பலிகளுக்கான சட்டங்கள் (continued)

கி.மு. 1490

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லேவியராகமம் 5–6

1 “சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவிக்காமலிருந்து பாவம்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். 2 அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இந்தவித அசுத்தமான யாதொரு பொருளையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான். 3 அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான். 4 மனிதர்கள் பதறி ஆணையிடும் எந்தக் காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான். 5 இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன், தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு, 6 தான் செய்த பாவத்திற்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். 7 “ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்திற்காக இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். 8 அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரணபலிக்குரியதை முதலில் செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்திலிருந்து கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து, 9 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி. 10 மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாகச் செலுத்தக்கடவன்; இந்தவிதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். 11 “இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்திற்காக ஒரு கிலோ அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரணபலியாக இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து, 12 அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் நன்றியின் அடையாளமான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி. 13 இந்தவிதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்திற்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது உணவுபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார். 14 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 15 “ஒருவன் யெகோவாவுக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றம்செய்து, அறியாமையினால் பாவத்திற்குட்பட்டால், அவன் தன் குற்றத்திற்காக பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் மதிப்புள்ள பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை குற்றநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, 16 பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த குற்றத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். 17 “ஒருவன் செய்யத்தகாததென்று யெகோவாவுடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்திற்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாக இருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான். 18 அதினால் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பிற்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த குற்றத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். 19 இது குற்றநிவாரணபலி; அவன் யெகோவாவுக்கு விரோதமாகக் குற்றம்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.

6:1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 2 “ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானை ஏமாற்றி, அல்லது ஒரு பொருளை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடையூறுசெய்து, 3 அல்லது காணாமற்போனதைக் கண்டுபிடித்து அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாக சத்தியம் செய்து, மனிதர்கள் செய்யும் இதைப்போல யாதொரு காரியத்தில் பாவம்செய்தான் என்றால், 4 அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானதால், தான் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டதையும், இடையூறுசெய்து பெற்றுக்கொண்டதையும், தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும், 5 பொய்யாக சத்தியம் செய்து சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் சேர்த்து, அதைத் தான் குற்றநிவாரணபலியை செலுத்தும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு, 6 தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பீட்டுக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் யெகோவாவுக்குச் செலுத்த, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக. 7 யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்வானாக; அப்பொழுது, அவனைக் குற்றவாளியாக்கிய அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.

8 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 9 “நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இரவுமுதல் விடியற்காலம்வரை பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும். 10 ஆசாரியன் சணல்நூல் உள்ளாடையை தன் இடுப்பில் போட்டுக்கொண்டு, சணல்நூல் அங்கியை அணிந்து, பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்தின் அருகில் கொட்டி, 11 பின்பு தன் உடைகளைக் கழற்றி, வேறு உடைகளை அணிந்துகொண்டு, அந்தச் சாம்பலை முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன். 12 பலிபீடத்தின்மேலிருக்கிற நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டு எரிக்கக்கடவன். 13 பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபோதும் அணைந்துபோகக்கூடாது.

14 “உணவுபலியின் விதிமுறைகள் என்னவென்றால், ஆரோனின் மகன்கள் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்திற்கு முன்னே படைக்கவேண்டும். 15 அவன், உணவுபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, உணவுபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை நன்றியின் அடையாளமாகப் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன். 16 அதில் மீதியானதை ஆரோனும் அவனுடைய மகன்களும் சாப்பிடுவார்களாக; அதை புளிப்பில்லாத அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டும்; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் அதைச் சாப்பிடவேண்டும். 17 அதைப் புளித்தமாவுள்ளதாக வேகவைக்கவேண்டாம்; அது எனக்கு செலுத்தப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலவும் குற்றநிவாரணபலியைப் போலவும் மகா பரிசுத்தமானது. 18 ஆரோனின் சந்ததியில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; யெகோவாவுக்கு செலுத்தப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாக இருப்பான்” என்று சொல் என்றார். 19 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 20 “ஆரோன் அபிஷேகம் செய்யப்படும் நாளில், அவனும் அவனுடைய மகன்களும் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நிரந்தரமான உணவுபலியாகச் செலுத்தக்கடவர்கள். 21 அது பாத்திரத்திலே எண்ணெய்விட்டு வேகவைக்கவேண்டும்; வேகவைத்தபின்பு அதைக் கொண்டுவந்து, உணவுபலியாக யெகோவாவுக்கு நறுமண வாசனையாகப் படைக்கக்கடவாய். 22 அவனுடைய மகன்களில் அவனுடைய இடத்திலே அபிஷேகம்செய்யப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் எரிக்கப்படவேண்டும்; அது யெகோவா ஏற்படுத்தின நிரந்தரமான கட்டளை. 23 ஆசாரியனுக்காக செலுத்தப்படும் எந்த உணவுபலியும் சாப்பிடாமல், முழுவதும் எரிக்கப்படவேண்டும்” என்றார்.

24 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 25 “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் யெகோவாவுடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது. 26 பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைச் சாப்பிடுவானாக; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது சாப்பிடப்படவேண்டும். 27 அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாக இருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு உடையில் தெறித்ததென்றால், இரத்தம்தெறித்த உடையைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும். 28 அது சமைக்கப்பட்ட மண்பானை உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும். 29 ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது மகா பரிசுத்தமானது. 30 எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்திக்காக ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலியைச் சாப்பிடக்கூடாது, அது நெருப்பிலே எரிக்கப்படவேண்டும்.