எருசலேமும் சிதேக்கியாவும் பிடிக்கப்படுதல்; எரேமியா விடுவிக்கப்படுதல்

கி.மு. 588

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எரேமியா 52:5–6

5 அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் ஆட்சியின் வருடம் வரை நகரம் முற்றுகை போடப்பட்டிருந்தது. 6 நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில் பஞ்சம் நகரத்தில் அதிகரித்து, தேசத்தின் மக்களுக்கு ஆகாரமில்லாமல் போனது.

எரேமியா 39:3

3 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், நெர்கல் சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உள்ளே நுழைந்து, நடுவாசலில் இருந்தார்கள்.

எரேமியா 52:7–11

7 நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ஓடி, ராஜாவின் தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவிலுள்ள வழியாக நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள். 8 ஆனாலும் கல்தேயருடைய படைவீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமமான பூமியில் சிதேக்கியாவை நெருங்கினார்கள்; அப்பொழுது அவனுடைய படைவீரர்கள் எல்லோரும் அவனைவிட்டுச் சிதறிப்போயிருந்தார்கள். 9 அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான். 10 பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்கள் எல்லோரையும் ரிப்லாவில் வெட்டினான். 11 சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளை மாட்டினான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்வரை அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

எரேமியா 39:11–14

11 ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி: 12 நீ அவனை வரவழைத்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாகப் பார்த்து, அவன் உன்னுடன் சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்து என்று கட்டளைகொடுத்தான். 13 அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும், 14 எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்து வரவழைத்து, அவனை வெளியே வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவதற்கு அவனைச் சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் மக்களுக்குள்ளே தங்கியிருந்தான்.

எரேமியா 52:24–27

24 காவற்சேனாதிபதி முதன்மை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான். 25 நகரத்திலோவென்றால் அவன் போர்வீரர்களின் விசாரிப்புக்காரனாகிய தலைவன் ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் பிடிபட்ட ஏழுபேரையும், தேசத்தின் மக்களை வேலையில் அமர்த்துகிற தலைமையான காரியதரிசியையும், தேசத்து மக்களில் பட்டணத்தின் நடுவில் பிடிபட்ட அறுபது பேரையும் கொண்டுபோனான். 26 அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய்விட்டான். 27 அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவில் அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.

எருசலேமிலுள்ள ஆலயம் எரிக்கப்படுதல்

எரேமியா 52:12–14

12 ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியில், பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருடமாயிருந்தது. 13 அவன் யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜாவின் அரண்மனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் நெருப்பினால் எரித்துப்போட்டான். 14 காவற்சேனாதிபதியுடன் இருந்த கல்தேயரின் படைவீரர்கள் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.

எரேமியா 52:17–23

17 யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள். 18 செம்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய எல்லா வெண்கலப் பணிப்பொருட்களையும் எடுத்துக்கொண்டுபோனார்கள். 19 பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும், தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான். 20 சாலொமோன் ராஜா யெகோவாவுடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல காளைச்சிலைகளும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்திற்கு எடையில்லை. 21 அந்தத் தூண்களோவென்றால், ஒவ்வொரு தூணும் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழ நூல் அதைச் சுற்றும்; நான்கு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது. 22 அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழில் சுற்றிலும் பின்னலும் மாதுளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதுளம்பழங்களும் செய்திருந்தது. 23 தொண்ணூற்றாறு மாதுளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதுளம்பழங்கள் நூறு.

எரேமியா 52:15–16

15 மக்களில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற மக்களையும், பாபிலோன் ராஜாவிடம் ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற மக்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான். 16 ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சைத்தோட்டக்காரராகவும் பயிர்செய்யும் மக்களாகவும் விட்டுவைத்தான்.

எரேமியா 39:10

10 காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்தில் வைத்து, அவர்களுக்கு அந்நாளில் திராட்சைத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.

சங்கீதங்கள் 79

ஆசாபின் துதிப் பாடல்.

1 தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து,

உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி,

எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.

2 உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும்,

உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

3 எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்;

அவர்களை அடக்கம்செய்பவருமில்லை.

4 எங்களுடைய அயலாருக்கு நிந்தையும்,

எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம்.

5 எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ?

உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ?

6 உம்மை அறியாத தேசங்கள் மேலும்,

உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும்,

உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்.

7 அவர்கள் யாக்கோபை அழித்து,

அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.

8 முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்;

உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாக எங்களுக்கு நேரிடுவதாக;

நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.

9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து,

உமது பெயருக்காக எங்களை விடுவித்து,

எங்களுடைய பாவங்களை மன்னியும்.

10 அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்?

உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல்

தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.

11 கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்;

கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும்.

12 ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை,

ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும்.

13 அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்;

தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.