எசேக்கியேல்: எகிப்து பாதாளக்குழியில் இறங்குதல்

எகிப்துக்கு எதிரான ஒரு தீர்க்கதரிசனம்.

கி.மு. 587

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எசேக்கியேல் 32:17–32

17 பின்னும் பன்னிரண்டாம் வருடம் அந்த மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 18 மனிதகுமாரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான மக்களுக்காக புலம்பி, அவர்களையும் பிரபலமான தேசத்தின் மகள்களையும் குழியில் இறங்கினவர்கள் அருகிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு. 19 மற்றவர்களைவிட நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்தில் இரு. 20 அவர்களுடைய வாளால் வெட்டுப்பட்டவர்களின் நடுவிலே விழுவார்கள், வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவளையும் அவளுடைய மக்கள்கூட்டம் யாவையும் பிடித்திழுங்கள். 21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். 22 அங்கே அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே. 23 பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, வாழ்வோரின் தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே. 24 அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனம் இல்லாதவர்களாக பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; வாழ்வோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள். 25 வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான மக்களுக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டப்பட்ட விருத்தசேதனம் இல்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டப்பட்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான். 26 அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய உயிருள்ளோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்களெல்லோரும் விருத்தசேதனம் இல்லாதவர்கள்; வாளால் வெட்ட்டப்பட்டு விழுவார்கள். 27 உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். 28 நீயும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் இருப்பாய். 29 அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; வாளால் வெட்டப்பட்டவர்களிடத்தில் இவர்கள் தங்களுடைய வல்லமையுடன் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் இருக்கிறார்கள். 30 அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; இவர்கள் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தாலும் தங்களுடைய பராக்கிரமத்தைக்குறித்து வெட்கப்பட்டு, வெட்டப்பட்டவர்களிடத்தில் இறங்கி, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் விருத்தசேதனம் இல்லாதவர்களாக இருந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்களுடைய அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். 31 பார்வோன் அவர்களைப் பார்த்து தன்னுடைய ஏராளமான மக்களின்பேரிலும் ஆறுதலடைவான்; வாளால் வெட்டப்பட்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வசேனையும் ஆறுதலடைவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 32 என்னைப்பற்றிய பயத்தை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டாக்குகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான மக்களும் வாளால் வெட்டுபட்டவர்களிடத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

பாபிலோனில் சிறைப்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

எசேக்கியேல் 33:1–20

1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, நீ உன்னுடைய மக்களுடன் பேசி, அவர்களுடன் சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் வாளை வரச்செய்யும்போது தேசத்தின் மக்கள் தங்களுடைய எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு, 3 இவன் தேசத்தின்மேல் வாள் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கும்போது, 4 எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாக இல்லாமல், வாள் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் சுமரும். 5 அவனுடைய எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாக இருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் மேலே சுமரும்; எச்சரிக்கையாக இருக்கிறவனோ தன்னுடைய உயிரைத் தப்புவித்துக்கொள்ளுவான். 6 காவற்காரன் வாள் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் மக்கள் எச்சரிக்கப்படாமலும், வாள் வந்து அவர்களில் யாராவது ஒருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன். 7 மனிதகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயரினாலே அவர்களை எச்சரிப்பாயாக. 8 நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கத்தில் இல்லாமலிருக்கும்படி எச்சரிக்காமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்திலே மரணமடைவான்: ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை உன்னுடைய கையிலே கேட்பேன். 9 துன்மார்க்கன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்; நீயோ உன்னுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாய். 10 மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எங்களுடைய துரோகங்களும் எங்களுடைய பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். 11 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன்னுடைய வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் மக்களே, உங்களுடைய பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் இறக்கவேண்டும் என்கிறார் என்று அவர்களுடன் சொல்லு. 12 மனிதகுமாரனே, நீ உன்னுடைய மக்களை நோக்கி: நீதிமான் துரோகம்செய்கிற நாளிலே அவனுடைய நீதி அவனைக் காப்பாற்றுவதில்லை; துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன்னுடைய அக்கிரமத்தினால் விழுந்து போவதுமில்லை; நீதிமான் பாவம்செய்கிற நாளிலே தன்னுடைய நீதியினால் பிழைப்பதுமில்லை. 13 பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய நீதியை நம்பி, அநியாயம்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன்னுடைய அநியாயத்திலே மரிப்பான். 14 பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும்செய்து, 15 துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். 16 அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு. 17 உன்னுடைய மக்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல. 18 நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயம்செய்தால், அவன் அதினால் மரிப்பான். 19 துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான். 20 நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படி நியாயம் தீர்ப்பேன் என்று சொல் என்றார்.