தாவீதின் விபசாரம்
கி.மு. 1035
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 அடுத்த வருடம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவ பலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோனியர்களின் தேசத்தை அழித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தோற்கடித்தான்.
1 அடுத்த வருடம் ராஜாக்கள் வழக்கமாக யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடு தன்னுடைய வீரர்களையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் இராணுவத்தை அழிக்கவும், ரப்பாவை முற்றுகையிடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான். 2 ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள். 3 அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். 4 அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள். 5 அந்தப் பெண் கர்ப்பமடைந்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள். 6 அப்பொழுது தாவீது: ஏத்தியனான உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினிடம் ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதிடம் அனுப்பினான். 7 உரியா அவனிடம் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, மக்கள் சுகமாக இருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். 8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது. 9 ஆனாலும் உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், ராஜ அரண்மனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லா வீரர்களோடும் படுத்துக்கொண்டிருந்தான். 10 உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன்னுடைய வீட்டிற்குப் போகாமல் இருக்கிறது என்ன என்று கேட்டான். 11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என்னுடைய ஆண்டவனான யோவாபும் என்னுடைய ஆண்டவனின் வீரர்களும் வெளியிலே முகாமிட்டிருக்கும்போது, நான் சாப்பிடுவதற்கும், குடிக்கிறதற்கும், என்னுடைய மனைவியோடு உறங்கவும், என்னுடைய வீட்டிற்குள் நுழைவேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான். 12 அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயே இரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான். 13 தாவீது அவனைத் தனக்கு முன்பாக சாப்பிட்டுக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனுக்கு போதை உண்டாக்கினான்; ஆனாலும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், மாலையில் தன்னுடைய ஆண்டவனின் வீரர்களோடு தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டான். 14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். 15 அந்தக் கடிதத்திலே கடுமையாக யுத்தம் நடக்கிற இடத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டப்பட்டு சாகும்படி, அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். 16 அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சுற்றி காவல்போட்டிருக்கும்போது பெலசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். 17 பட்டணத்தின் மனிதர்கள் புறப்பட்டுவந்து யோவாபோடு யுத்தம் செய்யும்போது, தாவீதின் வீரர்களான மக்களில் சிலர் விழுந்து இறந்தார்கள்; ஏத்தியனான உரியாவும் இறந்தான். 18 அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க தூதர்களை அனுப்பி, 19 தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லி முடிந்தபோது, 20 ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை அருகில் போய் யுத்தம் செய்யவேண்டியது என்ன? மதிலின் மேல் நின்று அம்பு எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? 21 எருப்பேசேத்தினுடைய மகன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை மதிலின் மேலிருந்து ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அவன்மேல் போட்டதால் அல்லவோ அவன் இறந்தான்; நீங்கள் மதிலிற்கு இவ்வளவு அருகில் போனது என்ன என்று உன்னோடு சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்று சொல் என்றான். 22 அந்த ஆள் போய், நுழைந்து, யோவாப் தன்னிடம் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து, 23 தாவீதைப் பார்த்து; அந்த மனிதர்கள் மேலோங்கி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்வரை அவர்களைத் துரத்தினோம். 24 அப்பொழுது வில்வீரர்கள் மதிலின் மேலிருந்து உம்முடைய வீரர்களின்மேல் அம்பு எய்ததால், ராஜாவின் வீரர்களில் சிலர் இறந்தார்கள்; உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்றான். 25 அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடம் போய், இந்தக் காரியத்தைப்பற்றிக் கலங்கவேண்டாம்; பட்டயம் ஒருமுறை ஒருவனையும், மற்றொருமுறை வேறொருவனையும் தாக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கச்செய்து, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனைத் தைரியப்படுத்து என்றான். 26 தன்னுடைய கணவனான உரியா இறந்தான் என்று அவனுடைய மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன்னுடைய கணவனுக்காக துக்கம் கொண்டாடினாள். 27 துக்கநாள் முடிந்தபின்பு, தாவீது அவளை வரவழைத்து, தன்னுடைய வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் யெகோவாவுக்கு மனவருத்தமாக இருந்தது.
12:1 யெகோவா நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் தரித்திரன். 2 செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிக அதிகமாக இருந்தது. 3 தரித்திரனுக்கோ தான் விலைக்கு வாங்கி வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாமல் இருந்தது; அது அவனோடும் அவனுடைய பிள்ளைகளோடும் இருந்து வளர்ந்து, அவனுடைய அப்பத்தை சாப்பிட்டு, அவனுடைய பாத்திரத்திலே குடித்து, அவனுடைய மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. 4 அந்த செல்வந்தனிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல்செய்ய, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனமில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனிதனுக்குச் சமையல்செய்யச் சொன்னான் என்றான். 5 அப்பொழுது தாவீது: அந்த மனிதன்மேல் மிகவும் கோபமடைந்து, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனிதன் மரணத்திற்கு ஏதுவானவன் என்று யெகோவாவுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். 6 அவன் இரக்கமற்றவனாக இருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். 7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனிதன்; இஸ்ரவேலின் தேவனான யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, 8 உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய பெண்களையும் உன்னுடைய மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கொடுத்தேன்; இது போதாமலிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். 9 யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை செய்தது என்ன? ஏத்தியனான உரியாவை நீ பட்டயத்தால் இறக்கச்செய்து, அவனுடைய மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் இராணுவத்தினர்களின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய். 10 இப்போதும் நீ என்னை அசட்டைசெய்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியால், பட்டயம் எப்பொழுதும் உன்னுடைய வீட்டைவிட்டு நீங்காமலிருக்கும். 11 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். 12 நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான். 13 அப்பொழுது தாவீது நாத்தானிடம்: நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடி, யெகோவா உன்னுடைய பாவத்தை நீங்கச்செய்தார். 14 ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். 15 அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.
இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்று உணர்த்தியபோது இது பாடப்பட்டது.
1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்,
உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி,
என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும்.
3 என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்;
என்னுடைய பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
4 தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து,
உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்;
நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது,
உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன்.
5 இதோ, நான் அநீதியில் உருவானேன்;
என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
6 இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்;
உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்,
அப்பொழுது நான் சுத்தமாவேன்;
என்னைக் கழுவியருளும்;
அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும்,
அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும்.
9 என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து,
என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.
11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும்,
உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
12 உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து,
உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
13 அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்;
பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
14 தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே,
இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்;
அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும்.
15 ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்;
அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
16 பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்;
தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;
தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை.
18 சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்;
எருசலேமின் மதில்களைக் கட்டும்.
19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய
நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்;
அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.