பகுதி 4: யோசபாத்தின் ஆட்சி

யூதாவின் ராஜ்யம்

யோசபாத் அரியணை ஏறுதலும் நல்லாட்சியும்

கி.மு. 914

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 இராஜாக்கள் 22:41–44

41 ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான். 42 யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாக இருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின்பெயர் அசுபாள். 43 அவன் தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதைவிட்டு விலகாமல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் மேடைகள் இடிக்கப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள். 44 யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடு சமாதானமாக இருந்தான்.

1 இராஜாக்கள் 22:46–47

46 தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாக விட்டிருந்த ஆண் விபசாரக்காரர்களையும் அவனுடைய தேசத்திலிருந்து அற்றுப்போகச்செய்தான். 47 அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.

2 நாளாகமம் 17:2–19

2 அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் படைவீரர்களையும் ஏற்படுத்தினான். 3 யெகோவா யோசபாத்துடன் இருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து, 4 தன் முற்பிதாக்களுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். 5 ஆகையால் யெகோவா அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது. 6 யெகோவாவுடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகம்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவிலிருந்து அகற்றினான். 7 அவன் அரசாண்ட மூன்றாம் வருடத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்செய்ய, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும் நெதனெயேலையும், மிகாயாவையும், 8 இவர்களோடுகூட செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியர்களையும், இவர்களோடுகூட ஆசாரியரான எலிஷாமாவையும், யோராமையும் அனுப்பினான். 9 இவர்கள் யூதாவிலே உபதேசித்து, யெகோவாவுடைய வேதபுத்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் சென்று மக்களுக்குப் போதித்தார்கள். 10 யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்ஜியங்களின் மீது கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததால், யோசபாத்தோடு போர்செய்யாதிருந்தார்கள். 11 பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்திற்கு வெகுமதிகளோடுகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள். 12 இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான். 13 யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளைச் செய்தான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள். 14 தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய எண்ணிக்கையாவது: யூதாவிலே ஆயிரத்திற்கு அதிபதிகளில் அதனா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள். 15 அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதி இருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள். 16 அவனுக்கு உதவியாக யெகோவாவுக்குத் தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்த சிக்ரியின் மகனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள். 17 பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள். 18 அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே வேலைசெய்வதற்கு ஆயுதமணிந்த ஒருலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள். 19 ராஜா யூதா எங்குமுள்ள பாதுகாப்பான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவுக்கு வேலைசெய்தவர்கள்.

யோசபாத்தின் போர்களும் நல்லாட்சியும் கி.மு. 897

2 நாளாகமம் 18:1–2

1 யோசபாத்திற்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் இருந்தது; அவன் ஆகாபோடு சம்பந்தம் கலந்து, 2 சில வருடங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடம் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற மக்களுக்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை இணங்கச் செய்தான்.

2 நாளாகமம் 19:1–7

1 யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவந்தான். 2 அப்பொழுது அனானியின் மகனாகிய யெகூ என்னும் தரிசனம் காண்கிறவன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, யெகோவாவைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதனால் யெகோவாவுடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. 3 ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளைத் தேசத்தைவிட்டு அகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின காரியத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.

4 யோசபாத் எருசலேமிலே குடியிருந்து, திரும்ப பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசம்வரை உள்ள மக்களுக்குள்ளே பிரயாணமாகப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்பச்செய்தான். 5 அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து, 6 அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனிதனுடைய கட்டளையினால் அல்ல, யெகோவாவுடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற காரியத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார். 7 ஆதலால் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருப்பதாக, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் பாரபட்சமும் இல்லை, லஞ்சம் வாங்குதலும் அவரிடத்திலே செல்லாது என்றான்.

சங்கீதங்கள் 82

ஆசாபின் பாடல்.

1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்;

தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து,

துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)

3 ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து,

சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து,

துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்,

இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

6 நீங்கள் தெய்வங்கள் என்றும்,

நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

7 ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து,

உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.

8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்;

நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

2 நாளாகமம் 19:8–11

8 அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியர்களிலும், ஆசாரியர்களிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் யெகோவாவுடைய நியாயங்களைக்குறித்தும் விவாதக் காரியங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து, 9 அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து, செய்யவேண்டியது என்னவென்றால், 10 பலவித இரத்தப்பழியைக்குறித்த காரியங்களும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த பலவித வழக்குச்செய்திகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாமலிருக்கவும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் கடுங்கோபம் வராமலிருக்கவும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் குற்றவாளிகள் ஆகமாட்டீர்கள். 11 இதோ, ஆசாரியனாகிய அமரியா, யெகோவாவுக்குரிய எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் மகனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்குரிய எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியர்களும் உங்களுக்கு முன்பாக அதிகாரிகளாக இருந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் யெகோவா துணை என்றான்.