இயேசு கெத்செமனேயில் நீண்ட நேரம் மிகுந்த வேதனையில் துன்பப்படுகிறார்
கெத்செமனேக்குப் புறப்பட்டுச் செல்லும் இயேசு, நீண்ட நேரம் மிகுந்த வேதனையில் துன்பப்படுகிறார்.
கெதரோன் ஓடைக்கும் ஒலிவமலையின் அடிவாரத்திற்கும் இடையில் உள்ள ஒரு திறந்தவெளித் தோட்டத்தில். வெள்ளிக்கிழமை தொடங்கும் பின்னிரவு நேரத்தில்
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 26:30, 36–46
26:30 அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
36 அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
37 பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
38 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி,
39 சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
40 பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா?
41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
42 அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
43 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. 44 அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார்.
45 பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது.
46 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
மாற்கு 14:26, 32–42
14:26 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
32 பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
33 பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.
34 அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
35 சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு:
36 அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார்.
37 பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?
38 நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார்.
39 அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
40 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள்.
41 அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
42 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார்.
லூக்கா 22:39–46
22:39 பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.
40 அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி,
41 அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
42 பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். 43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான். 44 அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது. 45 அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு:
46 நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார்.
யோவான் 18:1
18:1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள்.