பகுதி 4: சாலொமோனின் பிற கட்டிடங்களும் மகிமையும்

தேவன் சாலொமோனுக்குத் தோன்றுகிறார்

லீபனோன் வன மாளிகை கட்டப்படுதல். தேவன் சாலொமோனுக்குத் தோன்றுகிறார்.

கி.மு. 1004

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 இராஜாக்கள் 7:1–12

1 சாலொமோன் தன்னுடைய அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்க 13 வருடங்கள் சென்றது. 2 அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது 900 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது; அதைக் கேதுரு மரத்தாலான உத்திரங்கள் கட்டப்பட்ட கேதுருமரத்தூண்களின் நான்கு வரிசைகளின்மேல் கட்டினான். 3 ஒவ்வொரு வரிசைக்கும் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் கூரை வேயப்பட்டிருந்தது. 4 மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது. 5 எல்லா ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் சதுரமாக இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது. 6 75 அடி நீளமும் 45 அடி அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராக இருந்தது. 7 தான் இருந்து நியாயம் தீர்ப்பதற்கு நியாயாசனம் போடப்பட்டிருக்கும் ஒரு நியாய விசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒரு பக்கம் துவங்கி மறுபக்கம்வரை கேதுரு பலகைகளால் தரையை மூடினான். 8 அவன் தங்கும் அவனுடைய அரண்மனை மண்டபத்திற்குள்ளே அதே மாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் திருமணம் செய்த பார்வோனின் மகளுக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டினான். 9 இவைகளெல்லாம், உள்ளேயும் வெளியேயும், அஸ்திபாரம்முதல் மேல் கூரைவரை, வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவின்படி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்டது. 10 அஸ்திபாரம் 15 அடி கற்களும், 12 அடி கற்களுமான விலையுயர்ந்த பெரிய கற்களாக இருந்தது. 11 அதின்மேல் உயரமாக இருக்கும் அளவின்படி வேலைப்பாடு செய்யப்பட்ட விலையுயர்ந்த கற்களும், கேதுரு மரங்களும் வைக்கப்பட்டிருந்தது. 12 பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை வேலைப்பாடு செய்யப்பட்ட கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; யெகோவாவுடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.

2 நாளாகமம் 7:11–22

11 இந்தவிதமாக சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜ அரண்மனையையும் கட்டி முடித்தான்; யெகோவாவுடைய ஆலயத்திலும், தன் அரண்மனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமானது. 12 யெகோவா இரவிலே சாலொமோனுக்குக் காட்சியளித்து: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த இடத்தை எனக்கு பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன். 13 நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு அல்லது என் மக்களுக்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது, 14 என் நாமம் சூட்டப்பட்ட என் மக்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்செய்து, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்களுடைய பாவத்தை மன்னித்து, அவர்களுடைய தேசத்திற்கு செழிப்பைக் கொடுப்பேன். 15 இந்த இடத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் காதுகள் கவனிக்கிறவைகளுமாக இருக்கும். 16 என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும். 17 உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால், 18 அப்பொழுது இஸ்ரவேலை அரசாளுபவன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடு உடன்படிக்கை செய்தபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கச்செய்வேன். 19 நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்பாக வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்விட்டு, வேறே தெய்வங்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களென்றால், 20 நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்திலிருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளி, அதை அனைத்து மக்களுக்குள்ளும் பழமொழியாகவும் பரியாசச் சொல்லாகவும் வைப்பேன். 21 அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான். 22 அதற்கு அவர்கள்: தங்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்கள் தேவனாகிய யெகோவாவைவிட்டு, வேறே தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை வணங்கி, சேவித்ததால், யெகோவா இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார்.

1 இராஜாக்கள் 9:1–9

1 சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும் ராஜ அரண்மனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு, 2 யெகோவா கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாவது முறையும் அவனுக்குத் தரிசனமானார். 3 யெகோவா அவனை நோக்கி: நீ என்னுடைய சமுகத்தில் செய்த உன்னுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என்னுடைய நாமம் என்றைக்கும் வெளிப்படும்படி, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என்னுடைய கண்களும், இருதயமும் எப்பொழுதும் அங்கே இருக்கும். 4 நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என்னுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளும்படி, என்னுடைய சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாக உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடந்தால், 5 இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் ஆண்மகன் உனக்கு இல்லாமல் போவதில்லை என்று உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன்னுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன். 6 நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்னே வைத்த என்னுடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவைகளைப் பணிந்துகொண்டால், 7 நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடி அழித்துப்போட்டு, என்னுடைய நாமம் வெளிப்பட நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என்னுடைய பார்வையைவிட்டு அகற்றுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் என்கிற பெயர் எல்லா மக்கள் மத்தியிலும் பழமொழியாகவும் நகைப்பாகவும் இருப்பார்கள். 8 அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள். 9 அதற்கு அவர்கள்: தங்கள் முன்னோர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்களுடைய தேவனாகிய யெகோவாவை விட்டு வேறு தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவர்களை வணங்கி தொழுதபடியால், யெகோவா இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார்.

சாலொமோனின் பிரதேசக் கைப்பற்றல்களும் பிற செயல்களும் கி.மு. 1001

1 இராஜாக்கள் 9:10–14

10 சாலொமோன் யெகோவாவுடைய ஆலயமும் ராஜ அரண்மனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற 20 ஆம் வருடம் முடிவிலே, 11 தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாருமரங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள 20 பட்டணங்களைக் கொடுத்தான். 12 ஈராம் தனக்கு சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளின்மேல் அவன் பிரியப்படவில்லை. 13 அதனாலே அவன்: என்னுடைய சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்த நாள்வரை சொல்லி வருகிறபடி காபூல் நாடு என்று பெயரிட்டான். 14 ஈராம் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.

2 நாளாகமம் 8:1–11

1 சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும் தன் அரண்மனையையும் கட்ட இருபது வருடகாலம் சென்றபின்பு, 2 ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களை சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் மக்களைக் குடியேற்றினான்.

3 பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான். 4 அவன் வனாந்திரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே பொருட்களை வைக்கும் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான். 5 சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்பெத்தொரோனையும், கோட்டைச் சுவர்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுமுள்ள பாதுகாப்பான பட்டணங்களாகக் கட்டி, 6 பாலாத்தையும், தனக்கு இருக்கிற, பொருட்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரை வீரர்கள் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு விருப்பமானதையெல்லாம் கட்டினான். 7 இஸ்ரவேல் மக்கள் அழிக்காமலிருந்த இஸ்ரவேல் அல்லாத ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியரில் மீதியான அனைத்து மக்களிலும், 8 அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்களுடைய பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி கட்டாய வேலைக்காரர்களாக ஏற்படுத்தினான். 9 இஸ்ரவேல் மக்களில் ஒருவரையும் சாலொமோன் தன் வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்த மனிதர்களும், அவனுடைய படைத்தளபதிகளும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் தலைவர்களுமாக இருந்தார்கள். 10 ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரர்களின் தலைவர்களாகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் மக்களை ஆண்டார்கள். 11 சாலொமோன்: யெகோவாவுடைய பெட்டி வந்த இடங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரண்மனையிலே என் மனைவி குடியிருக்கக்கூடாது என்று சொல்லி, பார்வோனின் மகளைத் தாவீதின் நகரத்திலிருந்து, தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரச்செய்தான்.

1 இராஜாக்கள் 9:24

24 பார்வோனின் மகள், தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன்னுடைய மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோ பட்டணத்தைக் கட்டினான்.