தாவீதின் விபசாரம் (continued)

கி.மு. 1035

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சங்கீதங்கள் 103

தாவீதின் பாடல்.

1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;

என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று.

2 என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்;

அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே.

3 அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து,

உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,

4 உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு,

உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

5 நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்;

கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.

6 ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

7 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.

8 யெகோவா உருக்கமும், இரக்கமும்,

நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை;

என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.

10 அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும்,

நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ,

அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.

12 மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ,

அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.

13 தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல,

யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்;

நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.

15 மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது;

வெளியின் பூவைப்போல் பூக்கிறான்.

16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது;

அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

17 யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்,

அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது.

18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.

19 யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்;

அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது.

20 யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு,

அவருடைய வசனத்தின்படி செய்கிற

பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே,

அவரைத் துதியுங்கள்.

21 யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து,

அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே,

அவரைப் போற்றுங்கள்.

22 யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே,

அவரைப் போற்றுங்கள்;

என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.

2 சாமுவேல் 12:16–23

16 அப்பொழுது யெகோவா அந்தப் பிள்ளைக்காக தேவனிடம் ஜெபம்செய்து, உபவாசித்து, உள்ளே போய், இரவு முழுவதும் தரையிலே கிடந்தான். 17 அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கச்செய்ய, அவனுடைய வீட்டிலுள்ள மூப்பர்கள் எழுந்து, அவன் அருகில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடு அப்பம் சாப்பிடாமல் இருந்தான். 18 ஏழாம் நாளில், பிள்ளை இறந்துபோனது. பிள்ளை இறந்துபோனது என்று தாவீதின் வேலைக்காரர்கள் அவனுக்கு அறிவிக்க பயந்தார்கள்: பிள்ளை உயிரோடிருக்கும்போது, நாம் அவரோடு பேசுகிறபோது, அவர் நம்முடைய சொல்லைக் கேட்கவில்லை; பிள்ளை இறந்துபோனது என்று அவரிடம் எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக மனவேதனை அடைவாரே என்று பேசிக்கொண்டார்கள். 19 தாவீது தன்னுடைய வேலைக்காரர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்கிறதைக் கண்டு, பிள்ளை இறந்துபோனது என்று அறிந்து, தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: பிள்ளை இறந்துபோனதோ என்று கேட்டான்; இறந்துபோனது என்றார்கள். 20 அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தன்னுடைய ஆடைகளை மாற்றி, யெகோவாவுடைய ஆலயத்தில் நுழைந்து, தொழுதுகொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, உணவு கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது சாப்பிட்டான். 21 அப்பொழுது அவன் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதீர்; பிள்ளை இறந்தபின்பு, எழுந்து சாப்பிடுகிறீரே என்றார்கள். 22 அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கும்போது, பிள்ளை பிழைக்கும்படிக் யெகோவா எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். 23 அது இறந்திருக்க, இப்போது நான் ஏன் உபவாசிக்க வேண்டும்? இனி நான் அதைத் திரும்பிவரச்செய்ய முடியுமோ? நான் அதினிடம் போவேனே தவிர, அது என்னிடம் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.

2 சாமுவேல் 12:26–31

26 அதற்குள்ளே யோவாப் அம்மோன் மக்களுடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, தலைநகரத்தைப் பிடித்து, 27 தாவீதிடம் ஆள் அனுப்பி, நான் ரப்பாவின்மேல் யுத்தம்செய்து, தண்ணீர் ஓரமான பட்டணத்தைப் பிடித்துக்கொண்டேன். 28 நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால், என் பெயர் சொல்லாதபடி, நீர் மற்ற மக்களைக் கூட்டிக்கொண்டுவந்து, பட்டணத்தை முற்றுகைபோட்டு, பிடிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னான். 29 அப்படியே தாவீது மக்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப் போய், அதின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்தான். 30 அவர்களுடைய ராஜாவின் தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப்பொருட்களைக் கொண்டுபோனான். 31 பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், இரும்பு ஆயதங்களும், இரும்புக் கோடரிகளும் செய்யும் வேளையில் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளைகளிலும் வேலைசெய்யவைத்தான்; இப்படி அம்மோன் மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா மக்களோடும் எருசலேமிற்குத் திரும்பினான்.

1 நாளாகமம் 20:2–3

2 தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து எடையுள்ள பொன்னும் இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் கொண்டுபோனான். 3 பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், கடப்பாரைகளும், கோடரிகளும் செய்கிற பணியில் பலவந்தமாக உட்படுத்தி; இப்படி அம்மோனிய மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா மக்களோடு எருசலேமிற்குத் திரும்பினான்.