தேவன் ஆபிரகாமைச் சோதித்தல்
ஆபிரகாமுக்கு ஏற்பட்ட சோதனை.
கி.மு. 1871
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார்; அவன்: “இதோ அடியேன்” என்றான். 2 அப்பொழுது அவர்: “உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் பிரியமான மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்றார். 3 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரர்களில் இரண்டுபேரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டு, தேவன் தனக்குக் குறித்திருந்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். 4 மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். 5 அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரர்களை நோக்கி: “நீங்கள் கழுதையுடன் இங்கே காத்திருங்கள், நானும் சிறுவனும் அந்த இடத்திற்குப் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்திற்குத் திரும்பி வருவோம்” என்றான். 6 ஆபிரகாம் தகனபலிக்கு விறகுகளை எடுத்து, தன் மகனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; அவர்கள் இருவரும் சேர்ந்துபோனார்கள். 7 அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “என் மகனே, இதோ, இருக்கிறேன்” என்றான்; அப்பொழுது அவன்: “இதோ, நெருப்பும் விறகும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்”. 8 அதற்கு ஆபிரகாம்: “என் மகனே, தேவன் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை அவரே கொடுப்பார்” என்றான்; அப்புறம் இருவரும் சேர்ந்துபோய், 9 தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, தன் மகனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய விறகுகளின்மேல் அவனைப் படுக்கவைத்தான். 10 பின்பு ஆபிரகாம் தன் மகனை வெட்டுவதற்காக தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். 11 அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். 12 அப்பொழுது அவர்: “சிறுவன்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் மகன் என்றும், உனது ஒரே மகன் என்றும் பார்க்காமல் எனக்காக ஒப்புக்கொடுத்ததால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன்” என்றார். 13 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, தனக்குப் பின்புறமாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் மகனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். 14 ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்” என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. 15 யெகோவாவுடைய தூதனானவர் இரண்டாவது முறை வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: 16 “நீ உன் மகன் என்றும், உனது ஒரேமகன் என்றும் பார்க்காமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்ததால்; 17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகச்செய்வேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் எதிரிகளின் வாசல்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்கள் என்றும், 18 நீ என்னுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்ததால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். 19 ஆபிரகாம் தன் வேலைக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஒன்றுசேர்ந்து பெயெர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயெர்செபாவிலே குடியிருந்தான்.
சாராளின் மரணமும் அடக்கமும் கி.மு. 1859
1 சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான். 2 கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத் அர்பாவிலே சாராள் இறந்தாள்; அப்பொழுது ஆபிரகாம், சாராளுக்காகப் புலம்பி அழுதான். 3 பின்பு ஆபிரகாம், இறந்த உடல் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் வம்சத்தாருடன் பேசி: 4 “நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாக இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்த இறந்த உடலை நான் அடக்கம்செய்வதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைநிலத்தைத் தரவேண்டும்” என்றான். 5 அதற்கு ஏத்தின் வம்சத்தார் ஆபிரகாமுக்கு மறுமொழியாக: 6 “எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்களுடைய கல்லறைகளில் முக்கியமானதில் உடலை அடக்கம் செய்யும்; நீர் உடலை அடக்கம்செய்ய எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை” என்றார்கள். 7 அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் வம்சத்தாராகிய அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி, 8 அவர்களோடு பேசி: “என்னிடத்திலிருக்கிற உடலை அடக்கம்செய்ய உங்களுக்குச் சம்மதமானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய மகனாகிய எப்பெரோன், 9 தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா எனப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறை நிலமாகத் தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அதற்குரிய விலைக்கு அவர் அதைத் தரட்டும்” என்றான்.
10 எப்பெரோன் ஏத்தின் வம்சத்தார் மத்தியில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனான எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் வம்சத்தார் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்கு மறுமொழியாக: 11 “அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குக் கொடுக்கிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குக் கொடுக்கிறேன், என் இனத்தாரின் முன்னிலையில் அதை உமக்குக் கொடுக்கிறேன், உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும்” என்றான். 12 அப்பொழுது ஆபிரகாம் அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி, 13 தேசத்து மக்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: “கொடுப்பதற்கு உமக்கு மனதிருந்தால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற உடலை அந்த இடத்தில் அடக்கம் செய்வேன்” என்றான். 14 அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்கு மறுமொழியாக: 15 “என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலத்தின் விலை நானூறு சேக்கல் நிறை வெள்ளி; எனக்கும் உமக்கும் அது சாதாரண காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும்” என்றான். 16 அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் வம்சத்தாரின் முன்னிலையில் எப்பெரோன் சொன்னபடியே, வியாபாரிகளிடத்தில் செல்லும்படியான 400 சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தான். 17 இந்த விதமாக மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்த இடமும், அதிலுள்ள குகையும், நிலத்திலுள்ள அனைத்து மரங்களும், 18 அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் வம்சத்தினர் அனைவரின் முன்னிலையிலும் ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது. 19 அதற்குப்பின்பு ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எப்ரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்செய்தான். 20 இப்படி ஏத்தின் வம்சத்தாரிடமிருந்து வாங்கப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறை நிலமாக உறுதிப்படுத்தப்பட்டது.
ரெபெக்காளின் குடும்பம்
20 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: “மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்; 21 அவர்கள் யாரென்றால், முதற்பிறந்தவனான ஊத்ஸ், அவனுடைய தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல், 22 கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றெடுத்தான்” என்று அறிவித்தான். 23 அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றெடுத்தாள். 24 ரேயுமாள் என்று பெயர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.