மக்களைத் தவறாக வழிநடத்திய ஆட்சியாளர்களை எசேக்கியேல் கண்டித்தல் (continued)
மக்களைத் தவறாக வழிநடத்தி அவர்களுடைய அழிவுக்குக் காரணமான யூதர்களின் ஆட்சியாளர்களுக்கு எதிராக தேவனுடைய கோபத்தை எசேக்கியேல் தொடர்ந்து அறிவிக்கிறார். பின்னர் யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவரப்படுவதையும், கிறிஸ்துவின் இராஜ்யத்தில் இறுதியாக நிலவும் மகிழ்ச்சியையும் முன்னறிவிக்கிறார்.
கி.மு. 587
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 2 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; பகைவர்கள் உங்களைக்குறித்து ஆ ஆ, நித்திய மேடுகள் எங்களுடையதானது என்று சொல்லுகிறபடியினால், 3 நீ தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், நீங்கள் அந்நியதேசங்களில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாக இருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப் பேச்சும் மக்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும், 4 இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் யெகோவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட பாலைவன இடங்களுக்கும், வெறுமையாக விடப்பட்ட பட்டணங்களுக்கும் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான அந்நியமக்களுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாகப்போனபடியினால், 5 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என்னுடைய தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படி அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் கர்வமான மனதோடும் தங்களுக்குச் சொந்தமாக நியமித்துக்கொண்ட அந்நியமக்களில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என்னுடைய நெருப்பான எரிச்சலினால் பேசினேன் என்று நிச்சயமாகச் சொல்லுகிறேன். 6 ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்; யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, நீங்கள் அந்நியதேசங்கள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என்னுடைய எரிச்சலினாலும் என்னுடைய கடுங்கோபத்தினாலும் பேசினேன், 7 ஆதலால், யெகோவாகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியதேசங்கள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாகச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன். 8 இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்களுடைய இளங்கிளைகளைவிட்டு, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு உங்களுடைய பழங்களைக் கொடுப்பீர்கள்; அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள். 9 இதோ, நான் உங்களிடமிருந்து, உங்களைக் கண்காணிப்பேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள். 10 நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வீட்டாராகிய மனிதர்கள் யாவரையும் பெருகச்செய்வேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், பாலைவனமான இடங்கள் கட்டப்படும். 11 உங்கள்மேல் மனிதர்களையும் மிருகஜீவன்களையும் பெருகிப்பலுகும்படி பெருகச்செய்வேன்; ஆரம்பநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை நிலைநிறுத்தி, உங்களுடைய முந்தின சிறப்பைவிட உங்களுக்கு அதிக சிறப்பு உண்டாகச்செய்வேன்; அதினால் நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 12 நான் உங்கள்மேல் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் மனிதர்களை நடமாடச்செய்வேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சொந்தமாக இருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை. 13 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: மக்கள் உன்னைப்பார்த்து: நீ மனிதர்களைப் விழுங்குகிற தேசமென்றும், நீ உன்னுடைய மக்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால், 14 நீ இனிமேல் மனிதர்களைப் விழுங்குகிறதுமில்லை, இனிமேல் உன்னுடைய மக்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 நான் இனிமேல் அந்நியமக்கள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கச்செய்வதுமில்லை, நீ மக்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன்னுடைய தேசங்களைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 16 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 17 மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த தேசத்திலே குடியிருக்கும்போது அதைத் தங்களுடைய நடக்கையினாலும் தங்களுடைய செயல்களினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என்னுடைய முகத்திற்கு முன்பாக மாதவிடாயுள்ள பெண்ணின் தீட்டைப்போல் இருந்தது. 18 ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்திற்காக, அதை அவர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளால் தீட்டுப்படுத்தினதிற்காக நான் என்னுடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, 19 அவர்களை அந்நியதேசங்களுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய செயல்களின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன். 20 அவர்கள் அந்நியதேசங்களிடத்தில் போனபோது அந்த மக்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் யெகோவாவுடைய மக்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என்னுடைய பரிசுத்தபெயரைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். 21 ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் தாங்கள் வந்துசேர்ந்த அந்நிய மக்களிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என்னுடைய பரிசுத்த பெயருக்காகவே இரங்குகிறேன். 22 ஆதலால், நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களை, உங்களுக்காக அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த அந்நிய மக்களிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என்னுடைய பரிசுத்த பெயருக்காகவே நான் இப்படிச் செய்கிறேன். 23 அந்நியமக்களின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தம்செய்யும்பொழுது; அப்பொழுது அந்நியமக்கள் தங்களுடைய கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் செய்யப்படும்போது, நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 24 நான் உங்களை அந்நிய மக்களிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்களுடைய சொந்த தேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். 25 அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். 26 உங்களுக்கு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களுடைய உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் உடலிலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். 27 உங்களுடைய உள்ளத்திலே என்னுடைய ஆவியை வைத்து, உங்களை என்னுடைய கட்டளைகளில் நடக்கவும் என்னுடைய நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்செய்வேன். 28 உங்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய தேவனாக இருந்து, 29 உங்களுடைய அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களைக் காப்பாற்றி, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகச்செய்து, 30 நீங்கள் இனிமேல் தேசங்களுக்குள்ளே பஞ்சத்தினால் உண்டாகும் நிந்தையை அடையாதபடி, மரத்தின் பழங்களையும் வயலின் பலன்களையும் பெருகச்செய்வேன். 31 அப்பொழுது நீங்கள் உங்களுடைய பொல்லாத மார்க்கங்களையும் உங்களுடைய தகாத செயல்களையும் நினைத்து, உங்களுடைய அக்கிரமங்களுக்காக உங்களுடைய அருவருப்புகளுக்காக உங்களையே வெறுப்பீர்கள். 32 நான் இப்படிச் செய்வது உங்களுக்காக அல்லவென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு தெரிந்திருப்பதாக; இஸ்ரவேல் மக்களே, உங்களுடைய வழிகளுக்காக வெட்கப்படுங்கள். 33 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேறச்செய்வேன்; பாலைவனமான இடங்களும் கட்டப்படும். 34 பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும். 35 பாழாய்க்கிடந்த இந்த தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலானது என்றும், பாலைவனமும் பாழும் அழிக்கப்பட்டும் இருந்த பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். 36 யெகோவாகிய நான் அழிக்கப்பட்டவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான தேசங்கள் அறிந்துகொள்வார்கள்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். 37 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களுக்காக நான் இதை நன்மைச்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்செய்யவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதர்களைப் பெருகச்செய்வேன். 38 பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்செய்யப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாக இருக்கிறதோ, அப்படியே பாலைவனமாக இருந்த பட்டணங்கள் மனிதர்களின் மந்தையால் நிரம்பி இருக்கும்; அதினால் நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
37:1 யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, யெகோவா என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, 2 என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கச்செய்தார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாகக் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாக இருந்தது. 3 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். 4 அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 5 யெகோவாகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் உயிரை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள். 6 நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் சதையை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்களென்று சொல்லுகிறார் என்று சொல் என்றார். 7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; நான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது ஒரு இரைச்சல் உண்டானது; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்புடன் சேர்ந்துகொண்டது. 8 நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகள்மேல் நரம்புகளும் சதையும் உண்டானது, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் உயிர் இல்லாமலிருந்தது. 9 அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ உயிரை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்; மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, உயிரைநோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உயிரே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலை செய்யப்பட்ட இவர்கள் உயிரடையும்படி இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். 10 எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; அப்பொழுது உயிர் அவர்களுக்குள் நுழைய, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய படையாக நின்றார்கள். 11 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்கள் அனைவருமே; இதோ, அவர்கள் எங்களுடைய எலும்புகள் உலர்ந்துபோனது; எங்களுடைய நம்பிக்கை அற்றுப்போனது; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள். 12 ஆகையால் நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்திற்கு வரவும் செய்வேன். 13 என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படச்செய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 14 என்னுடைய ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்களுடைய தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
15 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 16 மனிதகுமாரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் மக்களுக்கும் உரியது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் உரிய யோசேப்பின் கோலென்று எழுதி, 17 அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இணையச்செய், அவைகள் உன்னுடைய கையில் ஒன்றாகும். 18 இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன்னுடைய மக்கள் உன்னிடத்தில் கேட்டால், 19 நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, எப்பிராயீமுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் உரிய யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடு சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என்னுடைய கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல். 20 சொல்லும்போது, நீ எழுதின கோல்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக உன்னுடைய கையில் இருக்கவேண்டும். 21 நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் இஸ்ரவேல் வீட்டாரை அவர்கள் போயிருக்கும் தேசங்களிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சொந்த தேசத்திலே வரச்செய்து, 22 அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே தேசமாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லோருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு தேசங்களாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிவதுமில்லை. 23 அவர்கள் இனித் தங்களுடைய அசுத்தமான சிலைகளினாலும் தங்களுடைய அருவருப்புகளினாலும் தங்களுடைய எல்லா மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவம்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை விளக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன். 24 என்னுடைய ஊழியனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லோருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என்னுடைய நியாயங்களில் நடந்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்து, 25 நான் என்னுடைய ஊழியனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்களுடைய தகப்பன்மார்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என்னுடைய ஊழியனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாக இருப்பார். 26 நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நிரந்தர உடன்படிக்கையாக இருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை பெருகச்செய்து, அவர்கள் நடுவிலே என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் நிலைநிறுத்துவேன். 27 என்னுடைய இருப்பிடம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன், அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள். 28 அப்படியே என்னுடைய பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்செய்கிற யெகோவா என்று தேசங்கள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.