இரண்டாம் ஆலயத்தைக் குறித்த எசேக்கியேலின் தரிசனம் (continued)

கி.மு. 574

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எசேக்கியேல் 41–42

1 பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாயிலின் அகல அளவு. 2 வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்பக்கத்தில் ஐந்து முழமும் அந்தப்பக்கத்தில் ஐந்து முழமுமாக இருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார். 3 பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் நிலைத்தூண்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார். 4 பின்பு அவர் தேவாலயத்தின் முன்பக்கத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார். 5 பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுசுவரின் அகலத்தை நான்குமுழமாகவும் அளந்தார். 6 இந்தப் பக்கஅறைகள் அருகருகே, வரிசைகளாக முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் இணைந்திருக்காமல், பக்கஅறைகளுக்காகச் சுற்றிலும் அவைகள் இணையும்படி ஆலயத்திற்கு பக்கத்தில் இருந்த ஒட்டுச்சுவரிலே இணைந்திருந்தது. 7 உயர உயரச் சுற்றிலும் பக்கஅறைளுக்கு அகலம் அதிகமாக இருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாக இருந்தது; ஆதலால் இப்படியாக கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாக மேல்நிலைக்கு ஏறும் வழி இருந்தது. 8 மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், பக்கஅறைகளின் அஸ்திபாரங்கள் ஆறுபெரிய முழம்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாக இருந்தது. 9 வெளியே பக்கஅறைகளுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாக இருந்தது; ஆலயத்திற்கு இருக்கும் பக்கஅறைகளின் மாளிகையிலே வெறுமையாக விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது. 10 ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த அகலம் இருபது முழமாக இருந்தது. 11 பக்கஅறைகளினுடைய வாசல்நடைகள், வெறுமையாக விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாக விட்டிருந்த இடங்களின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமாக இருந்தது. 12 மேற்கு திசையிலே தனிப்பட்ட இடத்திற்கு முன்பாக இருந்த மாளிகைவரை அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்துமுழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாக இருந்தது. 13 அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், தனிப்பட்ட இடத்தையும் மாளிகையையும், அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார். 14 ஆலயத்தின் முன்பக்கமும் கிழக்குக்கு எதிரான தனிப்பட்ட இடமும் இருந்த அகலம் நூறு முழமாக இருந்தது. 15 தனிப்பட்ட இடத்தின் பின்பக்கமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் இருந்த நடையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாக இருந்தது. 16 வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைபந்தல்களும் சுற்றிலும் தரை துவங்கி ஜன்னல்கள் வரை பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது. 17 வாசலின் மேலேதுவங்கி ஆலயத்தின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் சுற்றிலும் சுவரின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் எல்லாம் அளவிட்டிருந்தது. 18 கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; ஒரு கேருபீனுக்கும் மற்றொரு கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது. 19 பேரீச்சமரத்திற்கு இந்தபக்கத்தில் மனிதமுகமும், பேரீச்சமரத்திற்கு அந்த பக்கத்தில் சிங்கமுகமும் இருந்தது; இப்படியே ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது. 20 தரை துவங்கி வாசலின் மேல்பக்கம்வரை, தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது. 21 தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்திற்குச் சரியாக இருந்தது. 22 மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாக இருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும், அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார். 23 தேவாலயத்திற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இரண்டு வாசல்களும், 24 வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; ஒரு வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது. 25 சுவர்களில் செதுக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; வெளியே மண்டபத்தின் முன்பாக மர கூரை வைத்திருந்தது. 26 மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், ஆலயத்தின் பக்கஅறைகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது.

42:1 பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிமுற்றத்திலே புறப்படச்செய்து, பிரத்தியேகமான இடத்திற்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார். 2 நூறு முழ நீளத்திற்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அந்த இடத்தின் அகலம் ஐம்பது முழம். 3 உள்முற்றத்தில் இருந்த இருபது முழத்திற்கு எதிராகவும் வெளிமுற்றத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள மரநடை மேடைகள் இருந்தது. 4 உள்பக்கத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது. 5 உயர இருந்த அறைவீடுகள் அகலம் குறைவாக இருந்தது; நடை மரகூரைகள் கீழே இருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவே இருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாக இருந்தது. 6 அவைகள் மூன்று அடுக்குகளாக இருந்தது; முற்றங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைவிட அகலம் குறைவாக இருந்தது. 7 வெளியே அறைவீடுகளுக்கு எதிரே வெளிமுற்றத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம். 8 வெளிமுற்றத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்திற்கு முன்னே நூறு முழமாக இருந்தது. 9 கிழக்கே வெளிமுற்றத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் நுழைகிற நடை அவைகளின் கீழே இருந்தது. 10 கீழ்த்திசையான முற்றத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது. 11 அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாக இருந்தது. 12 தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கிழக்கு திசையில் அவைகளுக்குப் நுழையும் இடத்திலே ஒழுங்கான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசல் இருந்தது. 13 அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாக இருக்கிற வடக்குப் பக்கமான அறைவீடுகளும், தெற்குப் பக்கமான அறைவீடுகளும், பரிசுத்த அறைவீடுகளாக இருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர்கள் அங்கே மகா பரிசுத்தமானதையும் உணவுபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த இடம் பரிசுத்தமாக இருக்கிறது. 14 ஆசாரியர்கள் உள்ளே நுழையும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளிமுற்றத்திற்கு வராததற்கு முன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து, அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிவைப்பார்கள்; அந்த ஆடைகள் பரிசுத்தமானவைகள்; வேறே ஆடைகளை அணிந்துகொண்டு, மக்களின் முற்றத்திலே போவார்கள் என்றார். 15 அவர் உள்வீட்டை அளந்து முடிந்தபின்பு, கிழக்கு திசைக்கு எதிரான வாசல்வழியாக என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச் சுற்றிலும் அளந்தார். 16 கிழக்குதிசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறு கோலாக இருந்தது. 17 வடக்கு திசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாக அளந்தார். 18 தெற்கு திசைப்பக்கத்தை அளவு கோலால் ஐந்நூறு கோலாக அளந்தார். 19 மேற்கு திசைப் பக்கத்திற்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாக அளந்தார். 20 நான்கு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசப்படுத்தும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.