யோசுவாவின் சுதந்தரம்

கி.மு. 1444

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசுவா 19:49–51

49 தேசத்தை அதின் எல்லைகளின்படி சொந்தமாகப் பங்கிட்டு முடித்தபோது, இஸ்ரவேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவிற்குத் தங்கள் நடுவிலே ஒரு பங்கைக் கொடுத்தார்கள். 50 எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் யெகோவாவுடைய கட்டளையின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான். 51 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் இஸ்ரவேல் மக்களின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த பங்குகள் இவைகளே; இவ்விதமாக அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

அடைக்கலப் பட்டணங்களும் லேவியர்களுக்கான பட்டணங்களும்

யோசுவா 20:1–21:42

1 யெகோவா யோசுவாவை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போய் தங்குவதற்காக; நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 3 அவைகள், உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போய் இருக்கத்தக்க அடைக்கலமாக இருக்கும். 4 அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் வாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பர்களின் காதுகளில் கேட்கும்படி, தன்னுடைய காரியத்தைச் சொல்வான்; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடம் பட்டணத்திற்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடு குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கவேண்டும். 5 பழிவாங்குகிறவன் அவனைப் பின்தொடர்ந்துவந்தால், அவன் அவனை முன்விரோதம் இல்லாமல் அறியாமல் கொன்றதினால், அவனை இவனுடைய கையில் ஒப்புக்கொடுக்காமல் இருக்கவேண்டும். 6 நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்த நாட்களில் இருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கவேண்டும்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டுவந்த தன்னுடைய பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார். 7 அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் உள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள். 8 எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்தில் உள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள். 9 உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும் பழிவாங்குகிறவனுடைய கையினால் சாகாதபடி ஓடிப்போய் ஒதுங்குவதற்கு இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற அந்நியர்களுக்கும் குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.

21:1 அப்பொழுது லேவியர்களின் வம்சப்பிதாக்களின் தலைவர்கள்; கானான்தேசத்தில் இருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடமும், நூனின் மகனாகிய யோசுவாவிடமும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களில் உள்ள தலைவர்களிடமும் வந்து: 2 நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்களுடைய மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள். 3 யெகோவாவுடைய கட்டளையின்படியே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய பங்குகளிலே லேவியர்களுக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள். 4 கோகாத்தியர்களின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியர்களில் ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததிக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று. 5 கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து. 6 கெர்சோன் வம்சத்தின் மக்களுக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானில் இருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று. 7 மெராரி வம்சத்தின் மக்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு. 8 இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் மக்கள், யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியர்களுக்குக் கொடுத்தார்கள். 9 லேவியின் கோத்திரத்தில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியர்களின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் சந்ததியினர்களுக்கு, 10 யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பெயர்பெயராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் பெயர்களாவன: 11 யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். 12 பட்டணத்தின் வயல்களையும் அதினுடைய கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்தார்கள். 13 இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியார்களுக்கு எபிரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், 14 யாத்தீரையும் அதினுடைய வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், 15 ஓலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தெபீரையும் அதினுடைய வெளிநிலங்களையும், 16 ஆயீனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களில் இருக்கிற பட்டணங்கள் ஒன்பது. 17 பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கேபாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், 18 ஆனதோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், அல்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு. 19 ஆசாரியர்களான ஆரோனுடைய சந்ததியார்களின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று. 20 லேவியர்களான கோகாத்தின் குடும்பத்தார்களில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன: 21 கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும், 22 கிப்சாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு. 23 தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதினுடைய வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், 24 ஆயலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு. 25 மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு. 26 கோகாத் வம்சத்தின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பத்து. 27 லேவியர்களின் வம்சங்களிலே கெர்சோன் வம்சத்தார்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு. 28 இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், 29 யர்மூத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு. 30 ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதினுடைய வெளிநிலங்களையும், அப்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், 31 எல்காத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், ரேகோபையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு. 32 நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதினுடைய வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தானையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று. 33 கெர்சோனியர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று. 34 மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், 35 திம்னாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், நகலாலையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு. 36 ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாகசாவையும் அதினுடைய வெளிநிலங்களையும், 37 கெதெமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு. 38 காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதினுடைய வெளிநிலங்களையும், மகனாயீமையும் அதினுடைய வெளிநிலங்களையும், 39 எஸ்போனையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு. 40 இவைகளெல்லாம் லேவியர்களின் மற்ற வம்சங்களாகிய மெராரி வம்சத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள். 41 இஸ்ரவேல் மக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தின் நடுவிலே இருக்கிற லேவியர்களின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களும் உட்பட நாற்பத்தெட்டு. 42 இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அதைச் சுற்றியுள்ள வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.