யூதேயாவின் பாழடைவும் மீட்சியும் முன்னறிவிக்கப்படுகின்றன
யூதேயாவின் பாழடைவையும் மீட்சியையும் குறித்த ஒரு பொதுவான தீர்க்கதரிசனம்.
கி.மு. 714
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 இதோ, யெகோவா தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிமக்களைச் சிதறடிப்பார். 2 அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும். 3 தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது யெகோவா சொன்ன வார்த்தை. 4 தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து மக்களிலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள். 5 தேசம் தன் குடிமக்களின் மூலமாக தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். 6 இதினிமித்தம் சாபம் தேசத்தை அழித்தது, அதின் குடிமக்கள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் சுட்டெரிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள். 7 திராட்சைரசம் துக்கங்கொண்டாடும், திராட்சைச்செடி வதங்கும்; மனமகிழ்ச்சியாயிருந்தவர்கள் எல்லோரும் பெருமூச்சுவிடுவார்கள். 8 மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் நடமாட்டம் ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும். 9 பாடலோடே திராட்சைரசம் குடிக்கமாட்டார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும். 10 வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே நுழையமுடியாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும். 11 திராட்சைரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; அனைத்து சந்தோஷமும் குறைந்து, தேசத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போகும். 12 நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும். 13 ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சைப்பழங்களை அறுத்துத் முடியும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்திற்குள்ளும் இந்த மக்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும். 14 அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; யெகோவாவுடைய மகத்துவத்திற்காக சமுத்திரத்திலிருந்து ஆர்ப்பரிப்பார்கள். 15 ஆகையால் யெகோவாவை, சூரியன் உதிக்கும் திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள். 16 நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ, துரோகிகள் துரோகம் செய்கிறார்கள்; துரோகிகள் மிகுதியாகத் துரோகம்செய்கிறார்கள் என்கிறேன். 17 தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும். 18 அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும். 19 தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும். 20 வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிசையைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருப்பதினால், அது விழுந்துபோகும், இனி எழுந்திருக்காது. 21 அக்காலத்தில் யெகோவா உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார். 22 அவர்கள் கெபியில் ஏகமாகக் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாட்கள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள். 23 அப்பொழுது சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் வெட்கப்படும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக தம்முடைய மகிமை வெளிப்படுத்துவார்.
25:1 யெகோவாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது முந்தின ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். 2 நீர் எங்களுடைய எதிரியின் நகரத்தை மண்மேடும், பாதுகாப்பான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் தலைநகரை நகரமாக இராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர். 3 ஆகையால் பலத்த மக்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான தேசங்களின் நகரம் உமக்குப் பயப்படும். 4 கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கும்போது, நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்திற்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். 5 வறட்சியான இடத்தின் வெப்பம் மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியச்செய்வீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும். 6 சேனைகளின் யெகோவா இந்த மலையிலே சகல மக்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சைரசமும், இறைச்சியும் கொழுப்புமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சைரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். 7 சகல மக்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல தேசங்களையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். 8 அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது மக்களின் அவப்பெயரை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; யெகோவாவே இதைச் சொன்னார். 9 அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை காப்பாற்றுவார்; இவரே யெகோவா, இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய காப்பாற்றுதலால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். 10 யெகோவாவுடைய கரம் இந்த சீயோனின் மலையிலே தங்கும்; வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போகும். 11 நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்களுடைய பெருமையையும், அவர்கள் கைகளின் சதித்திட்டங்களையும் தாழ்த்திவிடுவார். 12 அவர் உன் மதில்களுடைய உயர்ந்த பாதுகாப்பை கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்.