இயேசுவைப் பற்றி ஏரோதுக்குக் குற்றவுணர்வால் ஏற்படும் அச்சங்கள்
மக்கேருசில் யோவான்ஸ்நானனைத் தலைவெட்டிக் கொன்றதால், திபேரியாவில் இருக்கும் ஏரோது அந்திப்பாவுக்கு இயேசுவைப் பற்றிக் குற்றவுணர்வால் அச்சங்கள் ஏற்படுகின்றன.
கி.பி. 27 முதல் 29 வரை
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 14:1–12
14:1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு, 2 தன் வேலைக்காரர்களைப் பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான்; ஆகவே, இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
3 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான்.
4 ஏனென்றால்: நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். 5 ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
6 அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
7 அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். 8 அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
9 ராஜா துக்கமடைந்தான். ஆனாலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு,
10 ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான். 11 அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
12 அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.
மாற்கு 6:14–29
6:14 இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான்.
15 சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
16 ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான். 17 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,
18 யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். 19 ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது. 20 ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான். 21 ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
22 ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
23 நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான். 24 அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். 25 உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
26 அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
27 உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான். 28 அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
29 அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
லூக்கா 9:7–9
9:7 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட எல்லாவற்றையும் கேள்விப்பட்டதுமட்டுமல்லாமல்; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்றும்,
8 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
9 யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.