இயேசு எகிப்துக்குக் கொண்டுசெல்லப்படுதலும் பெத்லகேமின் குழந்தைகள் கொல்லப்படுதலும்

குழந்தை இயேசு எகிப்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்; பெத்லகேமிலுள்ள குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்.

அநேகமாக கி.மு. 5

கி.மு. 5

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 2:13–18

2:13 அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். 14 அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், 15 ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

17 “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய

கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது;

ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது,

அவைகள் இல்லாதபடியால்

ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று, 18 எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.

இயேசு எகிப்திலிருந்து நாசரேத்துக்குக் கொண்டுவரப்படுதல் கி.மு. 4

அநேகமாக கி.மு. 4

மத்தேயு 2:19–23

2:19 ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:

20 “நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான். 21 அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். 22 ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய், 23 நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

லூக்கா 2:39

2:39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்களுடைய சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

நாசரேத்தில் இயேசுவின் குழந்தைப்பருவம் கி.மு. 4 முதல் கி.பி. 7 வரை

அநேகமாக கி.மு. 4 முதல் கி.பி. 7 வரை

லூக்கா 2:40

2:40 அந்தப் பிள்ளை வளர்ந்து, பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.

சிறுவன் இயேசு பன்னிரண்டு வயதில் எருசலேமுக்குச் செல்லுதல் கி.பி. 7 அல்லது 8

அநேகமாக கி.பி. 7 அல்லது 8

லூக்கா 2:41–50

2:41 இயேசுவின் பெற்றோர் ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள். 42 இயேசுவிற்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள். 43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாமல் இருந்தது. 44 இயேசு பயணம் செய்கிறவர்களின் கூட்டத்தோடு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ஒருநாள் பயணம் சென்றபின்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இயேசுவைத் தேடினார்கள். 45 அவர் அங்கே இல்லாததினால் அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 46 மூன்று நாட்களுக்குப்பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் உட்கார்ந்திருப்பதையும், அவர்கள் பேசுகிறதைக் கவனிப்பதையும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்பதையும் பார்த்தார்கள். 47 இயேசு பேசுவதைக்கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியையும் அவர் போதகர்களுடைய கேள்விகளுக்கு சொன்ன பதில்களையும்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 48 இயேசுவின் பெற்றோரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடினோம் என்றாள். 49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களை செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார். 50 ஆனால், அவர் சொன்ன வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

நாசரேத்தில் பதினெட்டு ஆண்டுகள் கி.பி. 6 முதல் 26 வரை

அநேகமாக கி.பி. 7 முதல் கி.பி. 26 வரை (அல்லது 6 முதல் 25 வரை)

லூக்கா 2:51–52

2:51 பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள். 52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்ச்சியிலும், தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.