துன்பம் தேவனிடமிருந்து வருவதாக எலிகூ கூறுதல்

இதுவரை அமைதியாக இருந்த எலிகூ வாதத்தைத் தொடருகிறார். தேவன் ஞானமான நோக்கங்களுக்காகத் துன்பத்தை அனுப்புகிறார் என்றும், அந்த நோக்கங்களை நம்மால் ஆராய்ந்து அறிய முடியாவிட்டாலும் அடங்கியிருப்பதே மனிதனின் கடமை என்றும் அவர் விளக்குகிறார்.

கி.மு. 2130

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோபு 32–33

1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அவனுக்கு அந்த மூன்று மனிதரும் பதில் சொல்லி முடித்தார்கள். 2 அதினால் ராமின் வம்சத்தானாகிய பூசியனாகிய பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபம் வந்தது, யோபு, தேவனைவிடத் தன்னைத்தான் நீதிமானாக்கினதினால், அவன்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது. 3 கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று நண்பர்களுக்கும் கிடைக்காதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று முடிவு செய்ததால், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது. 4 அவர்கள் தன்னைவிட வயது முதிர்ந்தவர்களானதினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடியும்வரை காத்திருந்தான். 5 அந்த மூன்று மனிதரின் வாயிலும் பதில் பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம் வந்தது. 6 ஆதலால் பரகெயேலின் மகன் எலிகூ என்னும் பூசியன் மறுமொழியாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ வயதானவர்கள்; ஆகையால் நான் பயந்து, என் கருத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்த பயந்திருந்தேன். 7 முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன். 8 ஆனாலும் மனிதரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும். 9 பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல. 10 ஆகையால் நான் சொல்வதைக் கேளுங்கள்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்றேன். 11 இதோ, உங்கள் வசனங்கள் முடியும்வரை காத்திருந்தேன்; நீங்கள் சொல்ல முடிந்ததை ஆராய்ந்து தேடும்வரை, உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன். 12 நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரிவித்து, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற மறுமொழி சொல்லுகிறவனில்லை. 13 ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனிதனல்ல, தேவனே அவரை வெற்றி கொள்ளவேண்டும். 14 அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்கு மறுமொழி சொல்வதுமில்லை. 15 அவர்கள் கலங்கி பிறகு மறுமொழி சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு நின்றுபோனது. 16 அவர்கள் பேசமாட்டார்களா என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் மறுமொழி கொடுக்காமலிருந்ததினால், 17 நானும் மறுமொழியாக எனக்குத் தோன்றியவரை சொல்லுவேன்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன். 18 வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது. 19 இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது. 20 நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன். 21 நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக. 22 நான் ஆசை வார்த்தை பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்வார்.

33:1 “யோபே, என் நியாயங்களைக் கேளும்;

என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.

2 இதோ, என் வாயை இப்போது திறந்தேன்;

என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.

3 என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்;

நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும்.

4 தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்;

சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.

5 உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்;

நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும்.

6 இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்;

நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.

7 இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை;

என் கை உம்மேல் பாரமாயிருக்காது.

8 நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும்,

நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:

9 நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன்,

நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை.

10 இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார்,

என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார்.

11 அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து,

என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர்.

12 இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்;

மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார்.

13 அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக்

பதில் சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்?

14 தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை

இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே.

15 ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி,

அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது,

16 அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி,

அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி,

17 மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும்,

மனிதருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.

18 இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும்,

அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.

19 அவன் தன் படுக்கையிலே வாதையினாலும்,

தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான்.

20 அவன் உயிர் அப்பத்தையும்,

அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும்.

21 அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து,

மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது.

22 அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது.

23 ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு,

அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால்,

24 அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க:

நீர் அவனைக் காப்பாற்றும்;

மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.

25 அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்;

தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான்.

26 அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது,

அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி,

அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.

27 அவன் மனிதரை நோக்கிப் பார்த்து:

நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன்,

அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை.

28 என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க,

அவர் அதை காப்பாற்றுவார்

ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.

29 இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும்,

அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும்,

30 அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.

31 யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்;

நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.

32 சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால்,

எனக்குப் பதில் கொடும்;

நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு.

33 ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும்,

மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.