காலப்பகுதி 2: சிதறுதல் முதல் எகிப்திலிருந்து வெளியேறுதல் வரை

பகுதி 1: மொழிகள் குழப்பப்பட்டு மனிதகுலம் சிதறடிக்கப்படுதல்

பாபேல் கோபுரம்

கி.மு. 2234

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆதியாகமம் 11:1–9

1 பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. 2 மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். 3 அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. 4 பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். 5 மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார். 6 அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள். 7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார். 8 அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள். 9 பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல் எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.

தேசங்களின் அட்டவணை

ஆதியாகமம் 10

1 நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.

2 யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். 3 கோமரின் மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். 4 யாவானின் மகன்கள் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். 5 இவர்களால் மத்திய தரைக்கடல் தீவுகள் அவனவன் மொழியினடிப்படையிலும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், சந்ததியின்படியேயும் வெவ்வேறு தேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

6 காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். 7 கூஷூடைய மகன்கள் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள் சேபா, திதான் என்பவர்கள். 8 கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். 9 இவன் யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், “யெகோவா முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்னும் வழக்கச்சொல் உண்டானது. 10 சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு முதன்மையான இடங்கள். 11 அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும், 12 நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம். 13 மிஸ்ராயீம் லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும், 14 பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகிமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான்.

15 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும், 16 எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும், 17 ஈவியர்களையும், அர்கீரியர்களையும், சீனியர்களையும், 18 அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள். 19 கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது. 20 இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் காமுடைய சந்ததியினர்.

21 சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான். 22 சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள். 23 ஆராமுடைய மகன்கள் ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள். 24 அர்பக்சாத் சாலாவைப் பெற்றெடுத்தான்; சாலா ஏபேரைப் பெற்றெடுத்தான். 25 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுக்கு பேலேகு என்று பெயர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். 26 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், 27 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், 28 ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், 29 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றெடுத்தான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய மகன்கள். 30 இவர்களுடைய குடியிருப்பு மேசாதுவங்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிவரைக்கும் இருந்தது. 31 இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் சேமுடைய சந்ததியினர். 32 தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர்.

சேமின் வம்சவரலாறு கி.மு. 2348

ஆதியாகமம் 11:10–26

10 சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான். 11 சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 12 அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான். 13 சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 14 சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான். 15 ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 16 ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான். 17 பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 18 பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான். 19 ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 20 ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான். 21 செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 22 செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான். 23 நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 24 நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான். 25 தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 26 70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.