யூதாவின் குடும்பம்
கி.மு. 1718
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
6 யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தான். 7 யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனாக இருந்ததால், யெகோவா அவனை அழித்துப்போட்டார். 8 அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: “நீ உன் அண்ணன் மனைவியைச் சேர்ந்து, அவளுக்கு மைத்துனனுக்குரிய கடமையைச் செய்து, உன் அண்ணனுக்கு சந்ததியை உண்டாக்கு” என்றான். 9 அந்த சந்ததி தன் சந்ததியாக இருக்காதென்று ஓனான் அறிந்ததால், அவன் தன் அண்ணனுடைய மனைவியைச் சேரும்போது, தன் அண்ணனுக்கு சந்ததி உண்டாகாதபடித் தன் விந்தைத் தரையிலே விழவிட்டான். 10 அவன் செய்தது யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். 11 அப்பொழுது யூதா, தன் மகனாகிய சேலாவும் அவனுடைய சகோதரர்கள் இறந்ததுபோல இறப்பான் என்று பயந்து, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: “என் மகனாகிய சேலா பெரியவனாகும்வரைக்கும், நீ உன் தகப்பன் வீட்டில் விதவையாகத் தங்கியிரு” என்று சொன்னான்; அதன்படியே தாமார் போய்த் தன் தகப்பனுடைய வீட்டிலே தங்கியிருந்தாள். 12 அநேகநாட்கள் சென்றபின், சூவாவின் மகளாகிய யூதாவின் மனைவி இறந்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். 13 அப்பொழுது: “உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்” என்று தாமாருக்குத் தெரிவிக்கப்பட்டது. 14 சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டதால், தன் விதவைக்குரிய ஆடைகளை மாற்றி, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். 15 யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்ததால், அவள் ஒரு விலைமாது என்று நினைத்து, 16 அந்த வழியாக அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: “நான் உன்னிடத்தில் சேர வருவாயா” என்றான்; அதற்கு அவள்: “நீர் என்னிடத்தில் சேருவதற்கு, எனக்கு என்ன தருவீர்” என்றாள். 17 அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன்” என்றான். அதற்கு அவள்: “நீர் அதை அனுப்பும்வரைக்கும் ஒரு அடைமானம் கொடுப்பீரா” என்றாள். 18 அப்பொழுது அவன்: “நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும்” என்று கேட்டான். அதற்கு அவள்: “உம்முடைய முத்திரை மோதிரமும், அதனுடைய கயிறும், உம்முடைய கைத்தடியையும் கொடுக்கவேண்டும்” என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, 19 எழுந்துபோய், தன் முக்காட்டை மாற்றி, தன் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள். 20 யூதா அந்த பெண்ணிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டுவர அதுல்லாம் ஊரானாகிய தன் நண்பனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், 21 அந்த இடத்தின் மனிதர்களை நோக்கி: “வழியிலே நீரூற்றுகள் அருகே இருந்த விலைமாது எங்கே” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “இங்கே விலைமாது இல்லை” என்றார்கள். 22 அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: “அவளைக் காணவில்லை, அங்கே விலைமாது இல்லையென்று அந்த இடத்து மனிதர்களும் சொல்லுகிறார்கள்” என்றான். 23 அப்பொழுது யூதா: “இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு வெட்கம் உண்டாகாதபடி, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும்” என்றான். 24 ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்செய்தாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: “அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். 25 அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்திற்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், கயிறும், இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும்” என்று சொல்லி அனுப்பினாள். 26 யூதா அவைகளை அடையாளம்கண்டு: “என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் மகனாகிய சேலாவுக்குக் கொடுக்காமற்போனேனே” என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. 27 அவளுக்குப் பிரசவநேரம் வந்தபோது, அவளுடைய கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. 28 அவள் பிரசவிக்கும்போது, ஒரு குழந்தை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, “இது முதலாவது வெளிப்பட்டது” என்றாள். 29 அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: “நீ மீறிவந்தது என்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும்” என்றாள்; அதனால் அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிடப்பட்டது. 30 பின்பு கையில் சிவப்புநூல் கட்டப்பட்டிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பெயரிடப்பட்டது.
யோசேப்பு சிறையில் அடைக்கப்படுதல்
7 சிலநாட்கள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் மோகம்கொண்டு, “என்னோடு உறவுகொள்” என்றாள். 8 அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்குச் சம்மதிக்காமல், அவளை நோக்கி: “இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் ஒன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரிக்காமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்னுடைய கையில் ஒப்படைத்திருக்கிறார். 9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாக இருப்பதால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்கும்போது, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி” என்றான். 10 அவள் தொடர்ந்து யோசேப்போடு இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே உறவுகொள்ளவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. 11 இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டிற்குள் போனான்; வீட்டு மனிதர்களில் ஒருவரும் வீட்டில் இல்லை. 12 அப்பொழுது அவள் அவனுடைய உடையைப் பற்றிப் பிடித்து, “என்னோடு உறவுகொள் என்றாள். அவனோ தன் உடையை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான். 13 அவன் வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, 14 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: “பாருங்கள், எபிரெய மனிதன் நம்மை பரியாசம்செய்ய, போத்திபார் அவனை நம்மிடத்தில் கொண்டுவந்தார், அவன் என்னோடு உறவுகொள்வதற்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். 15 நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான்” என்று சொன்னாள். 16 அவனுடைய எஜமான் வீட்டிற்கு வரும்வரைக்கும் அவனுடைய உடையைத் தன்னிடத்தில் வைத்திருந்து, 17 அவனை நோக்கி: “நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் தவறான எண்ணத்துடன் என்னிடத்தில் வந்தான். 18 அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்” என்றாள். 19 உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவன் கோபமடைந்தான். 20 யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். 21 யெகோவாவோ யோசேப்போடு இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கச்செய்தார். 22 சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட அனைவரையும் யோசேப்பின் பொறுப்பிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றிற்கும் யோசேப்பு பொறுப்பாயிருந்தான். 23 யெகோவா அவனோடு இருந்ததினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் யெகோவா வாய்க்கச்செய்ததாலும், அவன் வசமாயிருந்த ஒன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.