பகுதி 4: திரும்பி வருதல்வரை பாபிலோனில் நடந்த நிகழ்வுகள்
எருசலேமின் அழிவு முதல் சிறையிருப்பிலிருந்து திரும்பிவருதல் வரை பாபிலோனில் நடந்த நிகழ்வுகள்.
எருசலேமின் வீழ்ச்சியைக் குறித்து எசேக்கியேல் கேள்விப்படுதல்
எருசலேமின் அழிவைக் குறித்த செய்தியை அறிந்த எசேக்கியேல், யூதேயா முற்றிலும் பாழாகப்போவதையும், யூதர்களுக்குப் பகைவர்களாக இருக்கும் சுற்றியுள்ள தேசங்களின்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் வரப்போவதையும் முன்னறிவிக்கிறார்.
கி.மு. 587
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
21 எங்களுடைய சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருடம் பத்தாம் மாதம் ஐந்தாம் நாளிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான். 22 தப்பினவன் வருகிறதற்கு முந்தின மாலைவேளையிலே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வரும்வரை என்னுடைய வாயைத் திறந்திருக்கச்செய்தது; என்னுடைய வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுனமாக இருக்கவில்லை. 23 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 24 மனிதகுமாரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாக இருந்து, தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டான்; நாங்கள் அநேகராக இருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாக கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள். 25 ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்துடன் கூடியதைத் தின்று, உங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு நேராக உங்களுடைய கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ? 26 நீங்கள் உங்கள் வாளை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு. 27 நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் வாளால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் குகைகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் மரிப்பார்கள். 28 நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் பாழாய்க்கிடக்கும். 29 அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளுக்காக நான் தேசத்தைப் பாழாக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள், இதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு. 30 மேலும் மனிதகுமாரனே, உன்னுடைய மக்களின் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப்பேசி, யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனுடன் சகோதரனும் சொல்லி, 31 மக்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என்னுடைய மக்களைப்போல் உட்கார்ந்து, உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்களுடைய வாயினாலே அன்பாய் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது. 32 இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாக இருக்கிறாய்; அவர்கள் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமல்போகிறார்கள். 33 இதோ, அது வருகிறது, அது வரும்போது தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: 2 மனிதகுமாரனே, நீ அம்மோனியர்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, 3 அம்மோனியர்களுக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என்னுடைய பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோதும், யூதமக்கள் சிறையிருப்பிற்கு போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால், 4 இதோ, நான் உன்னைக் கிழக்குத்தேசத்தாருக்குச் சொந்தமாக ஒப்புக்கொடுப்பேன், அவர்கள் உன்னில் தங்களுடைய கோட்டைகளைக் கட்டி, உன்னில் தங்களுடைய கூடாரங்களை உண்டாக்குவார்கள்; அவர்கள் உன்னுடைய பழங்களைச் சாப்பிட்டு, உன்னுடைய பாலைக் குடிப்பார்கள். 5 நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையும், அம்மோனியர்களின் தேசத்தை ஆட்டுதொழுவமுமாக்குவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்து கொள்வீர்கள். 6 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக நீ கை தட்டி, உன்னுடைய காலால் தட்டி, வஞ்சம் வைத்து, தீங்கு செய்ததினால், 7 இதோ, உனக்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, உன்னை தேசங்களுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை மக்களுக்குள்ளே நிலையற்றவளாக்கி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை அழிப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய்.
8 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, யூதமக்கள் எல்லா தேசங்களுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால், 9 இதோ, அம்மோனியர்கள் பெயர் தேசங்களுக்குள் இல்லாதபடி நான் அம்மோனியர்களின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சொந்தமாக ஒப்புக்கொடுக்கிறவிதமாக, 10 நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடைசி ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும், பாகால்மெயோனையும், கீரியாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து, 11 மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
12 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: ஏதோம் யூதா மக்களிடத்தில் கோபத்தைத்தணிக்க, பழிவாங்கி, பெரிய குற்றம்செய்ததால், 13 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்திற்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி அதில் மனிதர்களையும், மிருகங்களையும் இல்லாதபடி அழித்து, அதைத் தேமான் துவங்கித் தேதான்வரை வனாந்திரமாக்குவேன்; வாளினால் விழுவார்கள். 14 நான் இஸ்ரவேலாகிய என்னுடைய மக்களின் கையினால் ஏதோமியர்களிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என்னுடைய கோபத்தையும், கடுங்கோபத்தையும் ஏதோமுக்கு காட்டுவார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பெலிஸ்தியர்கள் பழிவாங்கிறவர்களாக இருந்து, பழைய விரோதத்தால் கெடுதல்செய்யவேண்டுமென்று, மனதில் வைத்துப் பழிவாங்கினதால், 16 இதோ, நான் பெலிஸ்தியர்களுக்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி, கிரேத்தியர்களை அழித்து, மத்திய தரைக் கடற்கரையில் மீதியானவர்களை அழித்து, 17 கடுங்கோபமான தண்டனைகளினால் அவர்களைக் கொடூரமாகப் பழிவாங்குவேன்; நான் அவர்களைப் பழிவாங்கும்போது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.