கிதியோன் இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கிறார்
கி.மு. 1245
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
7 இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினாலே யெகோவாவை நோக்கி முறையிட்டபோது, 8 யெகோவா ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமையாக இருந்த வீட்டிலிருந்து புறப்படவும் செய்து, 9 எகிப்தியர்கள் கைகளிலிருந்தும், உங்களை ஒடுக்கின எல்லோருடைய கைகளிலிருந்தும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து, 10 நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியர்களுடைய தெய்வங்களுக்குப் பயப்படாமல் இருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.
11 அதற்குப்பின்பு யெகோவாவுடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன் கோதுமையை மீதியானியர்களின் கைக்குத் தப்புவிக்க, ஆலைக்கு அருகில் அதைப் போரடித்தான். 12 யெகோவாவுடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே யெகோவா உன்னோடு இருக்கிறார் என்றார். 13 அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, யெகோவா எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? யெகோவா எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது யெகோவா எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். 14 அப்பொழுது யெகோவா அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். 15 அதற்கு அவன்: ஆ என்னுடைய ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே காப்பாற்றுவேன்; இதோ, மனாசேயில் என்னுடைய குடும்பம் மிகவும் எளியது; என்னுடைய தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான். 16 அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார். 17 அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும். 18 நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார். 19 உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான். 20 அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து குழம்பை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். 21 அப்பொழுது யெகோவாவுடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார். 22 அப்பொழுது கிதியோன், அவர் யெகோவாவுடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, யெகோவாவாகிய ஆண்டவரே, நான் யெகோவாவுடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான். 23 அதற்குக் யெகோவா: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். 24 அங்கே கிதியோன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது. 25 அன்று இரவிலே யெகோவா அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு.
26 இந்தக் கற்பாறையின் உச்சியிலே சரியான ஒரு இடத்தில் உன் யெகோவாவுடைய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடவேண்டும் என்றார். 27 அப்பொழுது கிதியோன், தன்னுடைய வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன்னுடைய தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனிதர்களுக்கும் பயந்ததினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான். 28 அந்த ஊர் மனிதர்கள் காலையில் எழுந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டும், அதின் அருகிலியிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டு இருக்கிறதையும் அவர்கள் பார்த்து; 29 ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள். 30 அப்பொழுது ஊர்க்காரர்கள் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள். 31 யோவாஸ் தன்னை எதிர்த்து நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வாதாடுவீர்கள்? நீங்களா அதைக் காப்பாற்றுவீர்கள்? அதற்காக வாதாடுகிறவர்கள் இன்று காலையிலே சாகட்டும்; அது தேவனானால் தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால், அதுவே தனக்காக வாதாடட்டும் என்றான். 32 தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயர் சூட்டப்பட்டது. 33 மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் எல்லோரும் ஒன்றாக கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள். 34 அப்பொழுது யெகோவாவுடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியர்களைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, 35 மனாசே நாடெங்கும் தூதுவர்களை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். 36 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என்னுடைய கையினாலே இஸ்ரவேலை காப்பாற்றவேண்டுமானால், 37 இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான். 38 அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான். 39 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான். 40 அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
7:1 அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் அருகில் முகாமிட்டார்கள்; மீதியானியர்களின் முகாம் அவனுக்கு வடக்கில் மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது. 2 அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: நான் மீதியானியர்களை உன்னோடிருக்கிற மக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்; என்னுடைய கை என்னை காப்பாற்றியது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீண்பெருமைகொள்ள வாய்ப்புண்டாகும். 3 ஆகையால் பயமும் நடுக்கமும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து வேகமாக ஓடிப்போகட்டும் என்று, நீ மக்களின் காதுகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது மக்களில் 22,000 பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; 10,000 பேர் மீதியாக இருந்தார்கள். 4 யெகோவா கிதியோனை நோக்கி: மக்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்; அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; உன்னோடு வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வரட்டும்; உன்னோடு வரக்கூடாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வராதிருக்கவேண்டும் என்றார். 5 அப்படியே அவன் மக்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்தான்; அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்குவதுபோல அதைத் தன்னுடைய நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியாகவும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியாகவும் நிறுத்து என்றார். 6 தங்கள் கைகளால் அள்ளி, தங்கள் வாய்க்கு எடுத்து, நக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 300 பேர்; மற்ற மக்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள். 7 அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த 300 பேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற மக்களெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகவேண்டும் என்றார். 8 அப்பொழுது மக்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலர்கள் எல்லோரையும் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த 300 பேரைமட்டும் வைத்துக்கொண்டான்; மீதியானியர்களின் படை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது. 9 அன்று இராத்திரி யெகோவா அவனை நோக்கி: நீ எழுந்து, அந்த படையினிடத்திற்குப் போ; அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன். 10 போகப் பயந்தால், முதலில் நீயும் உன்னுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையினிடத்திற்குப் போய், 11 அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு படையினிடத்திற்குப் போக, உன்னுடைய கைகள் பெலப்படும் என்றார்; அப்படியே அவனும் அவனுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையின் முன்பகுதியிலே இரவுகாவல் காக்கிறவர்களின் இடம்வரைக்கும் போனார்கள். 12 மீதியானியர்களும், அமலேக்கியர்களும், எல்லாக் கிழக்குப் பகுதி மக்களும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாகப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாக இருந்தது. 13 கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு கனவைச் சொன்னான். அதாவது இதோ ஒரு கனவுகண்டேன்; சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியர்களின் முகாமிற்கு உருண்டுவந்தது, அது கூடாரம்வரை வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான். 14 அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் மகனான கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியர்களையும், இந்த ராணுவம் அனைத்தையும், அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான். 15 கிதியோன் அந்த கனவையும் அதனுடைய விளக்கத்தையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் முகாமிற்கு திரும்பிவந்து: எழுந்திருங்கள், யெகோவா மீதியானியர்களின் படையை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, 16 அந்த முந்நூறுபேரை மூன்று படையாக பிரித்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து, 17 அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் முகாமின் முன்பகுதியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும். 18 நானும் என்னோடு இருக்கும் அனைவரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் முகாமைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிடுவீர்களாக என்று சொன்னான். 19 நடுஇரவின் துவக்கத்தில், இரவுக்காவலர்களை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடு இருந்த 100 பேரும் அந்த இரவின் துவக்கத்திலே முகாமின் முன்பகுதியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள். 20 மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு, 21 முகாமைச் சுற்றிலும் அவரவர் தங்கள் இடத்திலே நின்றார்கள்; அப்பொழுது முகாமில் இருந்தவர்கள் எல்லோரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள். 22 300 பேரும் எக்காளங்களை ஊதும்போது, யெகோவா முகாமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக ஓங்கச்செய்தார்; ராணுவமானது சேரோத்திலுள்ள பெத்சித்தாவரை, தாபாத்திற்கு அருகிலுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரை ஓடிப்போனது. 23 அப்பொழுது நப்தலி மனிதர்களும், ஆசேர் மனிதர்களும், மனாசேயின் எல்லா மனிதர்களுமாகிய இஸ்ரவேலர்கள் கூடிவந்து, மீதியானியர்களைப் பின்தொடர்ந்து போனார்கள். 24 கிதியோன் எப்பிராயீம் மலைகள் எங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியர்களுக்கு எதிராக இறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் நதி வரை வந்து, அவர்களுக்கு முந்தித் துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லச் சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனிதர்கள் எல்லோரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் வரை வந்து, துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொண்டு, 25 மீதியானியர்களின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியர்களை துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடம் கொண்டுவந்தார்கள்.