பகுதி 10: பெரேயாவில் பிற்கால ஊழியம்

அநேகமாக கி.பி. 29-இன் பிரதிஷ்டைப்பண்டிகை முதல் கி.பி. 30-இன் கடைசிப் பயணம் வரை (சுமார் மூன்றரை மாதங்கள்)

இயேசு யோர்தானுக்கு அப்பாலுள்ள பெத்தானியாவுக்கு விலகிச் செல்கிறார்

இயேசு எருசலேமிலிருந்து விலகி, யோர்தானுக்கு அப்பாலுள்ள பெத்தானியாவுக்குச் செல்கிறார்.

பெரேயா

கி.பி. 29 முதல் 30 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோவான் 10:40–42

10:40 யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார். 41 அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கிறது என்றார்கள். 42 அந்த இடத்தில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

இயேசு பெரேயாவில் போதிக்கிறார்; ஏரோதைக் குறித்து எச்சரிக்கப்படுகிறார்

எருசலேமை நோக்கிப் பயணம் செய்யும்போது, இயேசு பெரேயாவில் போதிக்கிறார்; ஏரோது அந்திப்பாவைக் குறித்து எச்சரிக்கப்படுகிறார்.

லூக்கா 13:22–35

13:22 அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார். 23 அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: 24 இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 25 வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். 26 அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். 27 ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 28 நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். 29 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். 30 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.

31 அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள். 32 அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன். 33 இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள். 34 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது. 35 இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

முக்கியமான பரிசேயன் ஒருவனுடன் உணவருந்தும்போது இயேசு மீண்டும் குணமாக்குகிறார்

முக்கியமான பரிசேயன் ஒருவனுடன் உணவருந்தும்போது (காலை உணவின்போது), இயேசு மீண்டும் ஓய்வுநாளில் குணமாக்கி, தமது செயலை நியாயப்படுத்துகிறார். இந்தச் சந்தர்ப்பம் மூன்று உவமைகளுக்கு வழிவகுக்கிறது.

அநேகமாக பெரேயாவில்

லூக்கா 14:1–24

14:1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயர்களில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார். 2 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள். 3 இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். 4 அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு, 5 அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார். 6 அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது. 7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: 8 ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். 9 அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். 10 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும். 11 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 12 அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும். 13 நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக. 14 அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.

15 அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான். 16 அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். 17 விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான். 18 அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாகப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 19 வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 20 வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான். 21 அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான். 22 வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். 23 அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா; 24 அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதர்களில் ஒருவன்கூட என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.