சவுலின் அரசவையிலிருந்து தப்பியோடும் வரையிலான தாவீதின் வாழ்க்கை (continued)

கி.மு. 1063

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 சாமுவேல் 19:1–3

1 தாவீதைக் கொன்றுபோடும்படி, சவுல் தன்னுடைய மகனான யோனத்தானோடும் தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரோடும் பேசினான். 2 சவுலின் மகனான யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என்னுடைய தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகை தேடுகிறார்; இப்போதும் நாளைக்காலை நீர் எச்சரிக்கையாக இருந்து, மறைவான இடத்தில் ஒளிந்துகொண்டிரும். 3 நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என்னுடைய தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என்னுடைய தகப்பனோடு பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.

சங்கீதங்கள் 11

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1 நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்;

பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி,

பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.

2 இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து,

செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

3 அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே,

நீதிமான் என்ன செய்வான்?

4 யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;

யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது;

அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.

5 யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்;

துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

6 துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்;

நெருப்பும், கந்தகமும்,

அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

7 யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்;

அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

1 சாமுவேல் 19:4–17

4 அப்படியே யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலோடு தாவீதுக்காக நலமாகப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாகப் பாவம் செய்யாமல் இருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவம் செய்யவில்லை; அவனுடைய செய்கைகள் உமக்கு அதிக உபயோகமாக இருக்கிறதே. 5 அவன் தன்னுடைய உயிரைத் தன்னுடைய கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினால், யெகோவா இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் காரணமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் ஏன் பாவம் செய்கிறீர் என்றான். 6 சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான். 7 பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலினிடத்தில் கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்புபோலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.

8 மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களை பயங்கரமாக வெட்டியதால் அவர்கள் அவனுக்கு முன்பாக சிதறி ஓடிப்போனார்கள். 9 யெகோவாவால் விடப்பட்ட தீய ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து, தன்னுடைய ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன்னுடைய கையினாலே சுரமண்டலம் வாசித்தான். 10 அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இரவு ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான். 11 தாவீதைக் காவல்செய்து, மறுநாள் காலையில் அவனைக் கொன்று போடும்படி, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இரவில் உம்முடைய ஜீவனை தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்று போடப்படுவீர் என்று சொல்லி, 12 மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான். 13 மீகாளோ ஒரு சிலையை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத் தோலைப் போட்டு, போர்வையினால் மூடி வைத்தாள். 14 தாவீதைக் கொண்டுவரச் சவுல் காவலர்களை அனுப்பினபோது, அவர் வியாதியாக இருக்கிறார் என்றாள். 15 அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் காவலரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படி, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான். 16 காவலர்கள் வந்தபோது, இதோ, சிலை கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள். 17 அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏமாற்றி, என்னுடைய எதிரியைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

சங்கீதங்கள் 59

இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.

1 என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;

என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.

2 அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து,

இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும்.

3 இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்;

யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும்,

பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள்.

4 என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும்,

ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்;

எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.

5 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,

இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்;

வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா)

6 அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.

7 இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்;

அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது,

கேட்கிறவன் யார் என்கிறார்கள்.

8 ஆனாலும் யெகோவாவே,

நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்;

அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.

9 அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்;

தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.

10 என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்;

தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.

11 அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே;

எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து,

அவர்களைத் தாழ்த்திப்போடும்.

12 அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது;

அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால்

தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.

13 தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி,

அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்;

இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா)

14 அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு,

ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.

15 அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல்,

முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.

16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,

காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;

எனக்கு நெருக்கமுண்டான நாளிலே

நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

17 என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்;

தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும்,

கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.