சவுலின் குடும்பத்திற்குத் தாவீது காட்டிய தயவு

சவுலின் குடும்பத்திற்குத் தாவீது காட்டிய தயவு. அம்மோன் மக்களுடன் நடந்த போர்.

கி.மு. 1040

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 சாமுவேல் 9–10

1 யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். 2 அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனான சீபா என்னும் பெயருள்ளவனைத் தாவீதிடம் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான். 3 அப்பொழுது ராஜா: தேவனுக்காக நான் சவுலின் குடும்பத்தார்களுக்குத் தயைசெய்யும்படி அவன் குடும்பத்தார்களில் யாராவது ஒருவன் இன்னும் மீதியாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான் என்றான். 4 அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான். 5 அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான். 6 சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான். 7 தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன்னுடைய தகப்பனான யோனத்தானுக்காக நான் நிச்சயமாக உனக்கு தயைசெய்து, உன்னுடைய தகப்பனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என்னுடைய பந்தியில் எப்பொழுதும் அப்பம் சாப்பிடுவாய் என்றான். 8 அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு, உமது அடியான் யார் என்றான். 9 ராஜா சவுலின் வேலைக்காரனான சீபாவை வரவழைத்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவருடைய குடும்பத்தார்களில் எல்லோருக்கும் இருந்த யாவையும் உன்னுடைய எஜமானுடைய மகனுக்குக் கொடுத்தேன். 10 எனவே, நீ உன்னுடைய மகன்களையும் உன்னுடைய வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, உன்னுடைய எஜமானுடைய மகன் சாப்பிட அப்பம் உண்டாயிருக்க, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன்னுடைய எஜமானுடைய மகன் மேவிபோசேத் எப்பொழுதும் என்னுடைய பந்தியிலே அப்பம் சாப்பிடுவான் என்றான்; சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள். 11 சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானான நான் செய்வேன் என்றான். ராஜாவின் மகன்களில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என்னுடைய பந்தியிலே சாப்பிடுவான் என்று ராஜா சொன்னான். 12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பெயருள்ள சிறுவனான ஒரு மகன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த அனைவரும், மேவிபோசேத்திற்கு வேலைக்காரர்களாக இருந்தார்கள். 13 மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் எப்பொழுதும் சாப்பிடுகிறவனாக இருந்தபடியால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாக இருந்தது.

10:1 அதன்பின்பு அம்மோன் மக்களின் ராஜா இறந்தான்; அவனுடைய மகனான ஆனூன் அவனுடைய இடத்தில் ராஜாவானான். 2 அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனான நாகாஸ் எனக்கு தயவு செய்ததுபோல, அவனுடைய மகனான இவனுக்கு நான் தயவு செய்வேன் என்று சொல்லி, அவனுடைய தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பினான்; தாவீதின் வேலைக்காரர்கள் அம்மோன் மக்களுடைய தேசத்திற்கு வந்தபோது, 3 அம்மோன் மக்களின் பிரபுக்கள் தங்களுடைய ஆண்டவனான ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனிற்கு மரியாதைக் கொடுப்பதாக உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன்னுடைய வேலைக்கரர்களை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள். 4 அப்பொழுது ஆனூன்: தாவீதின் வேலைக்காரர்களைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை வைத்துவிட்டு, மற்றபாதியைக் கத்தரித்து, அவர்களை அனுப்பிவிட்டான். 5 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அந்த மனிதர்கள் மிகவும் வெட்கப்பட்டதால், ராஜா அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்களுடைய தாடி வளரும்வரை நீங்கள் எரிகோ பட்டணத்தில் தங்கி இருந்து, பின்பு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான். 6 அம்மோன் மக்கள் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, தூதுவர்களை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியர்களிலும், சோபாவிலிருக்கிற சீரியர்களிலும் 20,000 காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவிடம் 1,000 பேரையும், தோபிலிருக்கிற 12,000 பேரையும், கூலிப்படையாக வரவழைத்தார்கள். 7 அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பலசாலிகளான எல்லா இராணுவங்களையும் அனுப்பினான். 8 அம்மோன் மக்கள் புறப்பட்டு, நகரத்து வாசலிலே யுத்தம்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்து வந்த சீரியர்களும், தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனிதர்களும், வெளியிலே தனியாக இருந்தார்கள். 9 யோவாபோ இராணுவங்களின் படை தனக்கு நேராக முன்னும் பின்னும் இருக்கிறதைக் காணும்போது, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பகுதியைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியர்களுக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி, 10 மற்ற மக்களை அம்மோன் இராணுவத்திற்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன்னுடைய சகோதரனான அபிசாயினிடம் ஒப்புவித்து: 11 சீரியர்களின் கரம் மேலோங்கினால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் இராணுவத்தினுடைய கரம் மேலோங்கினால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன். 12 தைரியமாக இரு: நம்முடைய மக்களுக்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் நம்முடைய பெலத்தைக் காட்டுவோம்; யெகோவா தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். 13 யோவாபும் அவனோடிருந்த மக்களும் சீரியர்கள்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாகத் தப்பியோடினார்கள். 14 சீரியர்கள் தப்பியோடுகிறதை அம்மோன் இராணுவத்தினர்கள் பார்த்தபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடிப் பட்டணத்திற்குள் நுழைந்தார்கள்: அப்பொழுது யோவாப் அம்மோன் மக்களைவிட்டுத் திரும்பி எருசலேமிற்கு வந்தான். 15 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதை சீரியர்கள் பார்த்தபோது, ஒன்றாகக் கூடினார்கள். 16 ஆதாரேசர் நதிக்கு மறுகரையில் சீரியர்களையும் அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனான சோபாக் அவர்களுக்கு முன்னாலே சென்றான். 17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர்கள் இராணுவங்களை அணிவகுத்து தாவீதுக்கு எதிராக நின்றார்கள்; அவனோடு யுத்தம்செய்கிறபோது, 18 சீரியர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்; தாவீது சீரியர்களில் 700 இரதவீரர்களையும் 40,000 குதிரைவீரர்களையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனான சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான். 19 அப்பொழுது ஆதாரேசருக்கு பணிவிடை செய்கிற எல்லா ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து, அவர்களுக்கு பணிவிடை செய்தார்கள். அதன்பின்பு அம்மோன் மக்களுக்கு உதவிசெய்ய சீரியர்கள் பயப்பட்டார்கள்.

சங்கீதங்கள் 20

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1 ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக;

யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

2 அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி,

சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

3 நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து,

உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா)

4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,

உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்;

உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக.

6 யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார்

என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்;

தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து,

தமது பரிசுத்த வானத்திலிருந்து

அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார்.

7 சிலர் இரதங்களைக்குறித்தும்,

சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்;

நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

8 அவர்கள் முறிந்து விழுந்தார்கள்;

நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.

9 யெகோவாவே, இரட்சியும்;

நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.