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் செய்தியை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். 27 அவர்கள் மோசேயை நோக்கி: “நீர் எங்களை அனுப்பின தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. 28 ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற மக்கள் பலவான்கள்; பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாக இருக்கிறது; அங்கே ஏனாக்கின் மகன்களையும் கண்டோம். 29 அமலேக்கியர்கள் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியர்களும், எபூசியர்களும், எமோரியர்களும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர்கள் மத்திய தரைக் கடல் அருகிலும் யோர்தானுக்கு அருகில் குடியிருக்கிறார்கள்” என்றார்கள். 30 அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம்” என்றான். 31 அவனோடுகூடப் போய்வந்த மனிதர்களோ: “நாம் போய் அந்த மக்களோடு எதிர்க்க நம்மாலே முடியாது; அவர்கள் நம்மைவிட பலவான்கள் என்றார்கள். 32 “நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன்னுடைய குடிகளை தாங்களே உண்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட மக்கள் எல்லோரும் மிகவும் பெரிய ஆட்கள். 33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் மகன்களாகிய இராட்சதர்களையும் கண்டோம்; நாங்கள் எங்களுடைய பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்களுடைய பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் மக்களுக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.