எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறான்
கி.மு. 896
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யெகோவா எலியாவை சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். 2 எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னைப் பெத்தேல்வரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள். 3 அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். 4 பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; யெகோவா என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். 5 எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். 6 பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள். 7 தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர் தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள். 8 அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இரண்டாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாக மறுகரைக்குப் போனார்கள். 9 அவர்கள் மறுகரைக்குப் போனபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்க வேண்டுகிறேன் என்றான். 10 அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ பார்த்தால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடைக்காது என்றான். 11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். 12 அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாக இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அதற்குப் பிறகு காணாமல், தன் உடையைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். 13 பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, 14 எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய யெகோவா எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரண்டாகப் பிரிந்ததால் எலிசா இக்கரைக்கு வந்தான். 15 எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி: 16 இதோ, உமது அடியாரோடு ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்திரவு கொடும்; ஒருவேளை யெகோவாவுடைய ஆவியானவர் அவரை எடுத்து, மலைகளில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு எலிசா: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான். 17 அவன் சோர்ந்துபோகும்வரை அவர்கள் அவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்ததால், அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாட்கள் அவனைத் தேடியும் காணாமல், 18 எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
19 பின்பு அந்தப் பட்டணத்தின் மனிதர்கள் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்பதற்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள். 20 அப்பொழுது அவன்: ஒரு புதிய பாத்திரத்தை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, 21 அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். 22 எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்தநாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமானது.
23 அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள். 24 அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: யெகோவாவின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது. 25 அவன் அந்த இடத்தைவிட்டுக் கர்மேல் மலைக்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.
யோராம் மோவாபியர்களைத் தோற்கடிக்கிறான் கி.மு. 895
6 அந்தக் காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் எண்ணிக்கை செய்து போய்: 7 மோவாபின் ராஜா எனக்கு விரோதமாகக் கலகம்செய்தான்; மோவாபியர்கள்மேல் போர்செய்ய, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான். 8 எந்த வழியாகப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்திரவழியாகப் போவோம் என்றான். 9 அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாட்கள் சுற்றித்திரிந்தபோது, அவர்களுக்குப் பின்செல்லுகிற இராணுவத்திற்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல்போனது. 10 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் யெகோவா மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான். 11 அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிப்பதற்கு யெகோவாவுடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றிய சாப்பாத்தின் மகனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான். 12 அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்திற்குப் போனார்கள். 13 எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பன் மற்றும் தாயாருடைய தீர்க்கதரிசிகளிடம் போ என்றான்; அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, யெகோவா இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான். 14 அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பார்க்காமலிருந்தால் நான் உம்மைக் கவனிக்கவும் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய யெகோவாவுக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 15 இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது யெகோவாவுடைய கரம் அவன்மேல் இறங்கி, 16 அவன்: யெகோவா உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். 17 நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும், உங்களுடைய ஆடுமாடுகளும் கால்நடைகளும் குடிப்பதற்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று யெகோவா சொல்லுகிறார். 18 இது யெகோவாவின் பார்வைக்கு சாதாரணகாரியம்; மோவாபியர்களையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார். 19 நீங்கள் சகல கோட்டைகளையும், சிறந்த பட்டணங்களையும் தகர்த்து நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான். 20 அடுத்தநாள் காலையில் பலிசெலுத்துகிற நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாக வந்ததால் தேசம் தண்ணீரால் நிரம்பினது. 21 தங்களோடு போர்செய்ய ராஜாக்கள் வருகிறதை மோவாபியர்கள் அனைவரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் பயன்படுத்தக்கூடிய வயதுள்ளவர்களையும், அதற்குமேல் தகுதியானவர்கள் எல்லோரையும் சேர்த்து அழைத்துக்கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள். 22 மோவாபியர்கள் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தத்தைப் போல சிவப்பாகக் காணப்பட்டது. 23 அதனால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்துபோனார்கள்; ஆதலால் மோவாபியர்களே, கொள்ளையிட வாருங்கள் என்று சொன்னார்கள். 24 அவர்கள் இஸ்ரவேலின் முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலர்கள் எழும்பி, மோவாபியர்களைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாகத் தாக்கி, அவர்களுடைய தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியர்களைத் தாக்கி, 25 பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலங்களிலும் கற்களால் நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் அடைத்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கிறபோது; கவண்காரர்கள் அதைச் சுற்றிவளைத்து அதையும் சேதமாக்கினார்கள். 26 போர் மும்முரமாகிறதென்று மோவாபியர்களின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் கடுமையாகத் தாக்குகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே முடியாமல்போனது. 27 அப்பொழுது அவன் தன்னுடைய இடத்தில் ராஜாவாகப்போகிற தன் மூத்த மகனைப் பிடித்து, மதிலின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள்மேல் கடுங்கோபம் ஏற்பட்டதால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.