தம்மைக் கைவிடாதிருக்கச் சீடர்களை இயேசு எச்சரித்தல்

யூதாஸ்காரியோத்து சென்றபின், இயேசு தம்மைக் கைவிடாதிருக்கச் சீடர்களை (குறிப்பாகப் பேதுருவை) எச்சரிக்கிறார்; அவர்களோ அனைவரும் தங்கள் விசுவாசத்தை வலியுறுத்துகிறார்கள்.

கி.பி. 30 அல்லது 29

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 26:31–35

26:31 அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

32 ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.

33 பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும், நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான்.

34 இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

35 அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.

மாற்கு 14:27–31

14:27 அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள்.

28 ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு, உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.

29 அதற்கு பேதுரு: உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையமாட்டேன் என்றான்.

30 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

31 அதற்கு அவன்: நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான்; எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.

லூக்கா 22:31–38

22:31 பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். 32 நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார்.

33 அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான்.

34 அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

35 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள். 36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும். 37 அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார். 38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

யோவான் 13:31–38

13:31 அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். 32 தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார். 33 பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.

34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

36 சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.

37 பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.

38 இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அப்பமும் திராட்சரசமும் கொண்ட நினைவுகூருதலை இயேசு ஏற்படுத்துதல்

அப்பம் உண்டு திராட்சரசம் குடிக்கும் நினைவுகூருதலை இயேசு ஏற்படுத்துகிறார்.

எருசலேம். சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய மாலை

மத்தேயு 26:26–29

26:26 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.

27 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. 29 இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 14:22–25

14:22 அவர்கள் சாப்பிடும்போது, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.

23 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள்.

24 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. 25 நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 22:17–20

22:17 அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; 18 தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

19 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.

20 போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார்.