பலிகளுக்கான சட்டங்கள்
கி.மு. 1490
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யெகோவா ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவனை நோக்கி: 2 “நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும். 3 அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; யெகோவாவுடைய சந்நிதியில், தான் அங்கீகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து, 4 தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கீகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, 5 யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 6 பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டவேண்டும். 7 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி, 8 அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பார்களாக. 9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 10 “அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து, 11 யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 12 பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக. 13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 14 “அவன் யெகோவாவுக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன். 15 அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு, 16 அதின் இரைப்பையையும் அதின் உள்ளவைகளையும் எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, 17 பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
2:1 “ஒருவன் உணவுபலியாகிய காணிக்கையைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டுமானால், அவனுடைய காணிக்கை மெல்லிய மாவாக இருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் ஊற்றி, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு, 2 அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் நன்றியின் அடையாளமாக எரிக்கக்கடவன்; அது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 3 அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது. 4 “நீ படைப்பது அடுப்பில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அதிரசங்களாகவோ, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளாகவோ இருப்பதாக. 5 நீ படைப்பது அடுப்பில் தட்டையான பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாக இருப்பதாக. 6 அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் ஊற்றுவாயாக; இது ஒரு உணவுபலி. 7 நீ படைப்பது அடுப்பில் பொரிக்கும் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு பலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக. 8 இப்படிச் செய்யப்பட்ட உணவுபலியைக் யெகோவாவுக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, 9 அந்த சமைக்கப்பட்ட உணவுபலியிலிருந்து ஆசாரியன் நன்றியின் அடையாளமாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 10 இந்த உணவுபலியில் மீதியானது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது. 11 “நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவு உள்ளவைகளையும் தேன் உள்ளவைகளையும் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கவேண்டாம். 12 முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் யெகோவாவுக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகளை நறுமண வாசனையாக எரிக்கக்கூடாது. 13 நீ படைக்கிற எந்த உணவுபலியிலும் உப்பு சேர்க்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் உணவுபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக. 14 “முதற்பலன்களை உணவுபலியாக நீ யெகோவாவுக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய். 15 அதின்மேல் எண்ணெய் ஊற்றி அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு உணவுபலி. 16 பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, நன்றியின் அடையாளமான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றுடன் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு செலுத்தும் தகனபலி.
3:1 “ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தக்கடவன். 2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 3 பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும், 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக. 5 அதை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு எரிக்கக்கடவர்கள்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 6 “அவன் யெகோவாவுக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக. 7 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, 8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 9 பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடு எலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், 10 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். 11 அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன ஆகாரம். 12 “அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, 13 அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 14 அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும், 15 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். 16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் யெகோவாவுடையது. 17 கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய குடியிருப்புகள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார்.