யெப்தா இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கிறார்
பெலிஸ்தர்களும் அம்மோனியர்களும் இஸ்ரவேலை ஒடுக்குகிறார்கள்; யெப்தா நியாயாதிபதியாகிறார்.
கி.மு. 1206
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
6 இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள். 7 அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார். 8 அவர்கள் அந்த ஆண்டுமுதல் 18 வருடங்களாக யோர்தான் நதிக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள். 9 அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தான் நதியைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள். 10 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள். 11 யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும், 12 சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா? 13 அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன். 14 நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார். 15 இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமட்டும் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி, 16 அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, யெகோவாவுக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.
17 அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள். 18 அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.
11:1 கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான். 2 கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். 3 அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள். 4 சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள். 5 அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், 6 யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள். 7 அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான். 8 அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள். 9 அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, யெகோவா அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான். 10 கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள்.
11 அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியிலே சொன்னான். 12 பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான். 13 அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாப்போக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். 14 யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது: 15 யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே. 16 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரம்வரை நடந்து, பின்பு காதேசுக்கு வந்து, 17 இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோகிறோம் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து, 18 பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள். 19 அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள். 20 சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான். 21 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி, 22 யாப்போக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள். 23 இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா? 24 உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம். 25 மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா? 26 இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன? 27 நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான். 28 ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான்.
29 அப்பொழுது யெகோவாவுடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான். 30 அப்பொழுது யெப்தா யெகோவாவுக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால், 31 நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது யெகோவாவுக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான். 32 யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; யெகோவா அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். 33 அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள். 34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோது, இதோ, அவன் மகள் தம்புரு வாசித்து நடனமாடி, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளை; அவளைத்தவிர அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை. 35 அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் யெகோவாவை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான். 36 அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் யெகோவாவை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் மக்களாகிய உம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் யெகோவா உமக்குக் கட்டளையிட்டபடியால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள். 37 பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள். 38 அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி, 39 இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாத கன்னியாகவே வாழ்ந்து மரித்து விட்டாள். 40 இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.
12:1 எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி யோர்தான் நதியை கடந்து வடக்கே உள்ள சாபோன் ஊருக்குப் போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள். 2 அதற்கு யெப்தா: எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு விலக்கி காப்பாற்றவில்லை. 3 நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; யெகோவா அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான். 4 பின்பு யெப்தா கீலேயாத் மனிதர்களையெல்லாம் கூட்டி, எப்பிராயீமர்களோடு யுத்தம்செய்தான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியர்களான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர்கள் சொன்னபடியினால், கீலேயாத் மனிதர்கள் அவர்களை முறியடித்தார்கள். 5 கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால், 6 நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்க முடியாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் 42,000 பேர் இறந்தார்கள். 7 யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடங்கள் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.